டிரெண்டாக மாறிவரும் கைத்தறி உடைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 51 Second

என்னதான் மெஷின்களை கொண்டு புடவைகளையும், துணிகளையும் உருவாக்கினாலும், கைகளின் மூலம் வேயப்படும் புடவைகளுக்கென்று தனி மதிப்பு உண்டு. இடையில் சில கலாச்சார மாறுதல்களால் மக்கள் பல்வேறு வகையான உடைகளை அணிய ஆரம்பித்துள்ளனர். இருந்தாலும் திருமணம், நிச்சயம், புதுமனைப் புகுவிழா போன்ற முக்கியமான விழாக்களுக்கு பெண்கள் அதிகம் உபயோகிப்பது இந்த கைத்தறி உடைகள்தான். அதிலும் அவர்களுக்கு ஏற்ற வண்ணத்தில் விரும்பிய விதத்தில் நூற்பாலைக்கே சென்று ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் மகாத்மா முதற்கொண்டு கைகளால் நெய்யப்பட்ட கதர் உடைகளை அணிந்து வந்தாலும், நாளடைவில் பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது இந்த கைத்தறி. ஆனால் தற்போது ஒரு சில மக்களால் காப்பாற்றப்பட்டு இன்றளவிலும் தொடர்ந்து கொண்டு வருகிறது. அதன் காரணம் ஒன்று கைத்தறி அவர்களின் பரம்பரை தொழிலாக இருக்க வேண்டும். அல்லது அவர்கள் பழகிய தொழிலாக இருக்க வேண்டும்.

ஆனால் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்று வரை கைத்தறி, ஆடைகள் நெய்தலையே முழு நேரத் தொழிலாக செய்து வருகின்றனர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மக்கள். அவர்கள் உடுத்தும் உடைகளில் இருந்து வேலைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தும் பைகள் வரை தாங்களே உற்பத்தி செய்து அதன் மூலம் பல பெண்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுத்து வருகிறார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கீதா சுதாகரன். இவர் ‘ஆதித்தி ஹாண்ட் லூம்ஸ்’ என்ற பெயரில் தன் கைத்தறி ெதாழிலை செய்து வருகிறார். தான் இதனை எவ்வாறு உருவாக்கினார் மற்றும் அதில் அவர் சந்தித்த இன்னல்கள் பற்றியும் பேச ஆரம்பித்தார்.

‘‘நான் ஆதித்தி ஹாண்ட்லூம்சினை ஐந்த நபர்கள் ெகாண்டு தான் 2018ல் ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட ஐந்து வருஷமா கைத்தறி மூலமா ஆடைகள் நெய்கிறோம். முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்றும் நெசவுப்பொருட்கள் தயாரிக்கும் எங்களின் தொழிற்சாலையில் தற்போது 25 பேர் வேலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அதுவும் ஒவ்வொரு ஊரின் பாரம்பரிய முறையில் கைகளால் நெய்யப்பட்ட புடவைகள் என அனைத்து வகையான ஆடைகளும் தயாரித்து கொடுக்கிறோம். எங்க நாட்டில் சிங்கள மக்கள் அதிகமாக விரும்பி உடுத்தும் காட்டன்
புடவைகளை இப்போ எங்க மக்களும் அதிகம் விரும்புறாங்க. அதற்காகவே நாங்கள் அதிகமா காட்டன் துணிகளை தயாரிக்க ஆரம்பிச்சோம்’’ என புன்னகையுடன் சொன்ன கீதா சுதாகரன் அவர்களுக்கு தேவையான நூல்கள் மற்றும் இதர துணி வகைகளை எங்கிருந்து பெறுகிறார் என்பதைப் பற்றி விளக்குகிறார்.

‘‘எங்களுக்கு வர வேண்டிய நூல்கள் எல்லாமே இந்தியாவில் இருக்கும் ஒரு நூல் கடையிலிருந்து தான்ற வாங்குகிறோம். கொரோனா காரணமாக நூல்கள் வருவதில் தடை ஏற்பட்டதால் அந்த இரண்டு வருடம் சரியான நூல் வரத்து இல்லாமல் இருந்தது. மேலும் கொரோனா காரணமாக எங்களிடம் வேலைப் பார்த்த பாதி பெண்களை அந்த சமயத்தில் அதிக நபர்கள் ஒன்றாக சேர்க்க வேண்டாம் என்ற காரணத்தால் வர வேண்டாம்னு சொல்லிட்டோம்.

அதற்கு முக்கிய காரணம் நூல் வரத்தும் குறைவு, வேலையும் அதிகமில்லை, எல்லாருக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும். வருமானம் பெரிய அளவில் இல்லாத போது செலவுகளை அதிகரித்துக் கொள்ள வேண்டாம்னு நினைத்தோம். கையில் இருந்த நூல்களைக் கொண்டு ஒரு சில ஆர்டர்களை மட்டுமே வைத்து துணிகளை நெய்தோம். அன்று முதல் இன்று வரை அவர்களை மட்டுமே கொண்டு தொழிலை தொடர்ந்து வருகிறோம். இவர்கள் ஒரு நாளில் ஒரு ஒன்று முதல் இரண்டு புடவைகளை நெய்கின்றனர்.

