உடல் வெப்பத்தை தணிக்கும் டெரக்கோட்டா நகைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 28 Second

‘கா தோரம் லோலாக்கு கதை சொல்லுதம்மா…’ என பெண்களை பார்த்து பாடத் தோன்றும் அளவுக்கு பெண்கள் அதிகம் விரும்புவது வண்ண வண்ண ஜிமிக்கி கம்மலும், கண்கவர் புடவைகளும்தான். புதிது புதிதாக பல்வேறு உலோகங்கள் கொண்டு செய்யப்படும் பலவிதமான, அதிலும் நமது ஆடைகளுக்கு ஏற்ப ஜிமிக்கி கம்மல், அதற்கு ஈடாக கழுத்தணிகள் என பல உண்டு. தற்போது உள்ள பெண்கள் தங்க நகைகளை விட மண், தேங்காய் ஓடுகள் மற்றும் இதர உலோகங்கள் மூலம் செய்யப்படும் ஃபேஷன் அணிகலன்களைதான் அதிகம் விரும்புகிறார்
கள். அதிலும் குறிப்பாக களிமண்ணால் செய்யப்பட்ட நகைகள் இவர்களின் ஃபேவரைட் சாய்ஸாக உள்ளது.

‘‘ஒவ்வொரு அணிகலன்களுக்கும் ஒவ்வொரு செய்முறை உண்டு. அதன் தரம் மற்றும் அதனை உருவாக்கும் முறை என வேறுபடும். எனக்காக செய்ய போய் இப்போ இதையே முழு நேர பிசினஸா செய்துட்டு வரேன்’’ என தன் செயல்முறைகளையும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பற்றியும் கூறுகிறார், திருநெல்வேலியை சேர்ந்த சாரு பிரபாஸ்ரீ.

‘‘எனக்கு ஃபேஷன் டெக்னாலஜி படிக்கணும்னு தான் ஆசை. ஆனால் என் குடும்பச் சூழல் காரணமாக பொறியியலில் சேர்ந்தேன். படிக்கும் போதே கேம்பஸில் வேலை கிடைச்சது. அந்த நேரம் கொரோனா அதிகமா இருந்த காரணத்தால், வீட்டில் வேலைக்கு போக வேண்டாம்னு அப்பா சொல்லிட்டார்.

வீட்டில் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்பதால், என்னால் அதை தவிர்க்க முடியாமல் போனது. வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்க பிடிக்கல. எனக்கு சின்ன வயசிலேயே ஆர்ட்ஸ் துறையில் ஆர்வம் அதிகம். அதனால் +2 தேர்வு முடிந்த பிறகு விடுமுறை நாட்களில் டெரக்கோட்டா ஜூவல்லரி செய்ய கத்துக்கிட்டேன். ஆனால் அது நான் நினைச்ச மாதிரி வரலை. அதன் பிறகு கல்லூரி படிப்பு என்று இருந்ததால் தொடர முடியல. இப்பதான் ஃப்ரீயா இருக்கோமே… அதையே செய்து பார்க்கலாம்னு செய்ய ஆரம்பிச்சேன்.

அப்பவும் நான் எதிர்பார்த்த படி சரியாக செய்ய முடியல. யூடியூப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமா எந்த மாதிரி செய்யணும், எப்படி அந்த நகைகளை செய்த பிறகு சூடாக்கணும் என அதன் முழு செயல்முறையும் கற்றுக் கொண்டேன். இப்போ 2 வருஷம் ஆகப்போகுது, இதுவரைக்கும் 2000க்கு மேலான டெரக்கோட்டா நகைகளை செய்திருக்கேன்’’ என்றவர் களிமண் நகைகள் மீது ஆர்வம் ஏற்பட்ட காரணம் குறித்து விளக்கினார்.

‘‘எனக்கு டெரக்கோட்டா நகைகள் என்றால் பிடிக்கும். எனக்கான நகையினை நானே வடிவமைத்து அணிவதற்காகத்தான் நான் கற்றுக்ெகாண்டேன். என்னுடைய உடைக்கான மேட்சிங் நகைகளை நான் அணிந்த போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கும் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு செய்து கொடுக்க ஆரம்பித்து அதன் மூலமாக பல ஆர்டர்கள் வந்தது. அப்படித்தான் நான் இந்த துறையில் எனக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொண்டேன். என்னுடைய அம்மா பள்ளி ஆசிரியை. அவங்க ஸ்கூல் பக்கத்தில் ஒரு ஆறு இருக்கும். அங்கிருந்து களிமண்களை எடுத்து வந்து தான் நான் முதன் முதலில் நகைகளை செய்ய கற்றுக் கொண்டேன்.

இப்போது, இதற்கான களிமண், தனியாகவே கிடைக்கிறது. தற்போது அதைக் கொண்டு தான் நான் நகைகளை தயாரிக்கிறேன். நாம் ஒரு உடை வாங்கும் போது, நாம நினைக்கும் டிசைன், கலர் மற்றும் விலையில் கிடைக்காது. சில சமயம் நாம் நினைச்ச உடைகள் ஆன்லைனில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதுவே நாமே வடிவமைக்கும் போது நமக்கு பிடிச்ச நிறங்களில் டிசைன் செய்து கொள்ளலாம். அது போல தான் ஜூவல்லரிகளும். நாம அணியும் ட்ரெசுக்கு ஏற்ப ரெடி பண்ணிக்கலாம். அதுவும், களிமண்ணை பயன்படுத்தி செய்யும் எந்த ஒரு பொருளும் நமக்கு பிடிச்ச டிசைன், நிறங்களில் அழகாக கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.

