டிஜிட்டல் டிடாக்ஸ் மூலம் குழந்தைகளிடம் மொபைலை தள்ளி வையுங்கள்! (மருத்துவம்)

Read Time:13 Minute, 30 Second

அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு பிரபல பள்ளியின் பேருந்தில் மாணவர்கள் சிலர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஓட்டுநர் இருக்கை நோக்கிப் பாய்ந்த 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் டிலெயன் ரீவெஸ் (Dillion Reeves) பேருந்தின் ஸ்டியரிங்கை தனது இடது கரத்தால் பிடித்தபடி, கியரை நியூட்ரல் மோடிற்கு கொண்டுவந்து பஸ்ஸை நிறுத்துகிறான். சற்று நேரத்தில் மாணவனின் பெற்றோருக்கு காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு செல்ல, பெற்றோர்களோ காவலர்களிடம் “எதுவும் பிரச்னையா?” எனக் கேட்கின்றனர். அதற்கு காவலர்கள் “உங்கள் மகன் ஒரு ஹீரோ. அவர் ஆபத்தில் இருந்து பள்ளிக் குழந்தைகளை பேருந்தோடு காப்பாற்றியிருக்கிறார்” என்கிறார்கள்.

டிலெயனின் பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன டிலெயன் பள்ளி பேருந்தை நிறுத்தினானா?” என அதிர்ச்சி காட்ட, அதற்குக் காவலர்கள், “ஆம்! பேருந்து ஓட்டுநர் உடல் நலக்குறைவால் இருக்கையில் சரிந்த நேரம், சூழலை சட்டென புரிந்து, ஓட்டுநரின் இருக்கைக்குத் தாவி, வளைவுகளில் திரும்பி விபத்தில் சிக்க இருந்த பேருந்தை, உங்கள் மகன் வண்டியை ஆஃப் செய்து நிறுத்தி இருக்கிறார். மிகப்பெரிய ஆபத்து நிகழாமல் தவிர்க்கப்பட்டது” என்றனர். பெற்றோருக்கோ ஆச்சரியம்! ஏனெனில் தங்கள் மகன் டிலெயனுக்கு டிரைவிங் குறித்து எதுவும் தெரியாது என்பதே அதற்குக் காரணம்.

சிறுவன் டிலெயனிடம் இது குறித்து கேட்டபோது. “பேருந்து சாலையின் வளைவுகளில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்திருந்தது. டிரைவர் இருக்கையில் சரிந்திருந்தார். சட்டென பாய்ந்து ஸ்டியரிங்கை பிடித்து, பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தியபின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொன்னேன்” என்கிறான்.

இவ்வளவு பெரிய விபத்து நிகழவிருப்பதை ஏன் டிலெயனைத் தவிர எந்த மாணவர்களும் கவனிக்கவில்லை என்கிற கேள்வியும் அங்கு எழுந்தது? அதற்கு குறிப்பிட்ட பேருந்தில் பயணித்த ஒரு மாணவி சொன்ன பதில், “நான் என் காதுகளில் இயர்பேட் அணிந்து மொபைலில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன்” என்றார். இன்னொரு மாணவி “நான் என் மொபைலில் கேம் ஒன்றை விளையாடிக் கொண்டிருந்தேன்” என்கிறார். இன்னொரு மாணவன் “நான் என் மொபைல் திரையில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்” என்கிறார்.

டிலெயன் மட்டும் எப்படி பேருந்து ஆபத்தில் சிக்கப்போகும் சூழலை சட்டென உணர்ந்தான் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதற்கு டிலெயனின் பெற்றோர் சொன்ன பதில்… “என் மகனிடம் செல்போன் இல்லை. நாங்கள் அவனுக்கு அதை வாங்கிக் கொடுக்கவில்லை” என்பதே.டிலெயன் பெற்றோரின் இந்த பதில் அனைவரையும் யோசிக்க வைத்தது. மொபைல் திரையை பார்ப்பதன் மூலம் சூழ்நிலை குறித்த விழிப்புணர்வை நாம் இழக்கிறோம் என்பதே உண்மை. இதுதான் அந்த பேருந்திலும் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து அமெரிக்க நாட்டில் நடந்த ஆய்வு ஒன்று நான்கில் மூன்று குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் என்கிறது.

