சீர் வரிசைத் தட்டில் 500 வெரைட்டி இருக்கு!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 16 Second

நம் வீட்டு சுப நிகழ்ச்சிகளை பெரும்பாலும் அலங்கரிப்பதே சீர்வரிசைத் தட்டுக்கள்தான். மேடையில் இடம்பெறும் சீர்வரிசைத் தட்டுக்கள் பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் கான்செப்ட் என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் தங்கச் செல்வன். கோவை காந்தி நகரில் சீர்வரிசைத் தட்டு, ஆரத்தி தட்டுக்கென பிரத்யேக நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர்.‘‘கடந்த பத்து வருடமாக நான் இந்தத் தொழிலில் இருக்கிறேன்.

என்ன நிகழ்ச்சி, எத்தனை சீர்வரிசைத் தட்டு என்பதை மட்டும் எங்களிடம் சொல்லிவிட்டு, குடும்ப உறுப்பினர்கள் சபையில் வந்து அமர்ந்தால் போதும் என்றவர், சீர்வரிசைத் தட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேகரித்து, தட்டுக்களைஅலங்கரித்துக் கொண்டுவந்து சபையை நிரப்பிவிடுவோம். எங்களின் சீர்வரிசைத் தட்டு அலங்கார அணிவகுப்பு பார்ப்பதற்கு ஒரு ராஜ தோரணையில், ஜமீன் வீட்டு நிகழ்ச்சி போல கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். நீங்கள் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களில் இது ஒரு முக்கிய நிகழ்வாக பதிவாகும்.

சீர்வரிசைத் தட்டு என்றால் தட்டுக்களில் பழம், பூ, இனிப்பு மட்டும் எடுத்துச் செல்வோம். ஆனால் இன்று இந்தத் துறை பல மாற்றங்களை கண்டு ஆடம்பர நிகழ்வாக மாறிவிட்டது. 10 ஆண்டுகள் கழித்து போட்டோ மற்றும் வீடியோவை பார்த்தாலும், கன்டென்டாக நாம் இதையெல்லாம் செய்தோமே என்பது பதிவாக இருக்க வேண்டும். அதற்காகவே இந்த மாதிரியான அலங்கார நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது.

குடும்ப சுபநிகழ்ச்சிகளில் மாமன் மார்கள், அத்தைமார்கள் சீர் வரிசை தட்டுக்களை தூக்குவதன் மூலமே உறவுகளின் நெருக்கத்தை வெளிப்படுத்த முடியும். கிராமம் மற்றும் கிராமம் சார்ந்த நகர்ப்புறங்களில் தாய்மாமன் சீர் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. 10 மாட்டு வண்டிகளை கட்டி அதில் 51 தட்டு, 101 தட்டு என சீர் சுமந்து வரும் காட்சிகள் இப்போதும் உண்டு.

எங்களின் சீர்தட்டுகளில் இவற்றையெல்லாம் காட்சிப்படுத்தும் விதமாக, தாய்மாமன் வண்டி கட்டி சீர் வரிசை கொண்டு வருவது மாதிரியான கான்செப்ட், பிறந்த குழந்தையினை தொட்டிலில் போடுவது மாதிரியான கான்செப்ட், பெற்றோர் மடியில் குழந்தைக்கு பெயர் வைத்தல், தாய்மாமன் மடியில் வைத்து காது குத்து விழா, பெண்கள் கூடி ஜல்லடை வழியாக நீரூற்றி சடங்கு செய்யும் பூப்புனித நீராட்டு விழாக் காட்சி, மணமகன் வீட்டார் சீர்வரிசையோடு வந்து மணமகளை நிச்சயதார்த்தம் செய்வதென கான்செப்ட் அடிப்படையில் சீர்வரிசைத் தட்டுகள் ஐநூறுக்கு மேற்பட்ட வெரைட்டிகளில் எங்களிடம் கிடைக்கும். கூடவே பீக்காக் தீம் (Peacock Theme), எலிபென்ட் தீம்(Elephant Theme) என தீம் பேஸில் மயிலும், யானையும் சீர்வரிசைத்தட்டோடு அணிவகுத்து நிற்பது போன்ற வடிவமைப்பிலும் தட்டுக்கள் உண்டு.

பூப்புனித நீராட்டுவிழா, பெண் பார்க்கச் செல்லும் நிகழ்வு, பூ முடித்தல், நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு, கல்யாணம், வளைகாப்பு, தொட்டில் நிகழ்ச்சி, காதுகுத்து, அறுபதாம் கல்யாணம் என எல்லாவற்றுக்கும் தனித்தனி கான்செப்ட்டில் சீர்வரிசைத் தட்டுகளையும், ஆரத்தி தட்டுகளையும் நாங்களே டெக்ரேஷன் செய்து கொடுத்து வருகிறோம். குறிப்பாக வளைகாப்பு நிகழ்ச்சி என்றால் அதில் குழந்தை, தொட்டில், நடைவண்டி போன்ற கான்செப்ட்டுகள் கட்டாயம் இடம்பெறும்.

சீர் எடுத்து வருபவர்களையும், மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு நிகழ்ச்சிகளையும் ஆரத்தி எடுக்காமல் உள்ளே அழைத்துச் செல்வதில்லை. நெருக்கமான உறவுகள் ஆரத்தி தட்டுகளை சுற்றி உள்ளே அழைத்துச் செல்லும்போது உறவுகளின் நெருக்கம் அங்கே எள்ளளும் துள்ளளுமாக நகைப்புடன் வெளிப்படும். இதற்காகவே விதவிதமான ஆரத்தித் தட்டுகள் நூறு வெரைட்டிகளில் எங்களிடம் இருக்கின்றது.

டெக்ரேஷன் வேலைப்பாடுகளை நாங்களே செய்து கொள்கிறோம். ஒரே மாதிரியான தட்டு மட்டும் போதும் என்பவர்களுக்கு அதற்கான மூலப் பொருட்களும் எங்களிடத்தில் கிடைக்கும். வரிசைத் தட்டு தயாரிப்பை தொழிலாக எடுத்துச் செய்ய நினைக்கும் பெண்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் வகுப்புகளையும் நடத்தி வருகிறோம். எங்களிடம் பயிற்சி எடுத்தவர்கள் இதனை தொழிலாக எடுத்து செய்து வருகின்றனர்.

எங்களுடைய தீம் பேஸ்டு சீர்வரிசைத் தட்டு மற்றும் ஆரத்தி தட்டுகள் தமிழ்நாடு முழுவதும் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. உங்களின் தேவை 21 தட்டுக்களா, 51 தட்டுக்களா அல்லது 100 தட்டுக்களா என்பதை மட்டும் சொன்னால் போதும்… சென்னை முதல் கன்னியாகுமரி வரை எந்த ஊர் என்றாலும் சீர்வரிசைத் தட்டை டெக்ரேட் செய்து காட்சிப்படுத்த எங்கள் ஊழியர்கள் அங்கு இருப்பார்கள்’’ என்கிற தங்கச்செல்வனிடம் 50 ஊழியர்கள் வரை வேலை செய்கிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா? (அவ்வப்போது கிளாமர்)
Next post எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா..? (மகளிர் பக்கம்)