செயற்கை உணவு நிறங்கள்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 21 Second

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

செயற்கையாக சேர்க்கப்படும் உணவு நிறங்கள் இயற்கைப் பொருட்களில் இருந்து எடுக்கப்படாமல், முழுவதும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இயற்கைப் பொருட்களிலிருந்து உணவு நிறங்கள் பிரித்தெடுக்கப்படும் போது நிகழும் பல கட்ட செயல்முறைகள் எதுவும் இந்த செயற்கை நிறங்களின் தயாரிப்பில் இருப்பதில்லை.

எளிமையாகவும் விரைவாகவும் அதிக அளவிலும் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பண்புகளே, இயற்கை நிறங்களைப் பயன்படுத்துவதை சிறிது சிறிதாகத் தவிர்த்து, முழுவதும் செயற்கை உணவு நிறங்களுக்கு உணவு நிறுவனங்கள் மாறிவிட்டதற்கான முக்கிய காரணமாகும். செயற்கை உணவு நிறங்கள் யாவும் பொடியாகவோ, பசையாகவோ, களிம்பாகவோ, நீரில் கரையக் கூடியவையாகவும் இருப்பது, பல வகைகளில் சேர்மானத்துக்கான எளிய வழியாக இருக்கின்றது.

1856-இல் ஹென்றி பெர்கின் கண்டுபிடித்த நிறம்தான் செயற்கையாகப் பெறப்பட்ட முதல் உணவுநிறம். இந்த செயற்கை நிறமானது, நிலக்கரி தாரில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. செயற்கை உணவு நிறங்கள் அவற்றின் வேதியியல் வடிவமைப்பு மற்றும் நீரில் கரையும் தன்மையைப் பொருத்து மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றன.

1. நீரில் கரையும் செயற்கை உணவு நிறங்கள்

(i).Allura Red – இந்த நிறமூட்டி செயற்கை உணவு நிறமூட்டியாக மட்டுமல்லாமல் இயற்கையாவும் பூச்சியில் இருந்து பெறப்படுகிறது. செயற்கையாக, பெட்ரோலிய உபரிப் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கான ஊட்ட பானங்கள், தானியங்கள், மசாலா பொருட்கள், இனிப்பு உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

(ii).Amaranth – காவி கலந்த சிவப்பு நிறமான இந்த நிறத்தை மதுபானங்கள், கேக் வகைகள், ஐஸ்கிரீம், ஜாம் மற்றும் ஜெல்லி உணவுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

(iii).Sunset yellow – அடர் ஆரஞ்சு சிவப்பு நிறமூட்டியான இவை, ரொட்டி, குளிர் பானங்கள், சிற்றுண்டி தானியங்கள், இனிப்புப் பொருட்கள் போன்றவற்றில் சேர்க்கப்படுகின்றன. இவை 205 டிகிரி வெப்பநிலையையும் தாங்கக்கூடியவை.

(iv).Brillint blue மற்றும் brilliant black – நீலம் மற்றும் கருப்பு உணவு நிறங்களான இவை பொடியாகவும், கொரகொரப்பாகவும் கிடைக்கின்றன. மதுபானம், சாஸ் வகைகள், குளிர்பானங்கள், சீஸ் போன்றவற்றிற்கு நிறமளிக்கப் பயன்படுகின்றன.

(v).Tartrazine – ரொட்டி, பானங்கள், தானியங்கள், மணிலா வகை உணவுகள், இனிப்புப் பொருட்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றிற்கு எலுமிச்சை மஞ்சள் நிறமியாகப் பயன்படுகிறது. சுமார் 200 டிகிரி வெப்பநிலையிலும் மங்காதத் தன்மை கொண்டிருப்பதால், பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

(vi).Erythrosine – பென்சீன் மற்றும் எரித்ரோசின் வேதியியல் வடிவமைப்பையொத்த இந்த நிறமி, சிவப்பு நிறமூட்டியாகப் பயன்படுகிறது. சுயிங்கம், ஐஸ்கிரீம், இனிப்புகள், ஜெல்லி உணவுகள், மிட்டாய் வகைகள், குளிர் பானங்கள் தயாரிக்கும் பொடி வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

(vii).Quinoline yellow – பச்சை கலந்த மஞ்சள் நிறம் பெறுவதற்கும், இனிப்புகள், ஜெல்லி, ஜாம், குளிர் பானங்கள் போன்றவற்றிலும் சேர்க்கப்படுகிறது.

(viii).Brown FK & Brown HT – புகையூட்டப்பட்ட மீன், இறைச்சி வகைகள், சிப்ஸ் வகைகள், பிஸ்கட், சாக்லேட், கேக் வகைகள் போன்றவற்றில் நிறமூட்டியாகப் பயன்படுகிறது.

மேல் குறிப்பிட்டவையுடன், Green S, Indigoine, Litolurubin BK, Ponso 4R மற்றும் Azorubin போன்றவையும் செயற்கை உணவு நிறங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

2. கொழுப்பு, எண்ணெயில் கரையும் செயற்கை உணவு நிறங்கள்

நீரில் கரையும் நிறமிகள் போன்று உப்புப் பொருட்கள் இல்லாத காரணத்தினால் இவ்வகை நிறமூட்டிகள் நீரில் கரைவதில்லை. எனவே, இவற்றைக் கரைப்பதற்கு கொழுப்பு அல்லது எண்ணெய் தேவைப்படுகிறது. இதனால், நச்சுப்பொருட்கள் சேரும் நிலை இருப்பதால், பெரும்பாலும் இவற்றை உணவுப்பொருட்களில் கலப்பதற்கு அனுமதி கிடையாது. 1976க்கு முன்பு இவ்வகை செயற்கை உணவு நிறங்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், Penso SX என்ற நிறமி வெண்ணெய், மார்கரின் போன்றவற்றில் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. Yellow AB போன்ற நிறங்கள் ஆரஞ்சு பழத்தோலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் முரப்பா, மர்மலாட், பழத்தோல் ஜாம் போன்றவற்றில் தடைசெய்யப்பட்டுள்ளது.

