வானவில் உணவுகள்!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 15 Second

உணவு நிறங்களுக்கான விதிமுறைகளும் சட்டங்களும்!

நாம் ஒவ்வொருவரும் கண்களால்தான் உணவை உண்கிறோம் என்று கூறலாம் அல்லவா? காரணம், உண்ணும் உணவின் மீதுள்ள விருப்பம், கண்ணால் பார்க்கும் நிறத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால்தான் பல நூறு வண்ணங்களை உணவுக்குக் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சாகும் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். இது இந்த உணவு நிறங்களுக்கும் பொருந்தும்.

உணவின் மீது அதிக ஈர்ப்பு வரும் பொருட்டு, அளவுக்கு அதிகமான உணவு நிறங்களைப் பயன்படுத்துவது, மனித உடலுக்குத் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், தரமற்ற உணவுகளைத் தரமான உணவுகள் போல் காட்டுவது, அந்த நிறமே நஞ்சாக மாறுவது, உருவத்தில் ஒற்றுமையுடைய வேறொரு உணவுப்பொருளுக்கு வண்ணம் சேர்த்து ஏமாற்றுவது போன்ற பல்வேறு தவறான
செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கிறது.

என்னென்ன உணவு நிறங்களை எந்தெந்த அளவில் உணவுச் சேர்மானமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தேசிய கன்பெக்சனரி அமைப்பு 1899 ஆம் ஆண்டில் ஒரு அறிக்கை கொடுத்தது. அதில் 21 உணவு நிறங்கள் தீமை ஏற்படுத்துவதாகவும், 33 உணவு நிறங்கள் தீமையற்றவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 1906-ல் உணவு மற்றும் மருந்துச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவு நிறங்கள் தடை செய்யப்பட்டன. இதன் விளைவாக, உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மூலமாக உணவு நிறங்களுக்கு அனுமதிச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது.

டெலானி சட்ட உட்கூறு (Delaney Clause)

உணவு நிறங்களின் சேர்மானம், அளவுகள், நன்மை தீமைகள் குறித்து முக்கியத்துவம் அதிகரித்ததால், 1959 ஆம் ஆண்டில் உணவு, மருந்து மற்றும் ஒப்பனை சட்டமும், 1960 ல் நிறங்கள் சேர்மானத் திருத்தச் சட்டமும் ஏற்படுத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல், Delaney Clause என்னும் ஒரு சிறப்பு சட்டப்பிரிவு நியூயார்க்கைச் சார்ந்த James Delaney என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறிப்பிடுவது என்னவென்றால், மனிதன் அல்லது விலங்குகள் என்று எவ்விதத்திலும், எதற்கும் அல்லது யாருக்கும் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணியுள்ள எந்த ஒரு உணவுச் சேர்மானமும் சேர்க்கப்படவோ, கலந்திருக்கவோ கூடாது என்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்பதாகும்.

இந்த சிறப்புப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு, உணவு நிறங்கள் மேலும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. சான்றிதழ் பெற்றவை மற்றும் சான்றிதழ் மறுக்கப்பட்டவை. சான்றிதழ் பெற்றவையில், நிரந்தர சான்றிதழ், தற்காலிக சான்றிதழ் என்றும் பிரிவுகள் உள்ளன. இவை மட்டுமல்லாமல், உணவு மற்றும் வேளாண் அமைப்பு மற்றும் உலக சுகாதார மையம் போன்றவை, உணவில் சேர்க்கப்படும் நிறங்கள் குறித்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உணவு விவரத் தகவல் பட்டியலில் (Food Labelling) உணவு நிறங்கள்

செயற்கை உணவு நிறங்கள் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஒரு உணவுப்பொருளை, கீழ்க்கண்ட தகவல்களை, அப்பொருளின் உணவு விவரத் தகவல் பட்டியலில் (Food label) குறிப்பிடாமல் அந்த உணவை விற்பனை செய்ய முடியாது.

1.உணவு நிறங்கள் என்று தனியாகக் குறிப்பிடப்பட வேண்டும். உணவு நிறத்தின் வேதியியல் அல்லது பொதுப்பெயர் மற்றும் அதில் கலக்கப்பட்டிருக்கும் உட்பொருள் குறித்த தகவல் இருக்க வேண்டும்.

2.உணவுச் சட்ட விதிமுறைகளில் கொடுக்கப்படாத எந்த ஒரு உணவு நிறமும் உணவுப்பொருளில் சேர்க்கக்கூடாது. உணவுப் பொருளில் சேர்க்கப்பட்ட நிறமி, இயற்கை உணவு நிறமா அல்லது செயற்கை உணவு நிறமா என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

3.இயற்கையும் செயற்கையும் அல்லாத, உலோகம் அல்லது கனிமப்பொருள் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உணவு நிறங்கள் பயன்படுத்தக்கூடாது. அனுமதிக்கப்பட்ட லேக் உணவு நிறங்களான அலுமினியம் மஞ்சள் அதன் உச்ச வரம்பான 0.04ppm (எடையளவிற்கு) மிகாமலும், உண்ணக்கூடிய உணவில் 4.4 ppm அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

4.உலர் நிலையில் இருக்கும் உணவு நிறங்கள், மீண்டும் திரவ உணவுகள் அல்லது பானங்கள் தயாரிப்பின்போது, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகள் குறிப்பிடப்
பட்டிருக்க வேண்டும்.

