வாழ்க்கை+வங்கி=வளம்!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 41 Second

பருவநிலை மாற்றம், பூச்சிகள் மற்றும் நோய்கள், சந்தை ஏற்ற இறக்கம் போன்ற விவசாயத் துறை எதிர்கொள்ளும் சவால்களை நாம் அறிவோம். தனிநபராக விவசாயம் செய்யும்போது இந்த பாதிப்பு அளவிடமுடியாத இழப்பை வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது. ஆனால் கூட்டுறவாக விவசாயிகள் அல்லது விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பயணிக்கும்போது இழப்பின் சுமை ஓரளவு பகிரப்பட்டு தனிநபருக்குக் குறைகிறது.

கூட்டுறவே நாட்டுயர்வு என்னும் முழக்கம் பலகாலமாக உள்ளது. தனி மனிதராகக் கடன் பெறுவதைவிட மக்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவாகக் கடன் பெறும்போது
வங்கிகள் அதற்குரிய சிறப்புத் திட்டங்களை சலுகைகளுடன் அறிவித்து வழங்குகின்றன. இதற்கான காரணம் குழுக்கடனில் திருப்பிச் செலுத்தாத கடன் தொகை என்பது மிகவும் குறைவாகும். ஒருவருக்கொருவர் கூட்டு ஒப்பந்தம் வங்கியுடன் பதிவு செய்வதால் வாங்கிய கடனை ஒருவர் திருப்பச் செலுத்தத் தவறினால் அல்லது மருத்துவ/ இதர காரணங்களால் திரும்பிச் செலுத்த இயலாமல் சென்றாலோ அந்த நிலுவைத் தொகையை மற்றவர்கள் அதாவது குழுவில் உள்ள மற்றவர்கள் ஒன்று சேர்ந்து செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இதனால் வங்கிகளின் வாராக் கடன் சதவிகிதம் குறைகிறது.

இரண்டு விதமான குழுக்களை நாம் பார்க்கலாம். ஒன்று விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட நபர்
களின் எண்ணிக்கையில் கூட்டாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக இணைந்து வேளாண்மை அல்லது வேளாண் சார்ந்த தொழில்களுக்காகக் கடன் பெறுவது. மற்றொன்று குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒரே பகுதியில் விவசாயம் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட தொழில்கள் செய்பவர்கள் ஒருங்கிணைந்து சுய உதவிக் குழுவைத் துவங்கி தங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்காக வங்கியில் கடன் பெறுவதாகும்.

இன்று இந்தியாவில் பெருமளவு வெற்றியுடன் செயல்படும் இந்த அமைப்புகளுக்கு அரசும், அரசு சார்ந்த வேளாண்மை மற்றும் தேசிய வளர்ச்சிக்கான ஊரக வங்கி – நெபார்டு (NABARD) போன்ற அமைப்புகளும் பல்வேறு சலுகை திட்டங்களையும் மானிய மற்றும் காப்பீட்டு வசதியையும் வழங்குகின்றன. இத்தகைய அமைப்புகள் வங்கிகள் வழங்கும் சிறப்புக் கடன் திட்டத்தினால் பயன் பெறுகின்றன.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தனிநபராகக் கடன் பெறுவதை விட விவசாயிகள் ஒன்றிணைந்து கூட்டாகக் கடன்பெற்று விவசாயம் செய்வதில் பல நன்மைகள் உள்ளன. விவசாயிகளை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்கி, அவர்களை வேளாண் சாகுபடி மட்டுமல்லாது, வேளாண் வணிகத்திலும் மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் துவங்க இடைநிலை மூலதன உதவி கடன் உத்தரவாதம் மற்றும் சலுகையுடன் கூடிய சுழல் நிதி வழங்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக உழவர் சங்க உற்பத்தியாளர் அமைப்புகள் கடன் பெறுவதற்கு வங்கிகளை அணுகும்போது, வங்கி கடனுக்காக பிணையம் மற்றும் சொத்து அடமானம் கோருவதுடன் வங்கி கடன் தொகை மீது நிர்ணயித்து வசூலிக்கும் வட்டியும் அதிகமாக இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு உற்பத்தியாளர் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு ஏதுவாக, வங்கிகளுக்கு 50% உத்தரவாதத்தை அரசே வழங்குகிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வங்கியை அணுகி இந்த கடன் திட்டம் மற்றும் அரசு வழங்கும் நிதி ஆதாரம் மற்றும் உத்தரவாதம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

சலுகையுடன் கூடிய சுழல் நிதி தற்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் போது இதர வணிக நடவடிக்கைகளுக்கு வழங்குவது போல் 12% – 14% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை 8% – 9% குறைக்கும் வகையில் அரசின் பங்காக திட்டத்தை செயல்படுத்தும் வங்கிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை அரசு செயல்படுத்துவதால், வங்கி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் வழங்கவும் இயலும்.

உற்பத்தியாளர் அமைப்பு என்பது முதன்மை உற்பத்தியாளர்கள். அதாவது விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், கிராமப்புற கைவினைஞர்கள், ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு சட்ட நிறுவனம் ஆகும். ஒரு உற்பத்தி அமைப்பு அல்லது உற்பத்தியாளர் கூட்டு நிறுவனம் உறுப்பினர்களிடையே லாபம் / பயன்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களின் இயக்கம் என்பது திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு ஆகியவை ஆகும். உறுப்பினர்களின் உற்பத்தியை ஒருங்கிணைத்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி லாபத்தின் அளவீடுகளை அதிகரித்து வாழ்வாதார உயர்விற்கு வழி வகுப்பதே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வளர்ச்சிமிகு செயல்பாடு ஆகும்.

