கொரியா சென்ற தமிழ் இளவரசி! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 13 Second

என்ன நமது தமிழை கொரியர்கள் பேசுகிறார்களா என ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். உண்மைதான். கொரியர்கள் தங்கள் கொரிய மொழியில் தமிழ் கலந்தே பேசுகிறார்கள். நாம் தமிழில் பேசுகிற அம்மா, அப்பா, அண்ணி, நீ, நான், வா, போ என கிட்டதட்ட 1400 தமிழ் வார்த்தைகளை கொரியர்கள் பயன்படுத்துகிறார்கள்.சுமார் 2000ம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியில் இருந்து கடல் வழியாக கொரியா சென்ற தமிழ் இளவரசி ஒருவர், கொரிய மன்னனை மணந்து ராணியாகி, காயா என்கிற மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை அந்த மண்ணில் உருவாக்கியிருக்கிறார். கொரிய மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் இளவரசியின் வழி தோன்றல்களாக இருக்கிறார்கள். கொரியர்களால் ராஜ மாதாவாகவும், கடவுளாகவும் பார்க்கப்படும் ராணியின் கல்லறையைச் சுற்றி நினைவு மண்டபம் ஒன்றையும் எழுப்பி, அவரை தங்களின் கடவுளாகவே வழிபட்டு வருகிறார்கள் கொரியர்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து மிக நீண்ட தொலைவில் இருக்கிற கொரியாவுக்கு இளவரசி சென்றாரா? இது எப்படி சாத்தியம் என்றால்? கடல் வழி வாணிபத்தில் பண்டைய தமிழக மன்னர்கள் சிறந்து விளங்கினார்கள் என்றும், தமிழ் மன்னர்கள் நாடு கடந்து சுமேரியா, எகிப்து, கிரேக்கம், ரோம், சீனாவுடன் வாணிபம் செய்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் வாணிபத்தோடு நிறுத்தாமல், கொடுத்தல், கொள்ளல் என்கிற பண்டைய திருமண பந்தங்கள் மூலமாகவும் உறவுமுறைகளை வேற்று நாடுகளோடு ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சீனர் மற்றும் ஜப்பானியர்களை போன்ற சாயல் கொண்டவர்களாக கொரியர்கள் இருந்தாலும், இரு நாட்டுக்கு இடையில் இருக்கும் கொரியர்களது பழக்கவழக்கம் சீன, ஜப்பான் நாட்டினர் பழக்கவழக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்கிற வரலாற்று ஆய்வாளர்கள், கொரியர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் தமிழர்களின் தாக்கமே அதிகமாக இருக்கிறது என்று அடித்துச் சொல்கின்றனர்.

Memorabilia of the three kingdom என்கிற கொரிய வரலாற்றுப் புத்தகத்தில் ஹோ ஹுவாங்-ஓக் (Heo Hwang-Ok) என்கிற இளவரசி குறித்தும் ஹிம் சுரோ (Gim Suro) என்கிற இளவரசன் குறித்தும் தரவுகள் இருக்கிறது. இளவரசி ஹோ ஹுவாங்-ஓக், தன்னுடைய 14 வயதில் ஆயுக்தா என்கிற நாட்டில் இருந்து கிளம்பி வந்து ஹிம் சுரோ என்கிற 16 வயது கொரிய இளவரசனை மணந்து கயா என்கிற மிகப்பெரிய பேரரசை கொரிய நாட்டில் உருவாக்கினார் என்கிறது இந்த வரலாற்று ஆய்வு நூல். இளவரசி ஹோ மற்றும் ஹிம் பெயரை கொண்ட அவர்களது வழித்தோன்றல்கள் மட்டுமே கொரியாவில் 60 லட்சம் பேர் வசிக்கிறார்களாம்.

கொரியாவுக்கு சென்று இளவரசனை மணந்த இளவரசி ஹோ அப்போது பாண்டியர்களின் ஆளுகையில் ஆய்நாடு என்று அழைக்கப்பட்ட இன்றைய கன்னியாகுமரி பகுதியில் இருந்தே கடல் வழியாக கொரியா நாட்டுக்கு சென்று கொரிய இளவரசனை மணந்தார் என்றும், இதற்கு ஆதாரமாக கொரிய மொழியில் 1400 தமிழ் வார்த்தைகள் பயன்பாட்டில் இருக்கிறது எனவும் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இளவரசியின் கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட அவரது மரபணுக்கள் தமிழர்களின் மரபணுக்களோடு ஒத்துப்போவதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. இளவரசியின் கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட பாண்டியர்களின் இரட்டை மீன் சின்னம் பொறித்த நாணயமும் இதற்கு சான்றாக பார்க்கப்படுகிறது.

சீன மொழியின் தாக்கம் கொரியாவில் இருந்தாலும், உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்துக்கள் சீன மொழியில் இல்லை. ஆனால் கொரிய மொழியில் இருக்கிறது. கொரியர்கள் தங்கள் பெற்றோர்களை நம்மைப் போலவே அப்பா, அம்மா என்றே அழைக்கிறர்கள் என்றும், ஹோமர் பி ஹல்பெர்ட் (Homer B. Hulbert) என்கிற அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் 1905ல் கொரிய மொழிக்கும் திராவிட மொழிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது எனக் கண்டுபிடித்து புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். 1984ல் மோர்கன் கிலிப்பிங்கர் (Morgan E. Clippinger) என்பவரும் தமிழ்-கொரிய மொழிக்குமான தொடர்பை ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பின்னாளில் பாண்டிய நாடு என அழைக்கப்பட்ட கொற்கை பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் மீன் லட்சினையை நாணயங்களிலும், கொடிகளிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பம்பை முதல் கன்னியாகுமரி வரை இருந்த இடங்கள் கி.பி. 2ம் நூற்றாண்டில் அயுக்தா நாடு என அழைக்கப்பட்டது. அதுவே இன்று கன்னியாகுமரி என அழைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் அப்போதே கடல் கடந்து வணிகம் செய்தவர்கள். அயுக்தா எனப்பட்ட கன்னியாகுமரியை ஆண்ட பாண்டிய மன்னனின் மகள்தான் இந்த இளவரசி என்கிற நமது வரலாற்று ஆய்வாளர்கள், கொரியா சென்ற நமது தமிழ் இளவரசிக்கு செம்பவழம் என பெயரும் சூட்டியுள்ளனர்.

