ங போல் வளை-யோகம் அறிவோம்! (மருத்துவம்)

Read Time:12 Minute, 55 Second

இந்தக் கட்டுரையைப் படிக்கத்தொடங்கும் முன் சற்று தலையைத் தூக்கி உங்கள் எதிரிலிருக்கும், பொருட்களை, நீங்கள் அணிந்திருக்கும் உடையை அல்லது மோதிரத்தை அல்லது உங்கள் அறையை சிறிய பொம்மையை பாருங்கள். அதன் வடிவம், அளவு, கணம், இலகுத்தன்மை, கச்சாப்பொருள் என அனைத்தும் இந்தப் படைப்பு உருவாவதற்கு முன்னர் என்னவாக இருந்தது? அந்த பொம்மையின் அழகும், இந்தத் தண்ணீர் பாட்டிலின் வடிவம், எப்படி உருவானது?

இப்படி நம்மைச் சுற்றி இருக்கும் மொத்த வடிவங்களும் பொருட்களும் யாரோ ஒருவருடைய மனதில் ,ஆழத்தில் வடிவமாக இருந்து. அவருடைய கற்பனையில் எழுந்து நிஜத்தில் வடிவம் பெற்று நம் கைகளில் வந்து சேர்ந்திருக்கிறது.அப்படி அவர் கண்ட கற்பனை காட்சி அவருடைய மனக்கண்ணால் தொடர்ந்து பார்க்கப்பட்டு, மெருகேற்றப்பட்டு நிஜவடிவம் பெற்றுள்ளது.

நாம் விதவிதமான கற்பனைகளை வளர்த்துக்கொள்கிறோம். அதில் மகிழ்கிறோம். அதை அடையத் துடிக்கிறோம். நிகழாதபோது சோர்வடைகிறோம். இது உடல், மனம், உறவுகள், தொழில், செல்வம் என எல்லா நிலைகளிலும் நமக்கு அனுபவமாகிறது. எனினும், நம்முடன் இருக்கும் சிலர் அல்லது சாதனையாளர்கள் எப்படிப் பெருஞ்செயலைச் செய்து காண்பிக்கிறார்கள். வெற்றியடைகிறார்கள்? படைப்பூக்கத்துடன் ஒன்றை உருவாக்கி காட்டிவிடுகிறார்கள்? எப்படிச் சாத்தியமாகிறது?

அந்த வெற்றியை அவர்கள் திட்டமிட்டே அடைகிறார்களா? என்றால் ஒருவகையில் ஆம் என்றே சொல்ல வேண்டும். அதையும் தாண்டி, ‘கற்பனையில் இருக்கும் வெற்றியை ‘மனக்கண்ணில்’ காட்சியாகக் கண்டுவிடுகிறார்கள். அந்தக் காட்சியின் தத்ரூபத்தன்மை விரிய விரிய நிஜவாழ்வில் வெற்றிபெற்ற மனிதர் என்கிற நிலையை அடைகிறார்கள்.

உதாரணமாக, ஒரு காரை வடிவமைத்தவர், அதன் வடிவம், நிறம், நீள அகலம் உள் கட்டுமானம் என அனைத்தையும் முதலில் தன் கற்பனையில் கண்டிருப்பார். பின்னர் ஒவ்வொரு பகுதியாக மனக்கண்ணில் விரித்தெடுத்திருப்பார். இறுதியாக கார் முழுமையான வடிவம் பெற்று வெற்றிகரமாக ஓடத்தொடங்கியிருக்கும்.

இப்படித்தான் மனிதர்கள் உருவாக்கிய அத்தனைப் பொருட்களும் உபயோகத்திற்கு வந்துள்ளது.இந்த வெற்றிகரமான பொன்விதியை நமது விருப்பங்கள், லட்சியங்கள் போன்ற உயரிய காரணிகளுக்குக்கூட பயன்படுத்த முடியும் என்பது அகவயமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.வெற்றியாளர்கள் அனைவரின் சுயசரிதைகளிலும், உரையாடல்களிலும் இதை நாம் கேட்கமுடியும். எனில், இதை நாமும் செய்து பார்க்க முடியுமா? எங்கிருந்து தொடங்குவது? இதை நமது மரபு எப்படிக் கையாள்கிறது என்பதைச் சற்று ஆழ்ந்து தேடினால், இந்த பொன்விதி பற்றி மிகவிரிவாக பேசப்பட்டுள்ளது.

