![](https://www.nitharsanam.net/wp-content/uploads/2023/06/12-170.jpg)
நம் குழந்தைகள் சரியாகத்தான் வளர்கிறார்களா? பெற்றோர்களே அலெர்ட்!! (மருத்துவம்)
வசதி வாய்ப்புகள் பெருகப் பெருக பிரச்னைகளும் அதிகமாகி வருவது நம்மில் பலர் அறிந்ததாக இருக்கலாம். அதிலும், இன்றைய பெற்றோர்கள் முன்னால் ‘குழந்தைகள் வளர்ச்சியில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்த பிரச்னை’ பெரும் சவாலாகி உள்ளது. அப்படியே குழந்தைகளின் மாதா மாதம் வளர்ச்சியில் என்னென்ன மாறுபாடுகள் இருக்கின்றன? என பல பெற்றோர்கள் கவனித்து வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொன்னாலும், ‘அந்த காலத்துல என் புள்ள மூணு வயசுலதான் நடக்க ஆரம்பிச்சான்… அஞ்சி வயசுலதான் பேச ஆரம்பிச்சான்’ எனச் சொல்லி உடனடியாக எடுக்க வேண்டிய உரிய தெரபிகளை தட்டிக்கழித்து விடுவர். இதனால் குழந்தைகளின் வளர்ச்சியில் மேலும் தாமதம் இருக்கலாம்.
எனவே, குழந்தைகளின் மொத்த வளர்ச்சியில் என்னென்ன பாதிப்புகள் இருக்கலாம், அதனால் என்னென்ன விளைவுகள் வரலாம், என்னென்ன மருத்துவம் பயன்படும் என்பது அனைத்தையும் இந்த கட்டுரை வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
மொத்த வளர்ச்சி…
* குழந்தையின் மொத்த வளர்ச்சியை மருத்துவத்தில் ‘Global development’ என்று அழைப்போம். அதாவது, தலை நிற்பது, உட்காருவது, நடப்பது என்பது அசைவுகள் சார்ந்த வளர்ச்சி.
*அதேபோல மற்றவர்களிடம் எப்படி குழந்தை தொடர்பு கொள்கிறது என்பது ஒவ்வொரு மாதமும் முக்கியம். அதாவது, முதலில் அம்மாவை கண்டறிந்து சிரிப்பது முதல் மற்றவர்களை பார்த்து சிரித்துப் பேசுவது வரை ஒவ்வொரு மாதமும் வளர்ச்சியில் கவனம் தேவை.
*அடுத்தது மூளை வளர்ச்சியை கவனிக்க வேண்டும். ஐம்புலன்கள் உதவியுடன் குழந்தை சுற்றி இருப்பதை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் நடக்க வேண்டும். உதாரணமாக, நாம் கை அசைத்து புன்னகைத்தால் குழந்தையும் அதை புரிந்துகொண்டு செய்ய வேண்டும். நாம் பொருளை கையாளுவது போல அதுவும் முயற்சிக்க வேண்டும்.
*அடுத்தது பேசும் திறன். ‘ கூ கூ’ என முதலில் ஆரம்பித்து ஒரு வார்த்தை, பின் இரண்டு மூன்று வார்த்தைகளை சரளமாக பேசுவது என ஒவ்வொரு மாதமும் திறன்கள் மாறும்.
மொத்த வளர்ச்சி தாமத நிலை
‘Global developmental delay’ என்று அழைக்கப்படும் இதில் மேல் சொன்ன மொத்த வளர்ச்சியிலும் பாதிப்பு (அதாவது தாமதம்) இருக்கும். எனவே, குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
காரணங்கள்…
இதுதான் குறிப்பிட்ட காரணம் என இதுவரை எதையும் கண்டறிய முடியவில்லை. ஆகையால், இதனால் ஏற்படலாம் என ஆபத்துக் காரணிகளாக கீழ்வருபவை
உள்ளன:
*குறை மாதப் பிரசவம்.
*பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள். அதாவது, குழந்தைக்கு போதிய பிராண வாயு (ஆக்சிஜன்) கிடைக்காமல் போவது.
* கர்ப்ப காலத்தில் ஏற்படும் தாயின் உயர் ரத்த அழுத்தம், உயர் சர்க்கரை அளவு.
* மூளை வாதம்.
* முதுகு தண்டுவடம் முழு வளர்ச்சி இல்லாமல் பிறப்பது.
* தலையின் சுற்றளவு பெரிதாய் அல்லது சிறிதாய் இருப்பது.
* ஆட்டிசம் பாதிப்பு.
* டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணு குறைபாடு.
* பிறந்த பின் ஏதேனும் தீவிர மூளைக் காய்ச்சல், வலிப்பு போன்றவை ஏற்படுவது.
கண்டறிவது எப்படி…?
1. கருவிலும், பிறந்த உடனும்
*ஸ்கேன், பனிக்குட நீர் பரிசோதனை, நஞ்சுக்கொடி திசு பரிசோதனை என சில வகையான பிரத்யேக ஆய்வுகள் மூலம் ஐம்பது சதவிகித பாதிப்புகளை கருவிலிருக்கும் போதே கண்டறியலாம். இந்த வகை பரிசோதனைகள் எல்லா கர்ப்பிணிகளும் எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ‘ஆபத்து நிறைந்த கர்ப்பம்’ (High risk pregnancy) எனில் மருத்துவர்
பரிந்துரைப்பர்.
