டயாபடீக் டயட்!!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 24 Second

சர்க்கரை நோய் இன்று இந்தியாவைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கும் வாழ்க்கைமுறை நோய்களில் முதன்மையானது. சர்க்கரை நோய் வந்த பலருக்கும் எழும் பிரதானமான கேள்வி, ’இயற்கையான வழிகளில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வழி உள்ளதா?’ என்பதுதான். யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் ஆர். ராதிகா அவர்களிடம் இது பற்றி கேட்டோம்.காலை – இயற்கையான வழிகளில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது என்றால் பிரதானமாக உணவுமுறையை மாற்றி அமைப்பதே நல்ல வழி. இதனை டயாபடீக் டயட் என்பார்கள். முடிந்தவரை காலை எழுந்ததும்  காபி – டீ குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு,  அருகம்புல் சாறு  எடுத்துக்கொள்ளலாம்.

அருகம்புல்லுடன்  சீரகம் சேர்த்து ஒரு டிகாக்ஷன் காய்ச்சிக் குடிக்கலாம்.  அருகம்புல்லுடன் சிறு துண்டு இஞ்சி , சிறு தேங்காய் துண்டு சேர்த்து  அரைத்து ஃபிரஷ் சாறாகவும் அருந்தலாம். ஊரவைத்து முளைக்கட்டிய  வெந்தயத்தைத்  தண்ணீர் சேர்த்து அரைத்து சாறாகக் குடித்துவரலாம். தினமும் காலை வேளையில் முதலில் இதை அருந்திவிட்டு  பிறகு டிபனுக்கு  வரலாம்.தினசரி மூன்று வேளையும் அரிசி சார்ந்த உணவையே எடுத்துக்கொள்ளாமல், ஒரு வேளை கேழ்வரகு, ஒரு வேளை கோதுமை, மதியத்தில்  அரிசி சாப்பாடு என்று எடுத்துக்கொள்ளலாம். முடிந்த அளவு   இரு வேளைக்கு சிறுதானிய உணவுகளை சேர்த்துக்கொள்வது நல்லது. அப்படி சிறுதானிய உணவு எடுத்துக் கொள்ள முடியவில்லை எனில் காலையில் ஐந்து இட்லி சாப்பிடுகிறீர்கள் என்றால், மொத்தமாகச் சாப்பிடாமல், காலை 8.30 மணிக்கு 3 இட்லியும், 10 மணி போல 2 இட்லியும் சாப்பிடலாம்.  அப்படி 10 மணிக்கு இட்லி சாப்பிட முடியவில்லை என்றால், அந்த நேரத்தில் ஒரு கொய்யாவோ அல்லது வெள்ளரிக்காயோ, பச்சையான கேரட்டோ, முளைக்கட்டின பச்சைப் பயறோ சிறிது மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம். இல்லை என்றால்  ஆரஞ்சு, சாத்துக்குடி, பைனாப்பிள் இவற்றில் ஏதாவதொரு பிரஷ் ஜூஸ் குடிக்கலாம்.

இல்லையென்றால், இனிப்பு சேர்க்காமல் மிளகும் உப்பும் சேர்த்த  எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். இல்லையென்றால்  வெந்தயத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு  மோரில்  சிறிது சேர்த்து குடித்து வரலாம். அதுபோன்று காலை சிற்றுண்டிக்கு தொட்டுக் கொள்ள வைக்கப்படும் பொட்டுக்கடலை சட்னி,  தேங்காய் சட்னி போன்றவற்றுக்குப் பதிலாக, கொத்துமல்லிச் சட்னி, கறிவேப்பிலை, புதினா சட்னி போன்றவற்றைச்  சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடலுக்குத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட், இரும்புச்சத்து, கால்சியம் கிடைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. இந்தவகையில், சிறுதானிய உணவுகள்,  கீரை வகைகள் போன்றவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது ஒரு பரிபூரணமான ஊட்டச்சத்து நிறைந்த டயட் நமக்குக் கிடைக்கும். அதாவது கலோரியை அதிகமாக்கிக்கொள்ளாமல், உடலுக்குத் தேவையான  ஹெல்த்தியான எல்லாவித சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.

  இதனால்  உடல் சோர்வு ஆவதும் தடுக்கப்படுகிறது.மதியம் – மதிய உணவில் பெரும்பாலான வீடுகளில்   உணவில் உருளைக்கிழங்கும் வாழைக்காயும் சேர்க்கப்படுகின்றன. ஆனால், சர்க்கரை நோயாளிகள்  மாவுச்சத்து அதிகமுள்ள  காய்கறிகள், பழ வகைகளைத்  தவிர்க்க வேண்டும். மாவுச்சத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க  ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் அதிகமாகிக்கொண்டே போகும். அதனால், சாப்பாட்டின் அளவை குறைத்துக் கொண்டு, நீர் சத்தும், நார்ச்சத்தும் அதிகமுள்ள காய்கறிகளான அவரைக்காய், பீன்ஸ்,   கோவக்காய்,  பாகற்காய்,  வெண்டைக்காய் போன்றவையும் அதுபோன்று நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களான சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், செளசெள, முட்டைகோஸ், வெண்பூசணி போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காயையும் நிறைய வைத்துச் சாப்பிடலாம்.  அதாவது, சாப்பாட்டின் அளவுக்கு காயையும், காயின் அளவுக்கு சாப்பாட்டையும் வைத்து சாப்பிட வேண்டும்.

