சிறுகதை-கட்ட துரைக்கு கட்டம் சரியில்லை! (மகளிர் பக்கம்)

Read Time:20 Minute, 12 Second

அலாரத் தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு…கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தவர்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம் கேட்டு புரண்டு படுத்த அலமு…‘‘எதையும் ஒழுங்கா பண்ண தெரியாதா? காலங்கார்த்தால எதையாவது உடைச்சி வைக்கணுமே உங்களுக்கு” என வழக்கமாக பாடும் அதே பல்லவியை அலுத்தபடியே பாடி தூக்கத்தை தொடர்ந்தாள். அலமு திரும்பி படுத்ததில் அவளது கணத்த சரீரம் பட்டு நாலைந்து கொசுக்கள் சப்பையாக நசுங்கி போனது..

சுப்பு பேஸ்டை எடுத்து பிரஷில் வைக்க முயல , அது வெளியில் வராமல் அழிச்சாட்டியம் பண்ணியது. தன் பலம் அனைத்தையும் திரட்டி அழுத்தி பிதுக்க மொத்த பேஸ்டும் தரையில் விழுந்து வைக்க… அவசரமாக தண்ணீரை பிடித்து ஊற்றினால், போகமாட்டேன் என அடம்பிடித்து பேஸ்ட் தரையை கவ்வி பிடித்தது. அலமு எழுந்து கொள்ளும் முன் தடயத்தை அழிக்க நினைத்த சுப்பு பாத்ரூம் துடப்பத்தை எடுத்து நிமிர மேலிருந்த ஸ்டேண்டில் தலை இடிக்க ஷாம்பு பாட்டில் கவிழ்ந்து விழுந்தது..ஷாம்பு தரையில் கோலமிட்டபடி ஜல்லடை நோக்கி ஓட…அடச்சே! ‘‘நேரமே சரியில்லை” என தண்ணீர் பிடித்து ஓயாமல் கழுவியும் பாத்ரூம் பூரா நுரை பொங்கி வழிந்தது. பாத்ரூம் முழுக்க ஷாம்பு மணம் எக்ஸாஸ்ட் பேனை போட்டும் அடங்கவில்லை. அலமுவுக்கு சாதாரணமாகவே நுகரும் சக்தி அதிகம். எதையும் கண்டுபிடிக்காமல் விடமாட்டாளே என்ற பதட்டத்துடனேயே பல்லை துலக்கி முடித்தார்.

துடப்பத்தோடு போராடியதில் ஒரு காபி குடித்தால் தேவலாம் போல இருந்தது. அலமுவை எழுப்ப பயமாக இருந்தது. தூக்கத்தில் எழுப்பினாள் அமர்க்களம் பட அஜீத் போல திட்டி தீர்த்துவிடுவாள். பேஸ்டையும் ஷாம்புவையும் கொட்டியதை உடனே மோப்பம் பிடித்து விடுவாள் என பயம் வந்தது. ‘‘ஒரு காரியத்தையும் ஒழுங்கா பண்ண துப்பில்லை” என வசவு வேறு வக்கணையாய் வைப்பாள். காலையிலேயே அவள் வாயில் விழுவானேன்.. சிங்கத்தின் கூண்டில் தலையை விடுவானேன் என தனக்குத் தானே காபியை போட முடிவு செய்தார்.
வாசல் கேட்டை திறந்து பால் பாக்கெட்டை கட் செய்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தார். பொங்க எப்படியும் ஐந்து நிமிடம் ஆகும். அதுக்குள்ள மொபைலை சார்ஜ் செய்துவிடலாம் என நினைத்து போனார்.

மொபைலின் சார்ஜரை தேடி எடுத்து சொருக, ‘‘டொய்ங்…” என மெசேஜ் டோன் வந்து விழுந்தது. சுப்புவின் நண்பர்களான குப்புசாமியும் ஏகாம்பரமும் இன்னும் சில வழக்கமான நிலைய வித்வான்களும் ‘‘காலை வணக்கம்” அனுப்பியிருந்தார்கள். அடடா… மறந்தே போச்சே என அவர்களுக்கு பதில் வணக்கம் அனுப்ப ஷேர்சாட்டில் நல்ல போட்டோவை தேடினார். தான் தினமும் அனுப்பும் லிஸ்டில் மேலும் பலரை சேர்த்து காலை வணக்கத்தை அனுப்பி வைத்தார்.

