வேம்பு தரும் பயன்கள்!! (மருத்துவம்)
கற்ப மூலிகைகளில் ஒன்றான வேம்பு திம்பம், பாரிபத்திரம், அரிட்டம், பிசுமந்தம் வாதாரி என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. கருவேம்பு, சர்க்கரை வேம்பு, மலைவேம்பு என்கிற இனங்களும் உண்டு.வேம்பின் இலை, பூ, காய், கனி, பட்டை, வேர் கட்டை, பிசின் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது.வேப்பிலையுடன் மஞ்சளைச் சேர்த்து மைபோல் அரைத்து, கால்வெடிப்பின் மேல் தடவி, மறுநாள் காலையில் கழுவி விட வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் பித்த வெடிப்புகள் மறையும். வேப்ப இலைகள் உலர்த்தி தூபம் போட்டால் கொசுத் தொல்லை இருக்காது.
வேம்பு ஒருவித மகிழ்ச்சியைத் தரும் மரம். பித்தப்பையில் நிறைந்த பித்த நீரை வெளியாக்கி, காமாலை நோயைப் போக்கும். கண்ணிலிருக்கும் படல மறைப்பு, காமாலை, மாலைக்கண், புழுவெட்டு நோய் அகல உதவும்.வேம்பினால் அசாத்தியமான அம்மை நோய் தீரும். வேப்பிலையை அரைத்துகட்ட கட்டிகள் சீக்கிரத்தில் பழுக்கும் புழு, பூச்சி, செல் முதலியவைகளால் நேரிடும் துன்பங்கள் இவ்விலையால் நீங்கும்.
வேப்பம் பூ பலக் குறைவைப் போக்கும், குன்ம நோயைக் கண்டிக்கும், வேப்பங்காய் முறை சுரத்தைப் போக்கும். வன்மையைக் கொடுக்கும். வேப்பம் பருப்பை அரைத்து புழுவைத்த புண்களுக்கு பூசலாம்.வேப்ப எண்ணெயை அக்கி, கீல்வாயு, கண்டமாலை, சருமநோய் இவைகளுக்கு மேற்பூச்சாய் பயன்படுத்தலாம். ஒற்றடம் கொடுக்க பயன்படும்.வேம்பு பிண்ணாக்கு, தலைவலி போக்கும். மூக்கினின்று நீர் வடிதல் குணமாகும். இதன் பட்டை சுரத்தால் உண்டாகும் உடல் தளர்ச்சி, மூலகணம், மாந்தம், வயிற்றுவலி, எரிபூச்சி இவைகளைப் போக்கும்.வேப்பம் பட்டை குடிநீர் வலி நோய்களுக்கு கொடுக்கலாம். வேர்ப்பட்டைக் குடிநீர் மலைசுரத்திற்கு வழங்கலாம்.