இந்தியப் புராணங்கள் முதல் வேத வேதாந்த, யோக நூல்கள் வரை அனைத்திலும் ‘ஹிரண்ய கர்ப்பம்’ அதாவது ‘பொன்முட்டை’ எனும் சொல் காணக்கிடைக்கிறது. பிரளய காலம் முடிந்து தன் படைப்புகள் அனைத்தையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்கிறது அந்த இறை. அது மீண்டும் படைப்புகளை நிகழ்த்தும் வரை ஒரு பொன்முட்டைக்குள் வைத்து, கிட்டத்தட்ட
அடைகாக்கிறது.

படைப்பும் இயக்கமும் ஏதுமற்ற அந்த நிலையே யோக நித்திரை என்கிறது மரபு. விழிப்புணர்வுடன் கூடிய அந்த நித்திரையில் மீண்டும் படைப்பை நிகழ்த்துவது பற்றிய கனவையும், திட்டத்தையும், தன் மனக்கண்ணில் காண்கிறது. இறையின் அந்த மனக்கண்ணில் தோன்றிய உருவங்கள்தான் நம் உலகும் , நாமும்.அந்த மனக்கண்ணுக்கு ‘சித்தாகாசம்’ என்று பெயர். நாம் அனைவரும் அந்த பிரமாண்டமான இயக்கத்தின் பிரதிநிதிகள் என்பதால் நமக்கும் சித்தாகாசம் இருக்கிறது. இங்கே காட்சியாக கண்ட அனைத்துச் செயல்களும், விதைக்கப்பட்ட நற்காரியங்களும் நிச்சயமாகவே நடந்தே தீரும் என்பது மரபின் நம்பிக்கைகளில் முதன்மையானது.

இதை யோகமரபு, மேலும் தெளிவாகவும் அனைவரும் முயன்று பார்த்து பலனடையும்படியும் முக்கியமான ஒன்றாகவும் மாற்றி அமைத்திருக்கிறது. சித்தாகாச தாரணா எனும் தாரணைப் பயிற்சி முறையும், பிரத்யாஹார பயிற்சிகளும், நாம் அடைய வேண்டிய இலக்கை மனக்கண்ணில் காண வழிவகை செய்கிறது. மனக்கண்ணில் கண்டுவிட்ட ஒரு காட்சி நிஜத்தில் நிகழ்வதற்கான சாத்தியங்களும் நம் பழக்கவழக்கங்கள், ஆழமான பதிவுகள், குணாதிசயங்கள் போன்ற பலதளங்களில் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

உதாரணமாக ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் ஒருவர், சரியான பயிற்சிகளைத் தேர்ந்தெடுப்பதும் அதைத் தொடர்ந்து செய்யவும் வேண்டும். சிலருக்கு இதில் உடலியல் சார்ந்த சவால்கள் இருக்கலாம் அவர்கள் முதலில் மனக்கண்ணால் பயிற்சிகளைக் கற்பனையாக செய்து ‘பார்த்து’ பழகிய சில நாட்களில் அதை நிஜத்திலும் செய்துவிட முடியும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

மூளை நரம்பியலின் ஆய்வாளரும் மேதையுமான விளையனுர் ராமசந்திரன் அவர்கள் ‘ வலது கை ‘துண்டுபட்ட ஒருவருக்குக் கற்பனையாக அசைக்க வைத்து மாபெரும் பரிசோதனைகளைச் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.உதாரணமாக சூரிய நமஸ்காரம் எனும் பயிற்சி யோக மரபின் ஒரு பொக்கிஷம், உடல், உளம் இரண்டுக்கும் ஆற்றலை வழங்கக்கூடிய பயிற்சி. சில பள்ளிகளில் சிகிச்சையாக இந்தப் பயிற்சியை வழங்குவதுமுண்டு. நாள்பட்ட நீண்ட கால நோய்களை குணமாக்கியுள்ளது.

எனினும் அதை அவ்வளவு துல்லியமாக நடுவயது மற்றும் வயதானவர்களால் செய்துவிட முடியாது, ஆகவே, தலை சிறந்த யோகாசிரியர்களான சிவரிஷி, சுவாமி சிவத்யானம் போன்றவர்கள், மாணவர்களைப் படுத்த நிலையிலேயே கற்பனையாக, சித்தாகாசத்தில் சூரிய நமஸ்காரப் பயிற்சியைச் சிறிது நாட்கள் செய்யவைத்து மூன்று மாதத்துக்குள் முழுமையாகப் பயிற்சி செய்யத் தயார்படுத்திவிடுவார்கள். அப்படி சரியான வழிகாட்டுதல்களும் மிகவும் அவசியம்.

