சுவை உப்புகள் உஷார்! (மருத்துவம்)
உலகளவில் உணவின் கூடுதல் சுவைக்காக மோனோசோடியம் குளூட்டோமேட் சேர்க்கப்படுகிறது. இதனை அஜினோ உப்பு என்று சொல்வார்கள். இந்தியாவை பொருத்தவரை, அஜினோமோட்டோ குறித்து பல்வேறு ஐயங்கள் உள்ளன. இது உடலுக்குக் கேடு விளைவிக்க கூடியது என பேசப்பட்டு வந்தாலும் ஒருபுறம் இந்திய உணவுகள் பலவற்றில் இன்றும் மோனோ சோடியம் குளூட்டேமேட் பயன்படுத்தப்பட்டுதான் வருகிறது.
பொதுவாக, சீனர்கள்தான் அவர்களது உணவுகளின் சுவைக்காக அதிகளவில் இதனைப் பயன்படுத்திவந்தனர். பின்னர், சீனாவின் பாரம்பரிய உணவுகளான நூடுல்ஸ், சூப், ஃப்ரைட் ரைஸ் போன்ற உணவுகள் மூலம் ஆசிய கண்டம் முழுவதும் இது பரவியது. தொழில் நுட்பரீதியாக பார்க்கும்போது இது சோடியம் மற்றும் குட்டமிக் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் கலவையாகும். மேலும் இவை தாவர உணவுகளான சர்க்கரைவள்ளி கிழங்கு, கரும்பு, சோளம் போன்றவற்றில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது.
இதனைப் பொறுத்தவரை குறைந்த அளவில் பயன்படுத்தும்போது பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் அதிகப்படியான பயன்பாடானது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். உண்மையில் இதில் உள்ள குளுட்டமிக் அமிலமானது மூளையில் நரம்பு கடத்தியாக செயல்படுகிறது. இதனால் தீங்கு விளைவிக்க கூடியது என பலர் நம்புகின்றனர். ஏனெனில் குளுட்டமிக், நரம்பு செல்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதை நிரூபிக்க எந்த ஆய்வுகளும் இல்லை.
இதனை அதிகமாக எடுத்துக் கொள்வது உடலில் வியர்வை பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இது, உடலில் நீரிழப்பு, சோர்விற்கு வழி வகுக்கிறது. மேலும் இது சிலருக்கு வயிற்றில் எரியும் உணர்வை ஏற்படுத்தும். இது குடலில் அமிலத் தன்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இதனால் ஒட்டு மொத்த செரிமான அமைப்பிலும் பிரச்னை ஏற்படுகிறது. அதுபோன்று, அதிகப்படியாக இதனை உண்பது ரத்த அழுத்தத்தின் ஏற்ற இறக்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் ஒற்றை தலைவலி அல்லது கடுமையான தலைவலி ஏற்படுகிறது.
இதில் உள்ள மோனோசோடியம் குளுட்டமேட்டானது தூங்கும்போது சுவாச பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இதனால் அஜினோமோட்டோ அதிகம் உண்பவர்கள் குறட்டை பிரச்னைகளுக்கு ஆளாவதற்கு வாய்ப்பு உள்ளது. அதிர்ச்சியூட்டும் விதமாக ஓர் ஆய்வில் இதனை அதிகமாக எடுத்துக்கொள்வது புற்றுநோய் செல்களை இனப்பெருக்கம் அடைய செய்வதோடு பெருங்குடல் புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என கூறப்பட்டுள்ளது.