செல்போன் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்ட நிலையில், எல்லோருமே இதற்கு அடிமைதான். அதாவது Fear of missing out (fomo) என இதைச் சொல்வோம். இது எல்லோருக்குள்ளும் இருக்கும் இயல்பான விஷயம் என்றாலும், கோவிட் பிரச்னைக்குப் பிறகு மொபைல் பயன்பாடு பள்ளிக் குழந்தைகளின் பிகேவியர் அடிக் ஷனாகவே மாறியிருக்கிறது. இதனை Young brains are more vulnerable for addiction என்றும், ஹெல்த் ரிஸ்க் மற்றும் மெண்டல் ஹெல்த் ரிஸ்க் என இரண்டு பாதிப்புகளுமே இதில் உண்டு என்கிறார் மருத்துவ உளவியல் நிபுணரான டாக்டர் சுனில் குமார்.

செல்போனை குழந்தைகள் பயன்படுத்துவது குறித்து மேலும் அவரிடம் பேசியதில்…

15 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினருக்கு செல்போன் போன்ற விஷயங்கள் மிகப்பெரிய தாக்கத்தை மூளையில் ஏற்படுத்தும். இதில் அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகள் வருவதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. செல்போன் பயன்பாடு மூலமாக குழந்தைகளின் மூளை பல்வேறு லெவலில் பாதிக்க ஆரம்பிக்கிறது. நமது மூளையில் ரிவார்ட் சர்க்கியூட் (reward circuit ) என்கிற ஒன்று உள்ளது. அதனை இந்த செல்போன் ஸ்கிரீன் முழுமையாக ஈர்க்கும் விதமாக கலர், லைட், சவுண்ட் என டிசைன்
செய்யப்பட்டு ஆர்வத்தை தூண்டுகிறது.

எனக்கு போர் அடிக்கிறது என்கிற வார்த்தையை இன்று குழந்தைகள் மிக இயல்பாக சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். போன் இல்லையென்றாலே லோன்லினெஸ் ஃபீலிங் அவர்களுக்குள் வந்துவிடுகிறது. சில குழந்தைகள் மனதளவில் எம்டியாகத் தங்களை உணர்கிறார்கள். போர் அடிப்பது, லோன்லினெஸ், எம்டினெஸ் இந்த மூன்றும் குழந்தைகளின் மேஜர் பிரச்னைகளாக பார்க்கப்படுகிறது. அதிகமாக மொபைல் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஆன்சைட்டி டிப்ரெஷன் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

கதை கேட்டு அல்லது கதை படித்து கற்பனைகள் தூண்டப்பட்டு வளர்ந்த சமூகம் இன்றில்லை. பிறரோடு கூடி பழகுதலும் தடைபடுகிறது. செல்போனால் குழந்தைகள் தங்களின் உலகத்தை பார்க்கும்விதமே மாறுபடுகிறது. செல்போனில் இருந்து வருகிற வெளிச்சம், அனிமேஷன், கலர்பேலட் இதையெல்லாம் கொடுத்து ஆசிரியர்களால் கரும்பலகையில் பாடம் நடத்த முடியாது என்பதாலேயே ஒருசில மாணவர்களுக்கு வகுப்பறையில் படிப்பது போர் அடிப்பதாகச் சொல்கிறார்கள். செல்போனுக்கு ஈடு கொடுத்து இன்றைய இளம் தலைமுறைக்கு பாடங்களை நடத்த முடியவில்லை என்கின்றனர் ஆசிரியர்கள். மேலும் இன்பர்மேஷன் ஓவர் லோட், ஆன்லைன் கம்பெல்ஷன் சிக்கல்களும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

பாட்டுக் கேட்டு அல்லது வீடியோ பார்த்து எழுதுவது போன்ற செயல்கள் மல்டி டாஸ்கிங் ஹெல்த் எபெக்ட்டையும் (Multi tasking health effect) குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். இரவு நேரத்தில் மொபைல் பயன்படுத்துவதால் மொபைல் வெளிச்சம் உள் நுழைந்து மெலட்டோனியமும் குறைய ஆரம்பிக்கிறது. மேலும் பார்வைக் குறைபாடு, மாறு கண் பார்வை, மயோபியா போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.அடுத்ததாக டெக்ஸ்ட் நெக் பிரச்னையும் இதில் உண்டு. ரொம்ப நேரம் கழுத்தை குனிந்த நிலையில் மொபைலை பயன்
படுத்துவதன் மூலமாக கழுத்துப் பகுதியில் உள்ள தண்டுவடம் இறுக்கம் அடைந்து வலியினை ஏற்படுத்துகிறது. இதைத்தான் டெக்ஸ்ட் நெக் சிம்டெம்ஸ் (Text neck symptoms) என்கிறார்கள்.

