சிறந்த கருத்தடை எது? (அவ்வப்போது கிளாமர் )

Read Time:13 Minute, 41 Second

ஒரு குடும்பத்துக்குக் குழந்தையின் தேவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு குழந்தை தடுப்பும் முக்கியம். இல்லாவிட்டால், ஒவ்வொரு குடும்பமும் குசேலர் குடும்பத்தை மிஞ்சும்படி ஆகிவிடும். அப்போது நிறைய சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும். இதற்காகவே உருவானவைதான் கருத்தடை முறைகள்.

இரண்டு வகை கருத்தடைகள்

குடும்பத்தைக் கட்டுப்படுத்தும் கருத்தடை முறையில் இரண்டு விதம் உண்டு. ‘திருமணமானதும் குழந்தை வேண்டாம்; சில காலம் தள்ளிப்போடலாம்’ என்று நினைப்பவர்களுக்கும், முதல் குழந்தை பெற்ற பின்பு, இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் வரையிலான இடைவெளியில் குழந்தை உண்டாகாமல் இருக்க வழி தேடுபவர்களுக்கும் ‘தற்காலிகக் கருத்தடை முறைகள்’ இருக்கின்றன. ‘இனி குழந்தையே வேண்டாம்’ என்று முடிவு செய்பவர்களுக்காக இருப்பது ‘நிரந்தரக் கருத்தடை முறைகள்’.

பாதுகாப்பான காலம்

மாதவிலக்குத் தொடங்கிய முதல் நாளிலிருந்து 7 நாட்கள்; அடுத்த மாதவிலக்குத் தொடங்குவதற்கு முந்தைய 7 நாட்கள். இந்த நாட்களில் தாம்பத்திய உறவு கொண்டால், குழந்தை உண்டாகாது. ஆனால், இது பொதுவான விதி அல்ல. எல்லாப் பெண்களுக்கும் பொருந்தவும் செய்யாது. மாதவிலக்கு சுழற்சிகள் மிகச் சரியான இடைவெளிகளில் ஏற்படுபவர்களுக்கே இது சரிப்படும்.

ஆண், பெண் உறைகள் தற்காலிகக் கருத்தடை முறையில் முக்கியமானது காண்டம் (Condom) எனப்படும் ஆணுறை. இது அதிகபட்சப் பாதுகாப்பு தரும் என்றாலும், மிகச் சிலருக்கு இதையும் கடந்து கர்ப்பமாவதும் உண்டு. காரணம், மென்மையான ‘லேட்டக்ஸ்’ எனும் ரப்பர் உறையால் இது தயாரிக்கப்படுகிறது; இதை அதிக வெப்பம் இல்லாத இடத்தில் பாதுகாக்க வேண்டும். அது தவறும்போது, ரப்பர் உறை சேதமடைந்து கர்ப்பம் நிகழ்ந்துவிடலாம். காலாவதியான ஆணுறையைப் பயன்படுத்தினாலும் இதே நிலைமைதான். கர்ப்பம் உண்டாகிவிடும்.

ஆண்களுக்கு காண்டம் மாதிரி பெண்களுக்கு டயாப்ரம்(Diaphragm) எனும் கருத்தடை சாதனம் உள்ளது. சிறிய கப் போல் குவிந்துள்ள இந்த சாதனத்தைத் தாம்பத்தியத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன் பெண்ணுறுப்பில் பொருத்திக் கொள்ள வேண்டும். இது அவ்வளவாகப் பெண்களிடம் பிரபலமாகவில்லை.

கருத்தடை க்ரீம்கள்

ஆணின் விந்தணுக்களை அழிக்கக்கூடிய ரசாயனங்கள் கலந்த க்ரீம்கள்(Spermicides), ஜெல்லிகள், களிம்புகள், மாத்திரைகள் கிடைக்கின்றன. பெண்ணுறுப்பில் கருப்பையின் வாய்ப்பகுதியில் இவற்றைத் தடவிக்கொள்ள வேண்டும் அல்லது பொருத்திக் கொள்ள வேண்டும்.

மேற்சொன்ன மூன்றுமே ஆணின் விந்துவைப் பெண்ணுறுப்புக்குள் போகவிடாமல் தடுத்துவிடுவதால், கரு உருவாவதில்லை. ஆனால், இவை முழு
வெற்றியைத் தருவதில்லை.

கருத்தடை மாத்திரைகள்

வாய் வழியாகச் சாப்பிடும் மாத்திரைகள் அடுத்த வகை. இவை ஒவ்வொரு மாதமும் பெண்ணின் சினைமுட்டை வெளிவராமல் தடுத்துவிடுவதால் கரு உருவாகாது. அதேசமயம், குழந்தைக்குப் பாலூட்டும் காலத்தில் இவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது. நீரிழிவு உள்ளவர்
களுக்கும் இவை ஆகாது.

ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் கலந்த மாத்திரைகள்தான் கருத்தடை மாத்திரைகளாகப் பயன்படுகின்றன. 21 மாத்திரைகள் உள்ளதும் 28 மாத்திரைகள் உள்ளதுமாக இரண்டு விதங்களில் இது கிடைக்கிறது. 21 மாத்திரைகள் என்றால், நாளொன்றுக்கு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். பிறகு 7 நாட்களுக்குக் காத்திருக்க வேண்டும்.

அடுத்த மாதவிலக்கு வந்ததும் முதல் நாளிலிருந்தே மீண்டும் மாத்திரை சாப்பிட வேண்டும். 28 மாத்திரைகள் உள்ளதில் மருந்து கலந்த மாத்திரைகள் 21 இருக்கும். அடுத்த 7 மாத்திரைகளில் மருந்து இருக்காது. நாளொன்றுக்கு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். கடைசி 7 நாட்களில் மாதவிலக்கு ஏற்படும். அதற்குப் பிறகு மீண்டும் மாதவிலக்கு வந்த நாளிலிருந்தே மாத்திரை சாப்பிட வேண்டும்.

புரோஜெஸ்டிரான் மட்டுமே உள்ள மாத்திரைகளும்(Mini Pills) உள்ளன. 28 நாட்களுக்கு இதை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டியது மிக முக்கியம். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களும், மாதவிலக்கு நிற்கும் தருணத்தில் உள்ளவர்களும் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது.

‘குழந்தைக்குத் தாய்ப்பால் தரும்போது கரு உருவாகாது’ என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். இது தவறு. குழந்தை பிறந்து மாதவிலக்கு நின்றதும் எப்போது வேண்டுமானாலும் கர்ப்பம் ஏற்படலாம். சிலருக்கு அடுத்த மாதவிலக்கு வராமலேயே கர்ப்பம் ஏற்பட்டுவிடுவதும் உண்டு. எனவே, கவனமாக இருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் ‘மினிபில்’ சாப்பிடலாம்.

இவை தவிர, வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சாப்பிடுவதற்கும் கருத்தடை மாத்திரைகள் உள்ளன. கருத்தடையைப் பொறுத்தவரை எதுவாக இருந்தாலும், தம்பதிகள் சுயமாகத் தேர்வு செய்வதைவிட, மருத்துவரிடம் ஆலோசித்துப் பின்பற்றுவது பல பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
மாத்திரை சாப்பிட மறந்துவிட்டால்?

ஒருநாள் ஒரு மாத்திரை சாப்பிட மறந்துவிட்டால், நினைவு வந்தவுடன் சாப்பிடவும். அடுத்த மாத்திரையை எப்போதும்போல் சாப்பிடவும். ஒரே நாளில் இரண்டு மாத்திரைகள் சாப்பிடலாம்.

இரண்டு நாள் மறந்துவிட்டால், அடுத்த நாள் இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு மாத்திரை சாப்பிட மறந்துவிட்ட 7-வது நாள்வரை தவறாது ஆணுறை பயன்படுத்தித் தாம்பத்தியம் வைத்துக்கொள்வது நல்லது. அதற்கும் அதிகமான நாட்கள் மறந்துவிட்டதென்றால், அடுத்தச் சுழற்சி வரைக்கும் ஆணுறை பயன்படுத்தித் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.

கருத்தடை ஊசி (DMPA)
இது புரோஜெஸ்ட்ரான் வகை மருந்தில் தயாரிக்கப்பட்ட ஊசி மருந்து. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதைப் போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குமேல் இதைப் பயன்படுத்த முடியாது. காரணம், மாதவிலக்கு முறை தவறும்; எலும்புகள் பலவீனமாகிவிடும்.

உட்பதியச் சாதனங்கள் (IUCD)
கருப்பைக்குள் பதியமிடப்படும் ‘லூப்’ (Loop) எனப்படும் கருத்தடைச் சாதனம்தான் இப்போது பிரபலம். செம்பு கலந்த ‘காப்பர் டி’ (Copper T) சாதனம் பலருக்கும் தெரிந்திருக்கும். ஹார்மோன் கலந்த உட்பதியச் சாதனமும் (LNG) உள்ளது. இவற்றில் ஒன்றை மாதவிலக்கு முடிந்ததும் கருப்பைக்குள் பொருத்திக்கொள்ள வேண்டும்.