முழுமையான யோகமென்பது ஆசன, பிராணாயாமப் பயிற்சிகளை உள்ளடக்கிய ஒரு பாடத்திட்டம். இதில், ஆசன, மூச்சுப் பயிற்சிகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. அது அடிப்படையில் உடல்-மன நலனில் அக்கறை கொள்கிறது. ஒரு மனிதனை முழுமையாகக் கட்டமைக்க, சமன்செய்ய, நிறைவு கொள்ள, பிரத்யாஹார, தாரண, தியான, நாத எனப் பல அடுக்குகளில் ஒருவர் படிப்படியாகக் குறைந்தது பன்னிரண்டு வருடங்களாவது கற்றுக்கொள்ளலாம்.

இம்மைக்கும் மறுமைக்குமான உன்னதங்களை அடைவதைப் பற்றியே இந்திய மரபு தொடர்ந்து வலியுறுத்துகிறது. அதைத் தத்துவங்களாக மட்டும் சொல்லிச் செல்லாமல் சரியான பயிற்சித் திட்டத்தையும் வடிவமைத்துவைத்துள்ளது. இவ்வகைப் பயிற்சிகளை ‘சாதனா’ என்கிறது மரபு. உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் இங்கே வெல்ல முடியும், குறைந்தபட்சம் அதை அடையும் எண்ணமும் தீவிரப் பயிற்சியும் போதும். அந்தப் பயிற்சிகளிலும் உங்களுக்கான ஒன்றைப் பரிந்துரைக்கவும் கற்றுக்கொடுக்கவும் சரியான ஆசிரியரும் தேவையாகிறது.

உதாரணமாக, சித்தாகாசப் பயிற்சிகளை ஒருபோதும் நீங்கள் காணொளி மூலமாகவோ மரபிலிருந்து வராத ஆசிரியரிடமோ கற்றுக்கொள்ளவே முடியாது. ஏனெனில் நாம் எல்லோரும் தான் கனவு காண்கிறோம். கற்பனை செய்கிறோம் எனினும் நிகழ்வதில்லை அல்லது தாமதம் ஏற்படுகிறது. ஆகவே சித்தத்தில் சென்று கனவை விதைக்க வேண்டியுள்ளது. அது சாதாரணமான உலகியல் ஆசையாகக்கூட இருக்கலாம் தப்பில்லை.

ஆகவே, யோகநித்ரா போன்ற பயிற்சிகளின்போது சிறிது சிறிதாக காட்சிகளைக் காண பரிந்துரைக்கிறார்கள். சூரிய உதயம், முழு நிலவு போன்ற இலகுவான காட்சிகளை காண முடிந்தால், படிப்படியாக தாரண நிலையில் நம் எதிர்காலத்தையும், விருப்பங்களையும், லட்சியங்களையும், துல்லியமான காட்சியாகக் கண்டுவிட முடியும். அப்படிக் கண்ட காட்சி நமக்கு நிகழ்ந்தே தீரும். ஆகவே, எவற்றை எல்லாம் காண வேண்டும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதும் ஒரு ஆசிரியரின் துணையுடன் கற்று வாழ்வியல் தேவைகளை முதலில் பூர்த்தி செய்துகொள்ள யோகமரபு வழிவகை செய்கிறது.

பத்ராசனம்

இந்த பகுதியில் நாம் பத்ராசனம் எனும் பயிற்சியை பார்க்கலாம். பத்ரம் என்கிற சொல்லுக்கு மங்களம் என்று பொருள். மனதையும் உடலையும் ஒரு குறிப்பிட்ட உற்சாக நிலையில் வைத்திருப்பதற்கும், பிராணன் எனும் உயிராற்றல் கீழ்நோக்கி செல்லாமல் மேல்நோக்கி சென்று நம்மை நேர்மறை சிந்தனை மற்றும் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதற்கும் உதவும் தியான ஆசனங்களில் முக்கியமானது.குழந்தைகள் அடிக்கடி அமரவிரும்பும் ஒரு நிலை இது அவர்களின் உற்சாகத்தை குறிக்கும் நிலை. நாம் ஏற்கனவே பார்த்த வஜ்ராசன நிலையிலிருந்து படிப்படியாக கால்களை வெளிப்புறமாக விலக்கவும், இந்த நிலையில் முதலில் 10 மூச்சுகள் வரை அமர்ந்திருக்கலாம். பழகிய பின்னர் நேரத்தை நீட்டித்துக்கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறுகதை-கட்ட துரைக்கு கட்டம் சரியில்லை! (மகளிர் பக்கம்)
Next post பூண்டின் பயன்கள்!! (மருத்துவம்)