அப்போதுதான் அவருக்கு மனம் நிம்மதியானது. காலையில் சூசூ போகிறாரோ இல்லையோ… எழுந்ததும் முதல் வேலையாக ஒரு ஐம்பது பேருக்காவது ‘‘காலை வணக்கத்தை” அனுப்பாவிட்டால் அன்றைய பொழுது நற்பொழுதாக விடியாது சுப்புவிற்கு. ஏதோ கெட்ட வாடை மூக்கை நெருட!.. அடடா! மறந்து போச்சே!.. என கிச்சனுக்குள் ஓட… மொத்த பாலும் சமையல் மேடையிலிருந்து வழிந்து தரையில் கோலமிட்டிருந்தது… பாத்திரம் வேறு காலியாகி அடிப்பிடித்து கருப்பாக இருந்தது. ‘‘ஐய்யய்யோ” என அலறியபடி வெறும் கையால் பாத்திரத்தை அவசரமாக எடுக்க கை சுட்டு உதறியபடி அவரையும் அறியாமல் கத்திவிட்டார். அலமு பார்த்தால் அவ்வளவுதான் என பயந்து தரையில் வழியும் பாலை மாப் போட்டு துடைத்து மாப்பை பால்கனியில் வைத்தார்.

பாத்திரம் வேறு தாரில் விழுந்து எழுந்த ஃபிரண்ட்ஸ் பட வடிவேலுவின் முகம் போல பயமுறுத்தியது. இதை எப்படி தேய்ப்பது என யோசித்தபடியே சட்டென நினைவு வர… மொபைலை தேடி ஓடினார். குழாய் (யுட்யூப்) காணொலியை அழுத்தி ‘‘தீய்ந்த பாத்திரத்தை பளிச்சென ஆக்குவது எப்படி..?” என்ற வீடியோவை அவசர அவசரமாக தேடியலைந்தார். அப்போதுதான் மொபைலில் சன்னி லியோன் வந்து சைடில் நின்று சிரித்துக் கொண்டிருந்தாள். இப்போதுதானா இவள் வரவேண்டும்… இவளுக்கு நேரங்காலமேயில்லையா? கடன்காரி என அலுத்த சுப்பு, சன்னியை புறந்தள்ளி தீய்ந்த பாத்திர வீடியோவை தேடினார். அப்படியும் கிடைத்த வீடியோக்கள் ஒன்றும் உருப்படியாய் தேறவில்லை…

எலுமிச்சம்பழ ஜூஸில் ஊறவைத்து தேய்க்கவும், சுடுதண்ணீர் ஊற்றி ஒருமணி நேரம் ஊற வைக்கவும் என நேரங்காலம் புரியாமல் கழுத்தறுத்தது. அதற்கெல்லாம் நேரமில்லை அலமு எழுந்து வந்தால் வீட்டில் பூகம்பமே வெடிக்குமென தோன்றியது. பயத்தில் வியர்த்து வழிய வெறித்தனமாக வீடியோவை தேடியலைய சட்டென அகப்பட்டது எவனோ ஒரு புண்ணியவான் ‘‘மனைவியிடமிருந்து தப்புவது எப்படி?” என வீடியோவை போட்டிருந்தார்.

சட்டென சுப்புவின் முகம் புன்னகைபூக்க வீடியோவை ஓடவிட்டு நிம்மதியடைந்தார். தீய்ந்த பாத்திரங்கள் தேய்ப்பதை விட மனைவிக்கு தெரியாமல் அதனை தூக்கி எறிந்து விடும் வழிமுறையே
மிகவும் எளிதானது என புத்தியில் உறைக்கும்படி வீடியோவில் உரைத்திருந்தார் அந்த அனுபவசாலி பெரிய மனிதர். வேகமாக வந்து சமையலறையில் நுழைந்து கரிகட்டையான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தபதபவென மாடியில் ஓடி பின்புற குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தார். அப்பாடா! என அப்போதுதான் அவரது மனம் நிம்மதியடைந்தது.

கீழே வந்தவர் வீட்டினுள் நுழைந்ததுமே நாசியினுள் தீய்ந்த வாடை வந்து தொலைய…அடச்சே!.. என நான்கு ஊதுபத்தியை கொளுத்தி வைத்தார்.
எதுவும் தெரியாதவர் போல அமைதியாக வந்து கட்டிலில் படுத்துக்கொண்டார். சீக்கிரமே எழுந்ததெல்லாம் ஒரு குத்தமாய்யா? என மைண்ட் வாய்ஸ் அலற தன்னையே
நொந்து கொண்டார்.