சமீபத்தில்தான் பிரசவம் ஆகியிருந்தால், கருப்பை சுருங்கிப் பழைய நிலைக்கு வரும்வரை, அதாவது 6-லிருந்து 8 வாரம் வரை காத்திருந்து, இதைப் பொருத்திக் கொள்ளலாம். அரசு மருத்துவ மனைகளில் நஞ்சு வெளிவந்ததுமே இதைப் பொருத்துவதுண்டு. 5 முதல் 10 வருடங்களுக்கு இதை வைத்துக் கொள்ளலாம். இது இடம் பெயர்ந்து விட்டால் உடனே மாற்றிக்கொள்ள வேண்டும். இதில் உள்ள செம்பு அல்லது ஹார்மோன் கருப்பைச் சுவரில் மாற்றங்களை ஏற்படுத்திக் கரு உண்டாவதைத் தடுக்கிறது; செலவு குறைவு.

நீண்ட காலம் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் இல்லை. வெற்றி விகிதம் அதிகம். எனவே, பெண்களுக்கு இதுதான் மிகவும் சிறந்த தற்காலிகக் கருத்தடை முறை.இவை தவிர, தோலுக்கு அடியில் பதிய மிடப்படும் நார்பிளான்ட் (Norplant), இம்பிளானோன் (Implanon) போன்ற உட்பதியங்களும், ஒட்டுத்துண்டுகளும் (Patches) இருக்கின்றன.

கருத்தடை அறுவை சிகிச்சைகள் நிரந்தரக் கருத்தடை முறையில் லேப்ராஸ்கோப் மூலம் பெண்ணின் இரண்டு கருக்குழாய்களையும் வெட்டி கருப்பையோடு இணையவிடாமல் செய்யும் அறுவை சிகிச்சை (Tubectomy) முக்கியம். சுகப்பிரசவம் ஆன இரண்டாவது அல்லது மூன்றாம் நாளில் இதைச் செய்வார்கள். சிசேரியன் முறையில் குழந்தை பிறக்கிறது என்றால், இரண்டாவது பிரசவத்தின்போதே இதைச் செய்துகொள்ளலாம்.

ஆணுக்கு மேற்கொள்ளப்படும் ‘வாசக்டமி’ (Vasectomy) அறுவை சிகிச்சையும் ஒரு நிரந்தரக் கருத்தடை முறைதான். ஆணின் விரைப்பைகளிலிருந்து விந்தணுக்களைச் சுமந்துவரும் வாஸ்டிஃபரென்ஸ் (Vas deferens) எனும் ‘விந்தணுச் சேமிப்புக்குழல்’களை வெட்டிவிடுவது இதன் செயல்முறை. பெண்ணுக்குச் செய்யப்படுவதைவிட சுலபமானது இது. ஆண்களுக்கு இதுதான் சிறந்தது.

நிரந்தரக் கருத்தடை செய்தபிறகு ஏதாவது ஒரு காரணத்தால், மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஏற்கனவே வெட்டிய குழாய்களை மறுபடியும் இணைப்பார்கள். இவற்றில் ஆண்களுக்குச் செய்யப்படும் ‘மறுசீரமைப்புச் சிகிச்சை’தான் (Recanalization) அதிக வெற்றியைத் தரும். எனவே, ஆண்களுக்குச் செய்யப்படும் ‘வாசக்டமி’தான் கருத்தடை முறைகள் எல்லாவற்றிலும் சிறந்தது.

கடைசியாக…

இந்தத் தொடரில் என்னோடு தொடர்ந்து வந்த எல்லா வாசகர்களுக்கும் நன்றி சொல்லும் இந்த நிமிடத்தில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் வைத்துக் கொள்ளவும் வலியுறுத்துகிறேன். கர்ப்பம் மற்றும் பிரசவம் குறித்த அடிப்படை அறிவியலைப் புரிந்துகொள்ளவும், தேவையில்லாத பயங்களைப் போக்கவும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களை முன்கூட்டியே தெரிந்து விலக்கவும் மட்டுமே இந்தத் தொடரை எழுதினேன்; சுயசிகிச்சைக்கு அல்ல.

எனவே, பெண்கள் கர்ப்பமானதும் தகுதி வாய்ந்த குடும்பப் பெண் மருத்துவரை முறைப்படி சந்தித்து, அவர்கள் சொல்லும் ஆலோசனைப்படி நடந்து, சுகப்பிரசவத்துக்குப் பாதை போட்டுக் கொள்ளுங்கள். வாழ்த்துகள் !

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நம் குழந்தைகள் சரியாகத்தான் வளர்கிறார்களா? பெற்றோர்களே அலெர்ட்!! (மருத்துவம்)
Next post ஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா? (அவ்வப்போது கிளாமர்)