களிமண் நம்ம உடம்பில் இருக்கும் வெப்பத்தையும் வேர்வையையும் உள்ளிழுக்கும் தன்மை கொண்டது. மார்க்கெட்டில் நிறைய மக்கள் இந்த டெரக்கோட்டா எனப்படும் களிமண்ணால் ஆன ஜூவல்லரி செய்யுறாங்க. அதில் ஒரு சிலர் சைனா க்ளே பயன்படுத்தி இதுபோல நகைகளை செய்வாங்க. அது டெரக்கோட்டா நகைகளில் சேராது. சைனா க்ளே வகையினை ஏர் டிரை க்ளேன்னு சொல்லுவாங்க. இதனை வேகவைக்க வேண்டும் என்றில்லை.

காற்றிலேயே காய்ந்திடும். சரும அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், சாதாரண களிமண்ணால் வடிவமைக்கப்படும் நகைகளை நாம் வேகவைத்து அதன் பிறகு தான் அதற்கு வண்ணம் தீட்ட முடியும். மேலும் இவை ஈகோ- ப்ரண்ட்லி என்பதால், சுலபமா மறுசுழற்சி செய்யலாம். ஒருவேளை நாம பயன்படுத்துன ஜூவல்லரியில் கலர் மங்கினாலோ அல்லது வேண்டாம் என்று நினைத்தாலோ அந்த களிமண்ணை செடிகளுக்கு பயன்படுத்தலாம். செடிகள் நல்லா வளரும்’’ என இதன் நன்மை மற்றும் தீமைகளையும் எடுத்து சொல்லும் சாரு, இதன் செயல் முறை மற்றும்
உருவாக்கம் பற்றியும் கூறுகிறார்.

‘‘சின்னதாகவோ இல்லை பெரியதாகவோ ஒரு ஜூவல்லரி செய்ய கிட்டதட்ட ஒரு வாரம் ஆகும். ஒரு தோடு அல்லது ஆரம் தயார் செய்து இரண்டு நாளைக்கு அதனை காய வைக்க வேண்டும். பிறகு, மண்பானையில் 25 நிமிடம் நெருப்பில் போட்டு வேகவைக்கணும். வீட்டில் ஓ.டி.ஜி அவன் இருந்தால், அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஆர்டர் முழுமையாக செய்து முடிக்க 15 நாட்கள் தேவைப்படும். மழை மற்றும் பனிக் காலத்தில் மண் சீக்கிரம் காயாது. வேக வைக்கும் போது உடைந்து போகும். அப்ப புதுசா தயாரித்துதான் தரணும். இந்த நகைகளுக்கு என இப்போது சிலிக்கான் மோல்டுகள் வந்துள்ளன. அதையும் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். காரணம், அதில் இருந்த மண்ணைப் பிரிக்கும் போது உடைந்து போகலாம் அல்லது அதன் வடிவத்தில் மாற்றம் ஏற்படலாம். அவ்வாறு மாறும் போது அதன் மேல் தேங்காய் எண்ணெய் தடவி சரியான வடிவத்திற்கு கொண்டு வந்தால்தான் வண்ணம் தீட்ட சுலபமாக இருக்கும்.

பொதுவா இந்த நகைகளின் எடை குறைந்தது 250 கிராமிலிருந்து 500 கிராம் இருக்கும். இதுல இருக்கும் குட்டி குட்டி மணிகள் முதற்கொண்டு எல்லாமே களிமண் என்பதால், எட்டு வருடம் வரைக்கும் அப்படியே இருக்கும். இந்த டெரக்கோட்டா நகைகளின் விலை செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம், டிசைன் மற்றும் பயன்படுத்திய பொருட்கள் கொண்டு மாறுபடும். இதில் குழந்தைகளுக்கான தோடுகள் முதல் கல்யாண பெண்களுக்கான பிரைடல் நகைகள் வரை வடிவமைக்கலாம்.

எந்த ஒரு நகையை செய்வதற்கு முன் அதன் டிசைனை ஒரு காகிதத்தில் வரைந்து வண்ணம் தீட்டுவேன். அதன் மூலம் நகையினை எவ்வாறு வடிவமைக்கலாம் என்பது குறித்து ஒரு ஐடியா கிடைக்கும். அதில் திருப்தி இல்லை என்றால் மாற்றிக்கொள்ளலாம். இதுவே களிமண்ணில் செய்த பிறகு மாற்றினால் முழு நகையும் வீணாகிவிடும். அக்ரலிக் மற்றும் பேப்ரிக் நிறங்கள்தான் பயன்படுத்துகிறேன். என்னுடைய வாடகையாளர்கள் பெரும்பாலும் அவர்களின் உடைக்கு ஏற்ப மேட்சிங் நகையினைதான் விரும்புறாங்க’’ என்று சொல்லும் சாரு பிரபாவிற்கு இதற்கான தனிப்பட்ட கடை ஒன்றை துவங்க வேண்டும் என்பது தான் கனவாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இளமைக்கு உத்தரவாதம் அளிக்கும் இஞ்சி தேன்!! (மகளிர் பக்கம்)
Next post தாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்!! (அவ்வப்போது கிளாமர்)