அலமு விழித்து எழுந்து பல் துலக்க பாத்ரூமில் நுழைய… ‘‘ஏங்க! பேஸ்ட் பாதிதான் இருக்கு..நேத்துதான் முருகன் கடையில் வாங்கி வந்தேன்” என கத்தியபடி ஓடி வந்தாள்.
‘‘இந்தக் காலத்துல யாரும்மா நேர்மையா வியாபாரம் செய்யுறாங்க… எல்லாமே ப்ராடுதானே” என்றார். ‘‘இல்லையே… பேக்கெட் பிரிக்காம தானே வாங்கினேன்” என தனது மண்டையை தட்டி யோசிக்க…

சட்டென ‘‘பேஸ்டை பாதி எடுத்துட்டு பேக் பண்ணியிருப்பான்… அவன் முழியே சரியில்லை’’ என சமாளித்தார்.‘‘வேணும்னா… சந்தேகமாக இருந்தா ஷாம்பு பாட்டிலையும் பாத்துரேன்” என எடுத்து கொடுக்க… ‘‘அட ராமா!… ஆமாம்ங்க இனிமேல் அவன் கடையில் வாங்கவே கூடாது” என கோபமாக கத்தியபடி பல்லை துலக்கினாள்.
அப்பாடா! தப்பித்தோம்! பாதி கிணறு தாண்டியாச்சு என தலையில் கை வைத்தபடி நிம்மதியாக சாய்ந்து கொண்டார்.

வெளியே வந்த அலமு…‘‘இதென்ன காலங்காத்தால ஊதுபத்தியை ஏத்தி வைச்சிருக்கீங்க” என சந்தேகமாக பார்க்க…
அது … வந்து… ‘‘காலையில் தெய்வீக மணம் மூளைக்கு நல்லதுன்னு படிச்சேன்மா…”
‘‘யார் மூளைக்கு..?’’
‘‘என் மூளைக்கு தாம்மா” என மென்று விழுங்கினார்.

‘‘அதுசரி… அதுக்கு ஏன் குளிக்காம கொள்ளாம ஏத்தி வைச்சீங்க..?”
‘‘அது… வந்து… குளிக்காம ஏத்தினா வீட்ல தீயசக்திகள் போகும்னு சொன்னாங்க அதான்…”
‘‘யார் சொன்னாங்க”?…
‘‘வாட்சாப்ல வந்ததும்மா!’’ என்றார் பரிதாபமாக…

‘‘என்னவோ…இன்னைக்கு ஒன்னும் சரியில்லை”… என சுப்புவை சந்தேகமாக
முறைத்துவிட்டு பால் பேக்கை துழவினாள்.
‘‘ஏங்க!… பால் பாக்கெட்டை எடுத்தீங்களா? ’’
‘‘இல்லியே”…

‘‘பாலை காணோம்ங்க”….
‘‘தெரியலையேம்மா”…
‘‘எனக்கு… அ..ந்..த எதிர்வீட்டு சரசு மேலதான் சந்தேகம்… அவதான்
எடுத்திருப்பா”…
‘‘ச்சோ… தெரியாம எதையும் சொல்லக்கூடாது… அவ அப்படி செய்யக்கூடியவ இல்லை அலமு”…
‘‘ஆமாம்… சரசுவை சொன்னா உமக்கேன் இவ்ளோ கோபம் வருது”… என இடுப்பில் கையூன்றியபடி முறைத்தாள் அலமு.
‘‘ச்சே… ச்சே என்னை அப்படி பாக்காதடீ அலமு… சரசு எனக்கு தங்கச்சி மாதிரி”…

‘‘இப்ப பாலுக்கு என்ன வழி… அந்த பால்காரரை கேட்டு பாக்கலாமா? பாலை போட்டாரா இல்லியான்னு? அந்த போனை எடுங்க”…
‘‘அதெல்லாம் காலையிலே கேட்டேன்…போட்டுட்டாராம்”… ‘‘என்னாது… காலையில கேட்டீங்களா? நீங்க ஏன் கேட்டீங்க..அப்ப பால் இல்லைன்னு உங்களுக்கு எப்டி தெரியும்” என அலமுவின் கிடுக்கிப்பிடி இறுக்கியது சுப்புவை ‘‘இதோ பார் அலமு…இப்டி மடக்கி மடக்கி குத்தவாளி மாதிரி கேட்டா…நான் எப்படி சொல்லுறது….யோசிக்க வேணாமா…கொஞ்சம் டயம் குடேன்”…என பரிதாபமாக கெஞ்சினார்..