பொதுவாவே கைகளால் செய்யப்பட்ட பொருட்களை மக்கள் அதிகம் விரும்புவார்கள். அதுபோல்தான் நாங்க தயாரிக்கும் சால்வைகள், புடவைகள் மற்றும் உடைகளுக்கு எங்க ஊர் மக்கள் மட்டுமில்லாமல் அயல் நாடுகளில் இருந்து சுற்றுலாவிற்காக வருபவர்களும் துணிகளை வாங்கி செல்கிறார்கள். தமிழ்நாட்டு கலாச்சாரப்படி நாங்க உருவாக்கும் வேஷ்டிகள் மற்றும் புடவைகளுக்கு தனி வரவேற்பு இருக்கு. திருமண வேஷ்டி மற்றும் புடவைகளும் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்.

சிறிது நாட்களுக்கு முன்பு கனடாவிலிருந்து சால்வைகளை ஆர்டர் செய்திருந்தார்கள். எங்க பாணியில் தயாரித்து அதில் சில கை வேலைப்பாடுகளும் செய்து கொடுத்தோம். இங்கு தயாரிக்கப்படும் துண்டு முதற்கொண்டு ஷால், புடவைகள் என கைகளால் நெய்யப்பட்ட அனைத்து உடைகளும் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். இது நெசவுத் தொழிலுக்கு கிடைத்த வெற்றி என்று நான் ரொம்ப பெருமையா சொல்வேன். வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் தரமானதாக இருக்கும். அதே போல் ஒரு துணியின் தரத்தினை அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் நூல்களைக் கொண்டு சுலபமாக கண்டுபிடித்திடலாம். எங்களிடம் உள்ள துணிகளை பார்த்தாலே நாங்கள் பயன்படுத்தும் நூலின் தரம் என்னவென்று உங்களுக்கு புரியும்’’ என்ற கீதா பெண்கள் உடுத்தும் புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் பிளவுஸ்களை தயாரித்து தருகிறார்.

‘‘இன்றைய டிரெண்ட், புடவைகளின் நிறத்திற்கு ஏற்ப கான்ட்ராஸ்ட் நிறத்தில் பிளவுஸ்களை அணிவதுதான். அதனால் ஒரு புடவையினை நாங்க நெய்யும் போதே அதற்கான கான்ட்ராஸ்ட் பிளவுஸ்களையும் நெய்து விடுகிறோம். அலுவலகம் மற்றும் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் அணிவதற்கு ஏற்றது போலவும் நாங்கள் டிசைனர் புடவைகள் மற்றும் குர்த்தாக்களும் நெய்து வருகிறோம். சில சமயங்களில் புடவைகளில் அல்லது வேறு ஏதெனும் துணிகள் நெய்த பின் அவற்றில் சில பிட் துணிகள் மீதமிருக்கும்.

அதை தூக்கிப் போடாமல் பெண்களுக்கான கைப்பைகள், லேப்டாப் பைகள், குழந்தைகளுக்கான லன்ச் பேக், பெரியவர்கள் எடுத்துச் செல்ல வசதியாக பைகள் மற்றும் மார்டர்ன் பைகளும் என பல வகைகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப செய்து கொடுக்கிறோம். இளம்பெண்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த பைகளுக்கும் மக்களிடம் நல்ல பெயரும் வரவேற்பும் உள்ளது. இந்த பைகளை பார்த்து Eastern University-யிலிருந்து 60 பைகள் செய்து தர சொல்லியும் ஆர்டர் வந்தது. நாங்க தயாரிப்பது மட்டுமில்லாமல் இதனை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பது குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். அதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானம் ஏற்படுத்தித் தர முடிகிறது’’ என்றார் கீதா.

‘‘பொதுவாகவே மற்ற நாடுகளில் விற்கும் துணிகளை விட எங்கள் நாட்டில் விற்கப்படும் உடைகளின் விலை அதிகமாக இருக்கும். பலதரப்பட்ட வகையில் புடவைகள் வந்தாலும் நாங்கள் அதிகம் தயாரிப்பது காட்டன் மற்றும் ரேயான் புடவைகள் தான். இவை குறைந்தது நான்காயிரம் முதல் இருபதாயிரம் வரை விற்கப்படுகிறது.

புடவைகளின் விலைகள் நாங்கள் இறக்குமதி செய்யும் நூல்களின் விலைகளுக்கு ஏற்ப மாறுபடும். தற்போது வேலைக்கான ஆட்களையும், நெய்யப்படும் ஆடைகளின் உற்பத்தியையும் அதிகரிக்க தேவையான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். இதற்கு அடிப்படையாக ஆடைகள் உற்பத்திக்கு முக்கிய தேவையாக கருதப்படும் நூலினை தயாரிக்க, பருத்தி செடிகள் எங்கள் ஊரில் பயிரிடப்பட்டால் எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்’’ என அவர்களின் கோரிக்கையை முன் வைக்கிறார் கீதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வெயிலோடு விளையாடு!! (மகளிர் பக்கம்)
Next post வேப்பிலை வைத்தியம்!! (மருத்துவம்)