*பிறந்தவுடன் சில வகையான பிரத்யேக பரிசோதனைகளை இயன்முறை மருத்துவரும், குழந்தைகள் நல மருத்துவரும் சேர்ந்து மேற்கொள்வர். இதன்மூலம் முப்பது சதவிகித பாதிப்புகளை கண்டறியலாம்.
2. வளரும் போது
குழந்தை வளரும் போது அதன் வளர்ச்சியில் ஏதேனும் தாமதம் இருந்தால் உடனடியாக இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும். உட்கார வேண்டிய மாதத்தில் உட்காரவில்லை எனில் இரண்டு மாதம் பொறுத்திருந்து பார்க்கலாம். அதற்கு மேல் நாட்கள் கடத்துவது வீண் செயல். இயன்முறை மருத்துவர் முழுவதும் பரிசோதித்து பிரச்னைகளை கண்டறிவர்.
தீர்வுகள்…
*அசைவு சார்ந்த தாமதம், மூளை வளர்ச்சி, ஐம்புலன்கள், சமூக வளர்ச்சி இவை அனைத்தையும் இயன்முறை மருத்துவ ‘விளையாட்டு வழி பயிற்சிகள்’ மூலமாகவும், குழந்தைகளுக்கான பிரத்யேக நரம்பியல் பயிற்சிகள் மூலமாகவும் தீர்வு காண்பர்.
*பேச்சுத் திறன் வளர்வதற்கு பேச்சுத் திறன் பயிற்சிகளை அதற்கான தெரபிஸ்ட் வழங்குவர்.
*படிப்பதில் சிக்கல் இருந்தால் அதற்கென சிறப்பு கல்வியாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு குழந்தைக்கு ஏற்றவாறு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி கற்றுக் கொடுப்பர்.
*ஒவ்வொரு குழந்தைக்கும் வளர்ச்சித்திறன் மாறுபடும் என்பதால், மருத்துவ கால அளவு மாறுபடும். சில குழந்தைகள் தெரபி ஆரம்பித்து ஒரு வருடத்தில் தீர்வு காண்பர். ஒரு சில குழந்தைகளுக்கு மூன்று வருடம் கூட ஆகலாம்.
*மேலும், ஆட்டிசம் போன்று வேறு ஏதேனும் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு இன்னும் காலம் நீடிக்கலாம் என்பதால், நம்பிக்கையுடன் தெரபிகளை
தொடர்வது நல்லது.
*மேலும், சமூகத் திறன், யோசிக்கும் திறன், மூளை வளர்ச்சி இவை ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும் என்பதால், ‘ஐக்.யூ’ (நுண்ணறிவு திறன்) பரிசோதனையை ஐந்து வயதில் செய்து எவ்வளவு அறிவுத் திறன் இருக்கிறது என்பதனை அறிந்து அதற்கு ஏற்றவாறு குழந்தையை வளர்க்கலாம்.
முன்னெச்சரிக்கை…
*ஒவ்வொரு படி வளர்ச்சிக்கும் இரண்டு மாதம் வரை நாம் பொறுத்து இருக்கலாம். அதற்கு மேலும் குறிப்பிட்ட வளர்ச்சி இல்லையெனில் உடனடி தெரபிகள் தொடர்வது பெரும்
விளைவுகளை தடுக்கும்.
*முதலில் அசைவுகள் சார்ந்த தாமதம் ஏற்படும் போது அதனை தட்டிக் கழித்தால் மற்ற வளர்ச்சிகள் கண்டிப்பாக பாதிக்கும். உதாரணமாக, ஆறு மாதம் ஆகியும் கழுத்து நிற்கவில்லை எனில் குழந்தையால் வீட்டில் உள்ள எந்தப் பொருளையும் பார்த்து, எடுத்து விளையாட (explore) செய்ய முடியாது. அம்மாவை தவிர மற்றவர்களிடம் குழந்தைக்கு அதிக பரிச்சயம் ஏற்படாது. இவ்வாறு முன்பு குறிப்பிட்ட மற்ற வளர்ச்சிகள் படிப்படியாக பாதிக்கப்படும் என்பதால் விரைவில் தெரபி எடுத்துக்கொள்வது நல்லது.
*சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்று மாதம் முதலே தொலைபேசி கொடுத்து வீடியோ பார்க்க வைக்கின்றனர். இதனால் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகின்றது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் குழந்தைகள் வளர்ந்த பின்பும் இந்த பாதிப்புகள் தொடர்வதால் கட்டாயம் தொலைபேசி, டிவி, ஆடியோ போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.எனவே, மொத்தத்தில் பெற்றோர்களாகிய நாம் குழந்தை வளர்ப்பில் கூடுதல் எச்சரிக்கையுடனும், அக்கறையுடனும் இருந்தால் நம் மழலைகளை முத்தாய் வளர்த்தெடுக்கலாம்.