ஒருமாதிரியாக சந்தேகமாக பார்த்தவள் ,‘‘சரி சொல்லுங்க…ஏன் எதுக்கு எப்ப கேட்டீங்க?”
‘‘காலையில் நீ அசந்து தூங்கிண்டிருந்தே சரி பாலை காய்ச்சி வைச்சா உனக்கு உபயோகமாக இருக்கும்னுட்டு… தேடினேன் காணலை”…
‘‘அதுசரி…இதை நான் கேட்டப்பவே ஏன் சொல்லலை…தெரியலைன்னுதானே
சொன்னீங்க”…

‘‘அலமு… அப்படி பாக்காதடீ… நான் ஏதோ தூக்க கலக்கத்துல உளறிட்டேன்”…
‘‘இல்லை… நீங்க எப்பவுமேதான்
உளர்றீங்க”…

‘‘சரி… விடு வேற பால் வாங்கிக்கலாம்”…
‘‘ஒன்னும் வேணாம்… போங்க… நான்
கிரீன் டீ போடறேன்”…
‘‘அப்பாடா!… என மூச்சை இழுத்து விட்டவர்..

‘‘ஏங்க… இங்க நைட் பால் பாத்திரம் கழுவி கவுத்து வைச்சிருந்தேனே பாத்தீங்களா?’’
மறுபடியும் விட்ட மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினார் சமையலறைக்கு…
‘‘எலி எங்கையாவது இழுத்து வைச்சிருக்கா.. பாரேன் அலமு… நைட்டெல்லாம் ஒரே
சத்தம் கேட்டது”…

‘‘இருக்காதே… நான்தான் ஜன்னலை
எல்லாம் இறுக்கி சாத்தி வைச்சிருந்தேனே எப்படி எலி வரும்”…
‘‘நான் தான்மா காத்து வரலைன்னு ஜன்னலை திறந்து வைச்சேன்” என மென்னு முழுங்கினார்.

‘‘என்னது…பெட்ரூம்ல காத்து வரலைன்னு கிச்சன் ஜன்னலை திறந்து வைச்சீங்களா? என்ன உளர்றீங்க?’’
‘‘அதான் நான் எப்போதும் உளர்வேன்னு உனக்கே தெரியுமேடீ அலமு” என அசடு வழிந்தார்.‘‘அப்படியே இருந்தாலும் அதெப்படி அவ்வளவு பெரிய பாத்திரத்தை எலி இழுத்துட்டு போகும்”… என்ன கதை விடுறீங்க… ‘‘அதெல்லாம் இழுக்கும். போனவாரம் என் ஃபிரெண்ட் குப்புசாமி வீட்ல அண்டாவை காணோம்ன்னு சொன்னாங்க தெரியுமா?
அண்டாவை எலிதான் இழுத்துட்டு போச்சாம்…”

‘‘உங்க ஃப்ரண்டாச்சே… அண்டாவை அடகு வைச்சிட்டு எலி மேலே பழியை போட்டிருப்பார் அந்த குப்புசாமி”…
‘‘என்னடீ அலமு… பால் பாத்திரத்தை அடகு வைக்க முடியுமோ?’’ என பரிதாபமாக
கேட்டவரை…

‘‘தொலைஞ்சி போங்க… காலையிலிருந்து எதுவுமே சரியில்லை… எனக்கு க்ரீன் டீயும் வேணாம்… ஒரு மண்ணும் வேணாம்”…
‘‘கோவிக்காதடீ அலமு..நான் வேணா தெருமுக்கு கடையில் டீயும் பட்டர் பிஸ்கெட்டும்
வாங்கிட்டு வரட்டுமா?’’

‘‘இதென்ன புதுசா இருக்கு… இதுல ஏதும் வில்லங்கமில்லியே…’’
‘‘ச்சே… என்ன அலமு… இப்படி சொல்ற..?’’
‘‘சரி… எதையாவது வாங்கிட்டு வந்து
தொலையுங்க பசிக்குது…’’

‘‘அப்பாடா… தப்பிச்சோம்டா சாமி” என டீ வாங்கும் சாக்கில் வெளியே ஓடி வந்தார் வேக வேகமாக…
‘‘அப்பாடா! … எவ்வளவு கேள்விங்க?… என்ன பொழப்புடா இதெல்லாம்? என அவருக்கே அவரை நினைத்தால் பரிதாபமாக தோன்றியது…
‘‘என்ன சுப்பு… காலையிலேயே இவ்ளோ தூரம்”என்றார் குப்புசாமி டீக்கடையில் டீ
குடித்தபடி…