இளவரசியோடு அவரது ஏவல் பணிகளைச் செய்ய பணிப் பெண்களாகவும், பாதுகாவலர்களாகவும் உடன் சென்ற குழுக்கள், கொரியாவிலே இளவரசியுடன் தங்கி நமது தமிழ் மொழியையும், பழக்க வழக்கத்தையும் பரப்பியிருக்கிறார்கள் என்கிற ஆய்வாளர்கள் அதற்கான ஆதாரங்களை வரிசையாக அடுக்குகிறார்கள்.கொரியர்களின் தேசியப் பாடல் நம்முடைய தாலாட்டுப் பாடல் போல இருக்கிறது. நம்முடைய கும்மிப் பாட்டு போல் அவர்களிடமும் பெண்கள் கூடி அடிக்கும் கும்மி நடனம் இருக்கிறது.

நம்முடைய உடுக்கை போன்ற கருவியை அவர்களும் பயன்படுத்துகிறார்கள். நமது பாரம்பரிய விளையாட்டுகளான சொட்டாங்கல் விளையாட்டை அங்குள்ள கொரியப் பெண்களும் விளையாடுகிறார்கள். நமது மூதாதையர் காதில் அணிந்த பாம்படம் போன்ற காதணிகளை அங்குள்ள பெண்கள் அணிகிறார்கள். நம்மைப் போலவே அவர்களும் அறுவடைத் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். நாம் பயன்படுத்தும் உரல், உலக்கை, திருக்கை போன்றவற்றை கொரிய மக்களும் பயன்படுத்துகிறார்கள்.

நம்மைப் போலவே அவர்களும் கார உணவுகளை விரும்பி உண்கிறார்கள். அரிசி மாவில் செய்த உணவுப் பொருட்களே அவர்களின் பிரதான உணவாகவும் இருக்கிறது என சான்றுகளை அடுத்தடுத்து அடுக்குகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் சொல்வது உண்மையா? கொரியர்கள் தமிழ் வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறார்களா என்பதை அறிய கொரியன் இன்ஸ்டியூட் ஆஃப் சிவிலிசேஷன் எக்ஸ்சேஞ்ச் ஆராய்ச்சியாளர் யாங் கி மூன் என்பவரிடம் பேசியதில்…

கடல்சார் வாணிபம் மூலமாக கொரியாவுடன் நாகரிகப் பரிமாற்றம் நிகழ்ந்தது தொடர்பாக நான் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். அது குறித்த தரவுகள் தமிழில்தான் அதிகமாக உள்ளன. எனவே நான் 2011ல் இருந்தே தமிழை படித்து வருகிறேன். கொரியர்களுக்கு தமிழ் மீதான ஆர்வம் ஒரு தளிர் போல வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால் தமிழை பேசுவது சுலபமில்லை.பாடப்புத்தகத்தில் கற்கும் தமிழ் மொழிக்கும் அன்றாட உரையாடலில் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகளுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கிறது. எனவே தமிழை பேசக் கற்றுக்கொள்வது சவாலான ஒன்றாகவே இருக்கிறது. இரண்டு மொழிகளுமே உயிரெழுத்தையும், மெய் எழுத்தையும் இணைத்து பல அசைவுகளை உருவாக்குகின்றன. இரண்டு மொழிகளுக்கும் இடையே வேறு பல தொடரியல் ஒற்றுமைகளும் இருக்கின்றது என்றவரிடம், கொரிய மொழியில் தமிழ் வார்த்தைகள் கலந்திருப்பது குறித்து கேட்டபோது…

கடல் வழியாக நிகழ்ந்த பண்டைய வாணிபப் பரிமாற்றங்கள் மூலமாகவே கொரியர்களுக்கும் தமிழர்களுக்கும் மொழிப் பரிமாற்றமும், நாகரிகப் பரிமாற்றமும் நிகழ்ந்திருக்கும் என நான் நினைக்கிறேன் என்கிற யாங் கி மூனிடம், இளவரசி ஹோ ஹுவாங்-ஓக் தமிழகத்திலிருந்து வந்தவர்தானா என்ற நமது கேள்விக்கு, இளவரசியின் வருகை கவர்ச்சிகரமான ஒரு பேசு பொருளாகவே தொடர்ந்து இருக்கிறது. ஆனால் இதுபற்றி என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவர் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என்பது என்னுடைய எண்ணமாக இருந்தாலும், இதுகுறித்து இன்னும் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை என்கிறார்.

தமிழ் மீதிருந்த ஆர்வத்தில் இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறேன். சென்னை மாமல்லபுரம் கடற்கரை கோயிலையும் அங்குள்ள சிற்பங்களையும், காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களையும் கண்டு ரசித்தேன். கட்டிடக்கலை மீது பண்டைய தமிழர்களுக்கு இருந்த ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது என்றவாறு விடைபெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இளநரையை போக்கும் எளிய வழிகள்!! (மருத்துவம்)
Next post உங்கள் உடல் பருமன் குறையணுமா? (மகளிர் பக்கம்)