சோஷியல் மீடியாவின் வடிவமைப்பே ஒரு அடிக்ட்தான். லைக் பட்டன், லவ் பட்டன், வியூவ்ஸ் பார்ப்பது என இளைஞர் பட்டாளத்தை பதட்டத்திற்குள்ளேயே இது வைத்திருக்கிறது. கைகளில் மொபைல் இல்லையென்றாலோ அல்லது இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டாலோ பதட்டமடைய ஆரம்பிக்கிறார்கள். மாணவர்களின் கைகளில் இருக்கும் செல்போன் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை கேம்பிளிங், போனோகிராபி, டேட்டிங் சாட் என இழுத்துச் செல்லும் அபாயங்களும் இதில் உண்டு.

சோஷியல் மீடியாவில் வெளியாகும் குட்டி குட்டி ரீல்ஸ் என்பது ஒரு புதைகுழி. 30 செகண்டிற்கு மேல் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை வைக்க முடியாது எனத் தெரிந்தே அடுத்தடுத்த ரீல்ஸ்களை வெளியிட்டு கேளிக்கை விருந்து படைக்கின்றனர். இது பார்க்க நன்றாக இருந்தாலும், எந்த இடத்திலும் ரீல்ஸ் வீடியோவை நம்மால் நிறுத்த முடியாது. ரீல்ஸ்களை பார்க்கும் குழந்தைகளின் ரிவாட் சர்க்யூட் தூண்டப்பட்டு அவர்கள் செல்போனை கீழே வைப்பதே இல்லை. ரிவாட் சர்க்கியூட் தூண்டலில் வரும் டோப்போமேன் எபெக்ட் (dopamine) திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைச் செய்யும் எண்ணத்தை தூண்டுகிறது. இதனால்தான் மற்ற விஷயங்களில் கவனம் வைக்க முடியாமல் அடுத்தடுத்த வீடியோக்களை நான் ஸ்டாப்பாக பார்த்துக்கொண்டே செல்கிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள ICD 11ல் (International classification of defects) இன்டர்நெட் அடிக் ஷன், மொபைல்போன் அடி க் ஷன் என அனைத்தும் வருகிறது. தற்போது டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) என்கிற ஒரு விஷயமும் பரவலாகிக் கொண்டிருக்கிறது. இயற்கை உணவுகளை உண்டு நமது உடம்பை எப்படி டிடாக்ஸ் செய்கிறோமோ அதேபோல் இன்டர்நெட் அடி க் ஷனுக்கு மைண்டை டிடாக்ஸ் செய்ய நிம்ஹான்ஸ் (NIMHANS) மற்றும் தமிழக அரசு மருத்துமனையில், இன்ஸ்டியூட் ஆஃப் மெண்டல் ஹெல்த்தில் தனி பிரிவே செயல்படுகிறது.

டிஜிட்டல் டிடாக்ஸ் என்பது ஸ்கிரீன் நேரத்தை குறைக்க பழக்கப்படுத்துவது. சாப்பிடும்போதும், துங்கும்போதும் மொபைல் வேண்டாம் என கட்டுப்பாடுகளை விதிப்பது. தற்போது ஒருசில உணவகங்களில் உங்கள் செல்போன்களை தட்டில் வைத்துவிட்டு உணவின் மீது மட்டும் கவனத்தை வையுங்கள். அப்படிச் செய்தால் 5 சதவிகிதம் உங்கள் பில்லில் தள்ளுபடி என்கிற அறிவிப்பை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

டயர்டாக இருக்கும்போது, நான்கு ஐந்து ரீல்ஸ்களை பார்த்தால் ரெஃப்ரெஸ் ஆகிவிடுவேன் எனச் சொல்லும் காலம் இது. டெக்னாலஜியை பயன்படுத்தி
டென்ஷனை குறைக்க நினைத்தால் அது வேறுமாதிரியான விளைவுகளையே உடலளவிலும்… மனதளவிலும் ஏற்படுத்தும் என முடித்துக் கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அவசியமா ஆண்மை பரிசோதனை? (அவ்வப்போது கிளாமர்)
Next post அத்திப்பழத்தின் மகத்துவம்!! (மருத்துவம்)