கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 24 Second

நான் சமீபத்தில் ஈ.சி.ஜி எடுத்தேன். அதில், என்னுடைய இதயத்துடிப்பு 110-க்கும் மேல் இருப்பது தெரியவந்தது. ஈ.சி.ஜி ரிப்போர்ட்டில் இதை ‘சைனஸ் டக்கிகார்டியா’ (Sinus Tachycardia) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இது என்ன… ஏதேனும் பிரச்னையா?
– ராம்மோகன், திருச்சி.

“சைனஸ் டக்கிகார்டியா என்பது இதயத்துடிப்பு அதீதமாக இருப்பதைக் குறிக்கும். நீங்கள் பயப்படுவதுபோல இது ஒரு பிரச்னையோ, சிக்கலோ கிடையாது. இயல்பானநிலைதான். இயல்பு என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதால், ‘அவருக்கு இருக்கும் இதயத்துடிப்பின் அளவு எனக்கு இல்லையே… எனில் நான் இயல்புக்கு அப்பாற்பட்டவனா… இது நோய் பாதிப்பின் வெளிப்பாடா?’ என்றெல்லாம் யோசித்து, குழம்ப வேண்டாம்.

சைனஸ் டக்கிகார்டியா இருப்பவர்கள், மற்றவர்களைவிட சற்று சென்சிடிவ்வாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு இதயத்துடிப்பு அதிகரித்துவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அடிக்கடி இதயத்துடிப்பு அதிகரிப்பது உடல்நலத்துக்கு நல்லதல்ல என்பதால், பதற்றமாக்கும் சூழ்நிலைகளை இவர்கள் தவிர்க்க வேண்டும். ஒருவேளை இதயத்துடிப்பு அதிகரிப்பது தெரியவந்தாலும், அந்த நேரத்தில் நின்று நிதானமாகச் செயலாற்ற வேண்டும். மற்றபடி மருந்தோ, மாத்திரையோ அவசியமில்லை. நிதானமாகச் செயலாற்றத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இதயத்துடிப்பு இயல்புநிலைக்கு வந்துவிடும்.

அடிப்படையில் இதயத்துடிப்பின் அளவீடு 60 முதல் 100 பீட்ஸ் / நிமிடங்கள் (bpm) இருப்பது இயல்புநிலை. இந்த அளவில், உங்களுக்கு 110 பீட்ஸ் / நிமிடங்கள் என வந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒருவரின் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா என்பதையும், அவருக்கு நோய் பாதிப்பின் தாக்கம் ஏதேனும் இருக்கிறதா, இல்லையா என்பதையும் வெறுமனே bpm அளவைவைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது. ஒவ்வோர் ஈ.சி.ஜி-யின் முடிவிலும் இதயம் எந்த அளவில் துடித்திருக்கிறது என்பது கிராஃப் வடிவத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

அதைப் பார்த்துதான் மருத்துவர்கள் முடிவைச் சொல்வார்கள். நவீன ஈ.சி.ஜி எந்திரங்களில், ‘உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது’ எனும் தகவல்களைச் சொல்லும் வசதிகள் தரப்பட்டிருக்கின்றன. ஆனால், இவை எல்லா நேரமும் துல்லியமாக இருப்பதில்லை. எனவே, எல்லா நேரமும் இதை அப்படியே நம்ப முயலாதீர்கள். மருத்துவப் பரிந்துரைமீது நம்பிக்கைகொள்ளுங்கள்.”

மெட்ராஸ் ஐ ஏன் ஏற்படுகிறது? அதைத் தடுக்க என்னென்ன வழிகள் உள்ளன?
– கே.பி.ராஜு, மதுரை.

மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய் (கன்சங்டிவிடிஸ் – Conjunctivitis) முதல் முறையாக சென்னையில் கண்டறியப்பட்டதால், இந்த நோய்க்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுகிறது காலநிலை மாற்றம் காரணமாக உருமாறும் வைரஸ்கள் பரவலால், சில காலம் அடங்கியிருந்த ‘மெட்ராஸ் ஐ’ திரும்பவும் பரவ வேகமெடுத்துள்ளது. கண்நோய் வந்த ஒருவரைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு வந்து விடும் என்று சொல்ல முடியாது. கண்கள் சிவத்தல், நீர் வடிதல், கண்களில் எரிச்சல், கண்ணிலிருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதியில் ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளனபாதிக்கப்பட்டவர் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்யவேண்டும்.

தொற்றால், பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய திசு காகிதம் மற்றும் கைக்குட்டையை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது.குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகித் தனியாகப் படுத்துக்கொள்ள வேண்டும்.மெட்ராஸ் ஐ பாதித்த குழந்தைகள், பெரியவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.பழைய கான்டாக்ட் லென்ஸ்களை தவிர்த்துவிட்டு மருத்துவரின் அறிவுரை பெற்ற பின்னர் புதியதை பயன்படுத்த வேண்டும்.தாய்ப்பால், விளக்கெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

தாங்களாகவே மருந்துக்கடையில் சென்று மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
சுயமாக மருத்துவம் செய்ய வேண்டாம், மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான, நீர்ச்சத்து மிகுந்த, வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வைக்கும். நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் , கறுப்பு கண்ணாடி அணிந்துகொள்வது நல்லது.

அண்மையில் மருத்துவக் காரணங்களுக்காக நான் அபார்ஷன் செய்துகொண்டேன். அப்போது நான் ஆறு வாரங்கள் கர்ப்பமாக இருந்தேன். வஜைனா வழியாக மாத்திரை போட்டு கருவைக் கலைத்தார்கள். அதன் பிறகு எனக்கு மருத்துவர் நிறைய சத்து மாத்திரைகளைக் கொடுத்தார். எனக்கு மாத்திரை சாப்பிடப் பிடிக்காது என்பதால், எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டேன். சில மாதங்கள் கழித்து கைகால்களில் மரத்துப்போன உணர்வு வர ஆரம்பித்தது. `உடலில் பி12 சத்து குறைந்ததால்தான் இப்படி மரத்துப் போகிறது’ என்கிறார் மருத்துவர். அபார்ஷனுக்குப் பிறகு, நான் சத்து மாத்திரைகளைச் சாப்பிடாததுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக இருக்குமோ?
– கே.ராதாமணி, கோவை.

“நீங்கள் சொல்வதுபோல் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. கைகால் மரத்துப் போகிறது என்றாலே, அதற்குக் காரணம் பி12 குறைபாடுதான் என்று சொல்ல முடியாது. அபார்ஷனுக்குப் பிறகு உங்களுக்கு மாதா மாதம் மாதவிடாய் வந்துகொண்டிருக்கிறது என்றால், பிரச்னை எதுவும் இருக்காது. அபார்ஷனுக்கு முன்னர் ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை பாதிப்பு இருந்து, அதனாலும் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது, ஒரு முழுமையான மருத்துவப் பரிசோதனை. குறிப்பாக ஹீமோகுளோபின், பி12, ஃபோலிக் அமிலம், சர்க்கரைநோய், தைராய்டு ஆகியவற்றை அறியும் ரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். தேவைப்பட்டால், கர்ப்பப்பையையும் பரிசோதனை செய்ய வேண்டி வரலாம். இந்தப் பரிசோதனைகள் அனைத்தையும் செய்து பார்த்தால்தான் உங்களுக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செயற்கை உணவு நிறங்கள்!! (மருத்துவம்)
Next post அந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா?(அவ்வப்போது கிளாமர்)