3. லேக் நிறமிகள்

அலுமினியம் ஹைட்ரேட்டின் நீரில் கரையாத படிமானங்கள் பொடியாக்கப்பட்டு உணவுகளில் நிறமூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன. கேக் வகைகள், பிஸ்கட்டுகள், இனிப்புப் பொருட்கள், குளிர்பானங்கள், சூப் வகைகள், மசாலா பொருட்கள் போன்றவற்றிற்கு நிறமளிக்கப் பயன்படுகின்றன.

4. கலப்பு செயற்கை உணவு நிறங்கள்

Tetrazine, Erythrozine போன்ற முதன்மை நிறமூட்டிகளுடன், அவற்றிலிருந்து பல்வேறு அளவீட்டு வண்ணங்களில் பெறப்படும் இரண்டாம்நிலை நிறமூட்டிகளை தனித்தனியாகவோ அல்லது இரண்டு மூன்று நிறங்கள் சேர்த்தோ கலந்து உருவாக்கப்படுகின்றன இவ்வகை செயற்கை உணவு நிறங்கள். எ.கா. Egg yellow blended food color, Dark chocolate blended food color, Apple green blended food color, coffee brown blended food color.

பெரும்பாலான செயற்கை நிறங்கள் அனைத்தும் azo வகை வேதிப்பொருட்கள்தான். ஒருவருக்குப் பிடித்த உணவு பிடித்தமான நிறத்திலும் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்புதான். அதற்காகத்தான் இத்தனை வகையான செயற்கை உணவு நிறங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இவையனைத்தும் உணவுத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். காரணம், ஒவ்வொரு நிறமூட்டியின் இயற்பியல், வேதியியல், உணவு அறிவியல் பண்புகள், உடலுக்குள் சென்று எவ்வாறு செயல்படுகிறது, அல்லது உபாதையளிக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து, அனுமதிக்கப்பட்ட நிறங்கள், அனுமதிக்கப்படாத நிறங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட செயற்கை உணவு நிறங்கள்

Carmoisine / Azorubine E122), Ponceau 4R (E 124), Erythrosine (E 127), Allura red (E 129), Tartrazine (E 102), Sunset yellow FCF (E110), Indigotine / Indigo carmine (E 132), Brilliant blue FCP (E 133), Fast green FCF (E 143).

அனுமதி மறுக்கப்பட்டுள்ள செயற்கை உணவு நிறங்கள்

Fast red, Rhodamine B, Metanil yellow, Bromocresol purple, Green S, Sudan 1, Sudan 2, Sudan 3 and Sudan 4.

உணவு கலப்படத் தடுப்புப் பிரிவில் அனுமதிக்கப்படாத செயற்கை உணவு நிறங்கள் ஏறக்குறைய 11% உணவுப் பொருட்களிலும் 4 % பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் சான்றுகளுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் அனுமதிக்கப்படாத செயற்கை உணவு நிறங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. காரணம், இந்திய உணவுகளில், Metanil yellow மற்றும் malachite green போன்றவை கேக் மற்றும் ஐஸ்கிரீம் வகை உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளைத்தான் நமது குழந்தைகளுக்கு ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுக்கிறோம் என்பதையும்
நினைத்துப் பார்க்க வேண்டும்.

செயற்கை உணவு நிறங்களை அனுமதிப்பதிலும் நாட்டுக்கு நாடு வேறுபாடு காணப்படுகிறது. நாடும் அவை அனுமதிக்கப்பட்டுள்ள உணவு நிறங்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியா (8) இலங்கை (9), பாகிஸ்தான் (18), ஐக்கிய நாடுகள் (7), ஈரான் மற்றும் ஆஸ்திரேலியா (13), ஐரோப்பிய நாடுகள் (16). ஏந்த உணவிலும் 1 கிலோவுக்கு 0.1 கிராம் மட்டுமே சேர்க்க வேண்டும். ஆனால், கண் கவர்ச்சிக்காக அந்த அளவைத் தாண்டுவதும் நடைபெறுகிறது. குறிப்பாக, Tartrazzine மற்றும் sunset yellow போன்ற நிறங்கள், இந்தியாவில் திருவிழா, பண்டிகை காலங்களில் இனிப்பு வகை உணவுப் பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகம் கலக்கப்படுகின்றன.

இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 செயற்கை உணவு நிறங்கள் Ponceu 4R 124, Carmoisine 122, Erythrosine 127, Tartrazine 102, Sunset yellow FCF 110, Indigo Carmine 132, Brilliant blue FCF 133, Fast green FCF 143 ஆகியவை மட்டுமே. உணவு நிறங்களைப் பயன்படுத்துவதற்கான ஒழுங்குமுறை மற்றும் சட்டவிதிகளை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அகத்திக் கீரையின் அற்புதங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)