5.உணவுப் பொருளில் சேர்க்கப்பட்டிருக்கும் உணவு நிறங்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட வேண்டும். உண்ணக்கூடிய நிலையில் இருக்கும் எந்த உணவுப்பொருளிலும், அதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை உணவு நிறமானது, 100 ppm அளவிற்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

உணவு நிறங்களின் சேர்மானத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள்

ஐஸ்கிரீம், பால் சாக்லேட், உறைநிலை இனிப்புகள், வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட பால் உணவுகள், ஐஸ்கிரீம் மிக்ஸ் பொடி, பிஸ்கெட்டுகள் மற்றும் அதன் அனைத்து வகைகளும், கேன்டிஸ் எனப்படும் கடினத்தன்மையுள்ள சர்க்கரை சார்ந்த இனிப்புகள் பச்சைப் பட்டாணி, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பப்பாளி, கொள்கலனில் அடைக்கப்பட்ட தக்காளி ஜூஸ், பழச்சாறுகள், பழக்கூழ், பழத்தோல் இனிப்புகள், ஜெல்லி இனிப்புகள், ஜாம் வகைகள், குடிப்பதற்குத் தயாராக இருக்கும் ஆல்கஹால் கலக்காத குளிர்பானங்கள், சர்பத் வகைகள், பழக் கட்டிகள், பழத்தில் தயாரிக்கப்பட்ட பிற பானங்கள், செயற்கை பழ வாசனை அடங்கிய அடர் திரவக் கலவைகள், கஸ்டர்ட் பொடி, கூழ்ம நிலையிலுள்ள பழங்கள் அல்லது நட்ஸ் கலந்த பானங்கள் போன்றவற்றில் உணவு நிறங்கள் சேர்ப்பதற்கு அனுமதி உண்டு.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தின் விதிமுறைகள் (FSSAI))

இந்திய உணவுகளுக்காக இந்த அமைப்பு கொடுத்துள்ள உணவு நிற சேர்மான விதிமுறைகள் அனைத்தும் “Colouring Matter” என்ற தொகுப்பில், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் உணவுச் சேர்மானங்கள் ஒழுங்குமுறைச் சட்டம் 2011 என்பதன் கீழ் தரப்பட்டுள்ளது. இயற்கை உணவு நிறங்களானாலும், செயற்கை உணவு நிறங்களானாலும், இந்த அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, மனித உயிருக்குத் தீங்கிழைக்காதவாறு சேர்க்கப்பட வேண்டும்.

Erythrosine உணவு நிறம் சேர்க்கும்போது, பொருளின் எடைக்கு 87% குறையாமலும், உலர் நிலையில் 13%-க்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். கனிம அயோடின் 0.2%-க்கு அதிகமாகாமலும், ஈயம், ஆர்சனிக், துத்தநாகம் போன்ற கன உலோகத் தாதுக்கள் அதன் எடைக்கு முறையே 10, 3, 50 மற்றும் 40 மில்லி கிராமுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். உணவு நிறம் சேர்க்கும்போது, எவ்விதத்திலும் பாதரசம், தாமிரம், குரோமியம், சயனைடு போன்ற வேதிப் பொருட்கள் இருக்கக்கூடாது.

உலக நாடுகளில் உணவு நிறங்களுக்கான விதிமுறைகள்

உணவு நிறங்களின் சேர்மானத்திற்கு, ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. கனடா மற்றும் ஐக்கிய நாடுகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான விதிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. கனடாவில் அனுமதிக்கப்பட்ட உணவு நிறத்திற்கான சான்றிதழ் கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

மெக்சிகோவில் அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் விதிமுறைகளை ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு இல்லாத நிலையில், Codex, ஐரோப்பிய கூட்டமைப்பு அல்லது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விதிமுறைகளைப் பின்பற்ற அனுமதி உண்டு. சீன உணவுகளுக்கான நிறங்களின் விதிமுறைகள் GB 2760-2011 என்ற வகைப்பாட்டின் கீழ் வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் அதன் நன்மை தீமை குறித்த அறிவியல் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஐப்பானில், உணவு நிறங்கள் சேர்க்கப்படும் உணவுப்பொருட்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, உடல் நலனுக்குத் தேவையான சிறப்பு உணவுகள் (FOSHU) மற்றும் ஊட்டச்சத்து செயல்பாடுகளை உள்ளடக்கிய உணவுகள் (FNFC). கொரிய நாட்டின் உணவுநிறங்களின் விதிமுறைகள் சற்று வித்தியாசமானவை. துரித உணவுகள் மற்றும் ரெடிமேட் உணவுகளிலிருந்து குழந்தைகளைக் காக்கும் பொருட்டு, பள்ளிகள் இருக்கும் வளாகத்தைச் சுற்றியும் 200 மீட்டர் தொலைவில் இப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று விதிமுறைகளைக் கொடுத்துள்ளது.

இந்த வரையறைக்குள் வரும் இடங்கள் “Green Food Zone” (பசுமை உணவுப் பகுதி) என்றழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் விதிமுறைகள் “Australia New Zealand Food Standards”” என்பதன்கீழ் Alimentarious கொடுத்துள்ள விதிமுறைகளையும் பின்பற்றுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பால் + கலந்து களிப்போம்! (மருத்துவம்)
Next post அவசியமா ஆண்மை பரிசோதனை?(அவ்வப்போது கிளாமர்)