பெண்களாலும் இது முடியும்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 32 Second

உறுதி காட்டும் பெண் கார் மெக்கானிக்

பின்னணியில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்க, புஷ்பராணி கார்களை சர்வீஸ் செய்யும் வீடியோக்கள் இன்ஸ்டா, யு-டியூப் , மோஜோ போன்ற இணைய பக்கங்களில் பிரபலம். சாலையோரங்களில் காருக்கு அடியில் படுத்து கார்களை சரி செய்யும் இவரின் காணொளி பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இவரின் வீடியோக்களை பார்க்கின்றனர்.

புஷ்பராணியை பார்க்கும் நமக்கு ஒரு பெண் கார் மெக்கானிக்கா? என ஆச்சரியமாகவே இருக்கிறது. டாம்பாய் தோற்றத்தில் நம்மை மலைக்க வைக்கும் புஷ்பராணி,
45 கிலோ வெயிட்டுள்ள ஜாக்கியை தூக்குவது, டயரை கழட்டி மாட்டுவது, காருக்கள் இருக்கும் பெரிய பெரிய ஸ்பேர் பார்ட்ஸ்களை கழட்டி சரி செய்து, மீண்டும்
மாட்டுவதென என்னேறமும் கடின உழைப்பை செலுத்திக் கொண்டே இருக்கிறார். அவரிடம் பேசியதில்…

‘‘சின்ன வயதிலேயே எனக்கு பேன்ட் ஷர்ட் போடுவதுதான் ரொம்பப் பிடிக்கும். அதுவும் மெக்கானிக் ஃபீல்டுக்கு வந்த பிறகு ஷர்ட்ஸ் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தேன். வண்டியின் கீழே படுத்து சர்வீஸ் செய்ய வேண்டிய சூழலில் நீண்ட முடி பிரச்னையாக இருந்தது. முடியையும் குறைத்து பாய் கட் செய்து கொண்டேன்’’ என்றவர், பழுதான வண்டியில் ஏறி உட்கார்ந்தாலே வண்டியில் என்ன பிரச்னையென சரியாக என்னால் சொல்லிவிட முடியும் என்கிறார் அழுத்தமாக.

எல்லா மாடல் கார்களையும் எனக்கு சரி செய்யத் தெரியும் என்றவரிடம் இந்தத் தொழிலுக்குள் வந்தது குறித்து கேட்டபோது..? ‘‘என் தம்பி ஜான் தொடங்கிய தொழில் இது. என் 15 வருட உழைப்பில் கிடைத்த வருமானம், சேமிப்பு, நகை என அனைத்தையும் முதலீடாக்கி, கார் சர்வீஸ் கேரேஜ் ஒன்றை சென்னை வளசரவாக்கத்தில் ஏற்படுத்திக் கொடுத்தேன். ஆரம்பித்ததுமே எந்தத் தொழிலும் ஸ்பீடு எடுக்காதுதான். பொறுமை அவனிடம் இல்லை. என்னால் இதை நடத்த முடியவில்லையென தொழிலில் இருந்தே விலகினான். அடுத்து என்ன செய்யலாம் என யோசித்ததில், எட்டு மாத காலம் அவனோடு இந்தத் தொழிலில் இருந்ததில், எனக்கும் இதில் ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர முடிந்தது.

எதையும் வித்தியாசமாய் செய்ய நினைக்கும் எனக்கு, பெண்கள் வரத் தயங்குகிற இந்தத் துறை சிந்தனைக்குள் அடிக்கடி வர ஆரம்பித்தது. கார் மெக்கானிக்குகளை எனது கேரேஜிற்கே வரவழைத்து, கார்களை அவர்கள் சர்வீஸ் செய்வதை அருகில் இருந்து கவனிக்க ஆரம்பித்தேன். கூடவே என் கடின உழைப்பையும் செலுத்தினேன். என்னுடையது முழுக்க முழுக்க அனுபவ அறிவு. துவக்கத்தில், சாலைகளில் நின்றுவிட்ட கார்களை வண்டிக்கு அடியில் படுத்து சரி செய்யும்போது, கால்களில் ரத்தம் எல்லாம் வரும். கூடவே இஞ்சின் சூடு, டூல்ஸ் சூடு எல்லாம் சேர்ந்து ஹெவியான வேலையாக இருந்தது.

இன்று எனக்கு காரில் பிரேக் பெயிலியர், பேட்டரி டவுன், செல்ஃப் மோட்டார் பிரச்னை, டெம்ப்ரேச்சர் ஹெவி, சஸ்பென்ஷன் வேலை, ஏசி வொர்க், பிரேக் வொர்க், ஆயில் சர்வீஸ், கியர் பாக்ஸ் சர்வீஸ், டயர் பஞ்சர், ஸ்டெப்னி மாற்றுதல், வாட்டர் வாஸ் என மேஜர் வேலைகள் அத்தனையும் அத்துபடி. ஒரு நாளைக்கு இரண்டு காராவது எனது கேரேஜுக்கு வரும். ஒரு மாதத்தில் குறைந்தது 20 வண்டி சர்வீஸுக்கு வந்தால், அதில் இரண்டு வண்டிக்கு மட்டுமே டோர் சர்வீஸ், ஏசி கம்ப்ரெஷர் சர்வீஸ் என வெளி ஆட்களை வரவழைப்பேன். மற்றபடி பேட்டரி லெவல் செக், ப்யூஸ் செக் போன்ற எலக்ட்ரீஷியன் வேலைகளும் எனக்குத் தெரியும்.