நடந்ததை விளக்கினார் சுப்பு..
‘‘எப்படியோ தப்பிச்சிட்ட”…
‘‘அட.! ஆமாய்யா!… என்னா கேள்விங்குற.?… வளைச்சி வளைச்சி கேக்குறா?’’
‘‘பின்ன பொண்டாட்டி ன்னா சும்மாவா? இதுலயெல்லாம் டாக்டரேட்டே வாங்கியிருப்பாங்க”…
‘‘ஆனா, நான் புத்திசாலித்தனமா எப்படியோ சமாளிச்சுட்டேன்ல”…

‘‘சமாளிச்சிட்டேன்னு சொல்லு… அதென்ன புத்திசாலித்தனமா… அதுக்கும் உனக்கும்தான் சம்பந்தமேயில்லியே”என கலாய்த்தார்
குப்புசாமி…
முறைத்தார் சுப்பு…
‘‘சரி, கோச்சிக்காத… சூடா வடை
போட்டிருக்காங்க பாரு… வாங்கிட்டு போ…
சாப்பிட்டதும் ஜில்லுன்னு ஆகிடுவாங்க”…

டீயோடு பட்டர் பிஸ்கெட்டும், சூடான வடையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த சுப்புவை, இடுப்பில் கையூன்றியபடி கொடூரமாய் முறைத்தாள் அலமு.
‘‘பாலை என்ன பண்ணீங்க?… மரியாதையா சொல்லித் தொலைங்க… எனக்கு கெட்ட கோவம் வரும்…”
‘‘எனக்கெதும் தெரியாதுடீ அலமு”…

‘‘சும்மா நடிக்காதீங்க!.. எனக்கெல்லாம் தெரிஞ்சி போச்சி!.. உண்மையை சொன்னீங்களோ தப்பிச்சீங்க… இல்லைன்னா நான் பொல்லாதவளா ஆகிடுவேன்”என தனது முட்டை கண்களை உருட்டி மிரட்டினாள். ‘‘சாரிடீ அலமு… பாலை அடுப்பில் வைச்சிட்டு உள்ளே வந்தேனா… அது சட்டுன்னு
பொங்கி போய்டுச்சி”… ‘‘சட்டுனு அடுப்பை அணைச்சி தொலைக்க வேண்டியதுதானே”…
‘‘நா..ன்…உ..ள்..ள இருந்தேனா அ..துக்குள்ள மொத்தமா பொங்கிட்டுது”…
‘‘ஆமா பால் பாத்திரம் எங்க?’’

‘‘கருகிடுச்சி… அதான் வீசிட்டேன்… கோவிக்காத அலமு புது பாத்திரம் வாங்கித் தரேன்டீ”…
‘‘அச்சோ… அது எங்க பாட்டி எனக்கு சீதனமா கொடுத்தது… அவங்க ஞாபகமா வைச்சிருந்தேனே…ச்சே!… ஒரு காரியத்தையாவது உருப்படியா செய்ய துப்புருக்கா இந்த மனுஷருக்கு… உங்க அம்மா எதையும் கத்து குடுக்காம, இப்படி என் தலையில் கட்டிட்டு போயிட்டாளே!… எல்லாம் என் தலையெழுத்து’’ என வழக்கமாக பாடும் பல்லவியுடன் சரணத்தையும் நான்கைந்து பிட்டுகள் சேர்த்து அழுது புலம்பி மூக்கை சிந்தினாள்…

‘‘அழாதே அலமு… உனக்கு புதுசு வாங்கி தந்துடுறேன். ஆனா, ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டேன்… இல்லாட்டா எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு”…
என்ன என்பது போல் முறைத்து பார்த்தாள் அலமு…

‘‘இந்த பாலை கொட்டியது நான்தான்னு எப்படி கண்டுபிடிச்சே… அதை மட்டும் சொல்லிடேன்… ப்ளீஸ்”… ‘‘க்கும்”!.. என முறைத்தவாறு அவள் காட்டிய திசையில் சரியாக கழுவாமல் மாப் ஸ்டிக்கில் இருந்த பால் வழிந்து பால்கனியில் கோலம் போட்டு வைத்திருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வருமான வரி கட்டுமளவுக்கு உயர்ந்தேன்!! (மகளிர் பக்கம்)
Next post ங போல் வளை-யோகம் அறிவோம்! (மருத்துவம்)