இப்படிச் சாப்பிடும்போது வயிறும் நிறையும்,  அரிசியில்  உள்ள மாவுச்சத்தும் அதிகரிக்காமல் இருக்கும். சாப்பாட்டுடன்  தினசரி  சிறிது மோர் அருந்துவதும் நல்லது. மதிய சாப்பாட்டில்  வாரத்தில் மூன்று நாட்கள்  கட்டாயமாக  ஏதாவது ஒரு கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும். அரைக்கீரை, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, வெந்தயக்கீரை என ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது நிச்சயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.சிலர் காலையில் கஞ்சி மட்டும்தான் குடிப்பார்கள்.

இதுவும் தவிர்க்க வேண்டிய ஒன்று. அதிலும் சர்க்கரை உள்ளவர்கள்  இதுபோன்று  நீர்த்த கஞ்சியாக இல்லாமல்,  சற்று திடமான உணவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், மாத்திரை உட்கொள்வதால், கஞ்சியின் அளவு போதுமானதாக இருக்காது.   இது  நீராகரமாக இருப்பதால் விரைவில் செரிமானமாகி விரைவில் பசி எடுக்க தொடங்கிவிடும். அப்போது பசி நேரத்துக்கு என்ன கிடைக்கிறதோ அதை நாம் சாப்பிட தொடங்கி விடுகிறோம். இதுவே சர்க்கரையின் அளவு அதிகரிக்க முக்கியமான காரணமாகிவிடுகிறது.  கஞ்சியைப் பொருத்தவரை காபி, டீக்கு பதிலாக குடிக்கலாம். ஆனால், டிபனுக்கு பதில் நிச்சயம் கஞ்சியைக் குடிக்காதீ்ங்க.மாலைச் சிற்றுண்டி – மாலை நேர சிற்றுண்டி புரதச்சத்து நிறைந்துள்ளதாக இருந்தால்  மிகவும் நல்லது. அதாவது, முளைக்கட்டிய பச்சைப்பயறு, கருப்புக் கொண்டைக்கடலை, வெள்ளைக் கொண்டைக்கடலை, காராமணி இதில் ஏதாவது ஒன்றை  வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம்.  

பெரும்பாலானவர்கள், இதுபோன்ற பயிறு வகைகள் எடுத்துக் கொள்ளும்போது,  வயிறு உப்புசமாகி செரிமானக்  கோளாறு ஏற்படுகிறது, இரவில் சரியாக சாப்பிட முடியவில்லை ஆனால்  பாதி ராத்திரியில்  பசி வந்துவிடுகிறது என்று சொல்கிறார்கள். இதை தவிர்க்க, இந்த மாதிரி பயிறு வகைகள்  எடுத்துக் கொண்ட பின் சீரகமும், இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்த  தண்ணீரை குடிப்பது மிகவும் பயன்தரும். வெறுமனே தண்ணீரை குடிக்க முடியாவிட்டால், அதனுடன் புதினாவோ அல்லது எலுமிச்சை சாறோ சேர்த்து குடிக்கலாம். இது வயிறு உப்புசம் ஆகாமல், செரிமானம் ஆவதற்கு உதவும். இரவு – இரவு உணவு எடுத்துக்கொள்ளும்போது,  காலை இட்லி, தோசை  சாப்பிட்டிருந்தால், இரவில்  சப்பாத்தி, கோதுமை தோசை, சம்பா கோதுமை ரவை கிச்சடி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

அதே சமயம் சப்பாத்தியுடன்  கிழங்கு வகைகளை சேர்த்துச் சாப்பிடாமல், ஏதாவது காய் பொரியல் செய்து வைத்துச் சாப்பிடலாம் அல்லது பாசிபருப்பு தால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லை தோசைதான் எடுத்து கொள்கிறீர்கள் என்றால், நான்கு  தோசைக்கு பதில்,  வெங்காயம், கேரட் எல்லாம் துருவிப் போட்டு திக்காக செய்து  இரண்டு  தோசை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். இந்தமாதிரியான டயட்டை  தொடர்ந்து கடைபிடித்தாலே  சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்துவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து!!(அவ்வப்போது கிளாமர்)
Next post நீரிழிவு நோயாளிகள் கவனிக்க…!! (மருத்துவம்)