அலர்ஜியை அறிவோம். . ! டீடெய்ல் ரிப்போர்ட்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 0 Second

அலர்ஜியைப் பொறுத்தவரையில், ‘பூமியில் உள்ள எந்த ஒரு பொருளும் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஆகலாம்’ என்பதுதான் பொதுவான கருத்து. என்றாலும், அலர்ஜிக்கு சிகிச்சை பெற வருவோரின் புள்ளிவிவரப்படி சில பொருட்கள் மட்டும் ‘அலர்ஜி ஆகும் பொருட்கள்’ என முத்திரை குத்தப்பட்டுள்ளன. அவற்றை மட்டும் இப்போது
பார்ப்போம்.

1. வீட்டுத் தூசி

தைப்பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை போன்ற திருவிழாக் காலங்களில் அடுக்குத் தும்மல், ஆஸ்துமா போன்ற அலர்ஜி நோய்கள் அதிகரிப்பதைக் கவனித்திருப்பீர்கள். அந்த நேரத்தில், வீட்டுப்பொருட்களை ஒதுக்கிச் சுத்தம்செய்வதாலும் வீட்டுக்கு வெள்ளை அடித்து, வர்ணம் பூசுவதாலும் வீட்டுத்தூசிகள், சுண்ணாம்பு, பெயின்ட் போன்றவை மூச்சுக்காற்றில் கலந்து அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.

வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தட்டுமுட்டுச் சாமான்கள், சோஃபா, படுக்கை, போர்வை, தலையணை, தலையணை உறை, தரைவிரிப்புகள், சுவர்களில் தொங்கவிடப்படும் படங்கள், கம்பளிகள் போன்றவற்றில் சேரும் தூசிகள் அளவில் மிகமிகச் சிறியவை; கண்ணுக்குத் தெரியாதவை. இவற்றில் ‘டஸ்ட் மைட்’ (Dust Mite) எனும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணியப் பூச்சிகள் வாழ்கின்றன. இவற்றின் கழிவில் ‘புரேட்டியேஸ்’ எனும் புரதம் இருக்கிறது. இது காற்றில் கலந்து, மூக்கில் தொடங்கி மூச்சுக்குழல் வரையிலும், நம் சருமத்தில் தொற்றி நெற்றியில் தொடங்கி அடிப்பாதம் வரையிலும் பல அலர்ஜிகளை ஏற்படுத்துகிறது.

2. காற்றில் கலக்கும் புகை

காற்றில் கலக்கும் எந்த ஒரு புகையும் அலர்ஜிக்கு மேடை கட்டும். குறிப்பாக, வாகனப் புகை, தொழிற்சாலை, ஜெனரேட்டர், சிகரெட், கரி அடுப்பு, பட்டாசு, சாம்பிராணி, கற்பூரம் மற்றும் ஊதுவத்தி, கொசுவத்தி, வாசனைத் திரவியங்கள், மரத்தூள் போன்றவை ஆஸ்துமா உள்ளிட்ட பல அலர்ஜி நோய்களுக்கு வழிவகுக்கும்.

3. வளர்ப்புப் பிராணிகள்

நாய், பூனை, கோழி, புறா, கிளி, முயல், குதிரை போன்ற வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் மற்றும் அவற்றின் கழிவுகள் காற்றில் கலந்து வந்து நாசி ஒவ்வாமையை ஏற்படுத்தும். பறவைகளின் இறகுகள், எச்சங்கள், ரோமம், குடல் புழுக்கள் போன்றவையும் அலர்ஜிக்குக் காரணமாகின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை மிகவும் அதிகமாக நேசிப்பார்கள். வளர்ப்புப் பிராணிகளால் அலர்ஜி ஏற்படாமல் இருக்க, அவர்கள் அலர்ஜிக்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்கிறார்கள். ஆனால், நம் மக்களோ செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் காட்டும் ஆர்வத்தை, அவை தரும் அலர்ஜி நோய்களுக்குத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதில் அவ்வளவாக காட்டுவது இல்லை. இதனால்தான், நம் நாட்டில் வளர்ப்புப் பிராணிகளால் ஏற்படும் அலர்ஜி நோய்கள் அதிகமாக இருக்கின்றன.

கரப்பான் மற்றும் பாச்சைப் பூச்சிகளின் கழிவுகள் அலர்ஜி ஆகும் பொருட்களில் முக்கியமானவை. அடுக்குமாடியில் வாழும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களில் வசிப்போருக்கு அலர்ஜி நோய்கள் ஏற்படுவதற்கு கரப்பான் பூச்சிகள்தான் முக்கியக் காரணம். வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை சுகாதாரமுறைப்படி மூடிப் பாதுகாப்பதன் மூலம், கரப்பான்பூச்சிகள் வளர்வதைத் தடுக்க முடியும். மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டியதும் முக்கியம்.

4. பூக்களின் மகரந்தங்கள் பலவிதமான பூச்

செடிகளின் மகரந்தங்கள் நல்ல வாசம் கொடுக்கும். ஆனால், அவைதான் பலருக்கும் சுவாசம் கெடுக்கும். முதன்முதலாக அலர்ஜியைக் கொடுக்கும் ஒரு பொருளைக் கண்டுபிடித்தார்கள் என்றால் அது மகரந்தம்தான். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம், காற்றில் கலக்கப்படும் மகரந்தங்களால் மட்டுமே அலர்ஜி நோய்கள் ஏற்படும். தன் மகரந்தச்சேர்க்கை மற்றும் தண்ணீர் மூலமும் பூச்சிகள் மூலமும் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிற தாவரங்களின் மகரந்தங்களால் அலர்ஜி ஏற்படுவது இல்லை.