வண்டியில் ஏறி உட்கார்ந்ததுமே என்ன பிரச்னை என்பதை சரியாக என்னால் சொல்லிவிட முடியும். எந்த இடத்தில் டச் செய்தால் பிரச்னை சரியாகும் என்பதும் என் விரல் நுனியில். ரோட்டில் காரை ஓட்டும்போதே நார்மல் சவுண்டிற்கும், சைலன்ஸர் ஹோல்ஸ் சவுண்டிற்கும் வித்தியாசம் தெரிகிற அளவுக்கு நான் பக்கா. சைலன்ஸரில் ஹோல்ஸ் விழுந்தால்கூட மைலேஜ் அடிவாங்கும்’’ என்றவர், ‘‘ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்ற லக்ஸரிஸ் கார்களைத் தவிர்த்து எந்த வண்டி, எந்தப் பிரச்னையோடு என் கேரேஜ் வந்தாலும் நானே சரி செய்து கொடுத்துடுவேன்’’ என்கிறார் தம்ஸ்அப் உயர்த்தி.

‘‘சாலைகளில் நின்ற கார்களை ஸ்பாட்டிற்கு சென்றும் சரி செய்வேன். சில கார்களை டோ செய்து என் கேரேஜ் கொண்டு வந்து சரிசெய்து டெலிவரி செய்வேன்’’ என்றவர், மிகச் சமீபத்தில் சப் கலெக்டர் வண்டி ஒன்று ஏர்போர்ட் செல்லும் வழியில் நின்றுவிட, என் டாட்டா சுமோவால் டோ செய்து செட்டுக்கு கொண்டு வந்து சரி செய்து டெலிவரி கொடுத்தேன் என்கிறார்.

‘‘எனக்கு ஆன்லைன் கஸ்டமர்கள், செட் கஸ்டமர்கள் என இரண்டும் உண்டு. குறைந்தது 500 ரெகுலர் கஸ்டமர்கள் எனக்கு இருக்கிறார்கள். ஒரு கஸ்டமர் ஒரு முறை என்னிடத்தில் வந்துவிட்டால் பிறகு என்னைவிட்டுச் செல்வதில்லை. சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வாடிக்கையாளர் கையில் வண்டியினை ஒப்படைத்துவிடுவேன். ஆன் டைம் டெலிவரியில் கூகுள் ரேட்டிங்கில் நான் முதலிடத்தில் இருப்பதுடன், விருகம்பாக்கம் பகுதியில் ஜஸ்ட் டயலில் நான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறேன். கூகுளில் என் ரேட்டிங் 4.8. ஜஸ்ட் டயலில் என் ரேட்டிங் 4.6.’’ என்கிறார் புன்னகைத்து.

‘‘முதலில் என்னைப் பார்க்கும் கஸ்டமர்கள் சார் என்று அழைத்து, பிறகுதான் நான் பெண் எனப் புரிந்துகொள்வார்கள்’’ என தன் தோற்றம் குறித்து விளக்கியவாறு சிரித்தவர், ‘‘சாலைகளிலேயே இறங்கி நான் வேலை செய்வதை சிலர் பிரமிப்போடும் பார்த்துச் செல்வார்கள். ‘எப்படி இந்த தொழிலுக்கு வந்தீர்கள்? எப்படி கற்றுக் கொண்டீர்கள்’ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்விகளை சிலர் கேட்பார்கள்’’ என்ற புஷ்பராணி எம்.ஏ. படித்தவராம்.

‘‘சட்டம் படிக்க வேண்டும் என்பதே என் கனவு. ஆனால் குடும்பச்சூழ்நிலையால் முடியவில்லை’’ என்றவரிடம், திருமணம் குறித்து கேட்டபோது? ‘‘எல்லோரும் வாழுகிற இயல்பான வாழ்வில் எனக்கு விருப்பமில்லை. என் உடல், உழைப்பு, ஆன்மா என அத்தனையும் இந்த கேரேஜில்தான். தொடர்ந்து ஒற்றை மனுஷியாகவே இதில் இயங்கி வருகிறேன். நான் தூங்கிய நேரங்கள் மிகமிகக் குறைவு. கடின உழைப்பை தொடர்ந்து கொடுத்தால்தான் தொழிலில் நிலைக்க முடியும். 40 காரை ஒரே நேரத்தில் நிறுத்தும் அளவு எனது கேரேஜ் கொஞ்சம் பெரியது. காலை 8 மணிக்கு ஆரம்பித்தால் இரவு எட்டு மணி வரை விதவிதமான கார்கள், விதவிதமான டூல்ஸ்களோடே என் வாழ்வு.

பிஎம்டபிள்யூ கார் கம்பெனியில் இருந்து நல்ல சம்பளத்தோடு வேலை கொடுப்பதாக அழைப்பு வந்தது. ஒரு நிறுவனத்தில் ஊழியராக அடைபடுவதிலும் எனக்கு விருப்பமில்லை. வாய்ப்பை மறுத்துவிட்டேன் என்றவர், இந்தத் தொழிலை கற்பதற்கு விரும்பி வருகிற பெண்களுக்கு, தொழிலை கற்றுக்கொடுத்து வேலை வாய்ப்பை கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறேன். இது கடினமான வேலைதான். ஆண்கள் ஒரே முயற்சியில் செய்வதை நாம் செய்வதற்கு கூடுதலாக இரண்டு முயற்சிகள் தேவைப்படும் அவ்வளவே’’ என்றதுடன், ஆனால் பெண்களாலும் இது முடியும் என அழுத்தமாகச் சொல்லி விடைபெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சாதனை சகோதரிகள்!! (மகளிர் பக்கம்)
Next post வேம்பு தரும் பயன்கள்!! (மருத்துவம்)