அனைத்துத் தாவரங்களின் மகரந்தங்களும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது என்றாலும், இவர்கள் பூக்களின் வாசனையை நுகராமல் இருப்பது நல்லது. இளங்காலை நேரத்திலும், அந்திப்பொழுதிலும்தான் மகரந்தங்கள் காற்றில் கலக்கும் என்பதால், இவர்கள் அந்த நேரங்களில் பூந்தோட்டங்களுக்கும் பூங்காக்களுக்கும் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

5. காலனாக மாறும் காளான்கள்

உயிருக்கு உலைவைக்கிற ஆஸ்துமா அனுபவங்களில் காலனாக மாறிய காளான்களின் பங்கு அதிகம். முக்கியமாக, ஆஸ்பர்ஜிலஸ், கிளடோஸ்போரியா, அல்டர்நேரியா போன்றவை பலதரப்பட்ட அலர்ஜிகளைக் கொடுக்கின்றன. இவை ‘கருவணுக்கள்’ என்று சொல்லக்கூடிய ‘ஸ்போர்கள்’ மூலம் இனவிருத்தி செய்கின்றன. இந்தக் கருவணுக்கள்தான் அலர்ஜி நோய்களுக்குக் காரணகர்த்தாக்கள்.

ஈரமான சூழலில்தான் காளான்கள் வளரும். எனவே, ஈரப்பதம் உள்ள காலணிகள், தரைவிரிப்புகள், வீட்டின் அடித்தளங்கள், வீட்டுமாடிகள், குட்டிச்சுவர்கள், வீட்டுத்தோட்டங்கள், மண் தொட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ரப்பர் மூடிகள், ரொட்டி போன்ற பேக்கரி பண்டங்கள், அழுகிய இலைதழைகள், விலங்கினச் சாணங்கள் போன்றவற்றில் இவை வசிக்கின்றன. அலர்ஜி உள்ளவர்கள் இவற்றைக் கவனத்தில்கொள்வது நல்லது.உணவால் ஏற்படும் அலர்ஜி பலரின் உயிர்களேயே மாய்த்திருக்கிறது என்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், இது மிகைப்படுத்தப்படாத உண்மை.

அலர்ஜி டேட்டா!

வீட்டுத் தூசியில் பூச்சிகள் இருப்பதை 1964-ம் ஆண்டில் கண்டுபிடித்தவர்கள் டச்சுக்காரர்கள். `ஒரு கிராம் வீட்டுத் தூசியில், 500-க்கும் மேற்பட்ட வீட்டுத்தூசிப் பூச்சிகள் இருக்கின்றன’ என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.ஒரு படுக்கையில் சுமார் இரண்டு லட்சம் பூச்சிகள் இருக்கும்.ஒரு பூச்சி அதிகபட்சமாக, 0.3 மில்லி மீட்டர் நீளம்தான் இருக்கும்.ஆண் பூச்சிகள் அதிபட்சமாக மூன்று வாரங்கள் வரையிலும் பெண் பூச்சிகள் 90 நாட்கள் வரையிலும் வாழும்.நம் சருமத்திலிருந்து உதிரும் செல்கள்தான் இவற்றுக்கு உணவு.

பெண் பூச்சிகள் தங்கள் கடைசி ஐந்து வார வாழ்க்கையில் சுமார் 100 முட்டைகளை இடும்.இந்தப் பூச்சி ஒவ்வொன்றும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் 2,000 முறை கழிவுகளை வெளியேற்றுகிறது. இவை அத்தனையும் அலர்ஜி நோய்களுக்கு வழிசெய்கின்றன.

வீட்டுத்தூசிப் பூச்சியைத் தடுக்க என்ன வழி?

படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை வாரம் ஒருமுறை வெந்நீரில் ஊறவைத்து, அலசி சுத்தம் செய்யலாம்.டானிக் அமிலம் கலந்த வேதிப்பொருட்களைக் கொண்டு இந்தத் தூசிப் பூச்சிகளை அழிக்கலாம்.இந்தப் பூச்சிகளை உறிஞ்சி எடுக்க சில சிறப்பு வாக்வம் கிளீனர்கள் உள்ளன. ஹெப்பா ஃபில்ட்டர் பொருத்தப்பட்ட வாக்வம் கிளீனர்கள் இவற்றை உறிஞ்சி எடுத்துவிடும்.

வீட்டுத்தூசிப் பூச்சிகள் மிதமான வெப்பநிலையில் மட்டுமே வாழும், வளரும். இவற்றுக்கு ஏர்கண்டிஷன் பிடிக்காது. எனவே, வீட்டில் ஏ.சி போட்டுக்கொண்டால், இந்தப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.இந்தப் பூச்சிகள் நம் உடலோடு ஒட்டிக்கொள்ள முடியாதபடி சில சிறப்புப் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நாளடைவில் வீட்டுத்தூசிப் பூச்சிகள் கணிசமாகக் குறைந்துவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கவுன்சலிங் ரூம் மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)
Next post வெந்தயக்கீரை அடை!! (மகளிர் பக்கம்)