வங்கி வகுத்துள்ள விதிமுறைகள்

* உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வங்கியிலிருந்து 50 கிமீ தொலைவுக்குள் நிறுவப்பட்டு இயங்க வேண்டும்.
* உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன சட்ட விதிகளின் கீழ் துவக்கி செயல்படும் நிறுவனம் பதிவு செய்திருக்க வேண்டும்.
* கூட்டுப் பொறுப்பு ஒப்பந்தத்தின்படி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ரூ.10 முதல் ரூ.100 லட்சம் வரையிலான கடன் தொகையை அதற்குரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு வங்கியில் பெற இயலும்.

* மிகைப்பற்று கடன் கணக்கின் மூலம் கடன் பெறும்போது நிறுவனத்தின் இருப்பில் உள்ள உபரித்தொகையை அதன் கடன் கணக்கில் செலுத்தித் தேவையானபோது பணம் பெறலாம். இதனால் செலுத்தவேண்டிய வட்டித் தொகை குறைய வாய்ப்புண்டு.
* குறுகிய காலக் கடனை வட்டியுடன் திருப்பச் செலுத்த வேண்டிய கால அளவு ஒரு வருடம் ஆகும். இந்தக் கடன் தொகை நடப்பு மூலதனச் செலவுகளுக்கு பெருமளவு உதவுகிறது.

* குழுவில் 80% – 90% விவசாய உறுப்பினர்கள் தொடர் உற்பத்தி அல்லது வணிகத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
* உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பதிவு மற்றும் ஒருங்கிணைப்புச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல்களை வங்கியில் கடன் மற்றும் நடப்புக் கணக்கு விண்ணப்பத்துடன் வழங்கவேண்டும்.
* இயங்கும் நிறுவனங்கள் தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் வங்கியிடம் வழங்கவேண்டும்.
* ஏற்கனவே வங்கியில் சேமிப்பு / நடப்பு/ வைப்புக் கணக்கு துவக்கி நிர்வாகத்தில் இருந்தால் அதன் ஆறு மாத கால வங்கி கணக்கு அறிக்கையை கடன் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கவேண்டும்.

* நிறுவனம் அதன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்திய கூட்டத்தின் நிதி மற்றும் வங்கிக்கடன் சம்பந்தமான தீர்மானங்களின் சான்றொப்பமிட்ட நகல்களை வங்கியிடம் வழங்க வேண்டும்.
* வங்கியின் சேமிப்பு / நடப்புக் கணக்கு / வைப்புக் கணக்கு மற்றும் கடன் பெறுவதற்கான விண்ணப்பம், கொதுவை ஒப்பந்தம், நடப்பு மூலதன மற்றும் இடைக்கால / நீண்ட கால தவணைக்கடன் ஒப்பந்தங்களில் கையொப்பமிடுபவர்களின் பட்டியலை அதற்கு அங்கீகாரம் அளிக்கும் நிறுவன கூட்டத்தின் தீர்மான நகலுடன் இணைத்து வங்கியிடம் வழங்கவேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம் இடுபவர் மாறி இருந்தால் அதை நிறுவனக் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்ட தீர்மானத்தின் நகலுடன் இணைத்து வங்கியிடம் வழங்கவேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்கம் வங்கியின் திட்ட நடைமுறைப்படி இருக்கும் நிலையில் அனைத்து தரவுகளும் மிகச்சரியாக இருப்பின் வங்கியின் மூலம் அந்த
நிறுவனம் கடன் பெறுவது எளிதாகும்.

பல்வேறு விவசாயம், அதனுடன் தொடர்புடைய, விவசாய உள்கட்டமைப்பு மற்றும் துணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயம் சார்ந்த நிறுவனங்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு இணங்க இத்தகைய நிறுவனக் கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. நிலையான விவசாய நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் விவசாயத்தின் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் தன்னம்பிக்கை இந்தியா என்ற அரசாங்கத் திட்டத்தினை வெற்றிபெறச் செய்வதோடு இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வங்கிகளின் மூலம் பெருமளவு பயன் பெறுகின்றன.

சுய உதவிக் குழுக்களும் வங்கிக்கடனும்ஒரு சுய உதவிக் குழுவில், மக்கள் தங்கள் வருவாயில் இருந்து வசதியான முறையில் சேமிக்கக்கூடிய தொகையைச் சேமித்து, பொதுவான நிதிக்கான பங்களிப்பை பரஸ்பரம் ஒப்புக்கொள்வதற்கும், அவர்களின் ஆற்றல்மிக்க மற்றும் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதற்கும் தானாக முன்வந்து ஒன்று சேர்கின்றனர். இந்தியாவில் உள்ள சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவுக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுவதோடு, சுய உதவிக் குழுக்களுக்குள் உள்ள அனைவரையும் ஆதரிக்கும் வகையில் உறுப்பினர்களுக்கான மன்றத்தை செயல்படுத்துகிறது. சுய உதவிக் குழுக்கள் மிகவும் ஏழ்மையான மக்களை ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் நிதி அமைப்புக்கு அணுக முடியும் குழுக்களாக ஒழுங்கமைக்கின்றன.

இந்தியாவில் சுய உதவிக் குழுக்கள் தொடர்பான இந்தத் திட்டம் ஏழை கிராமப்புற மக்களை குறிப்பாக பெண்களைத் திரட்டி பரஸ்பர நலன்களுக்காக சுய உதவி குழுக்களை உருவாக்குகிறது. இந்தியாவில் உள்ள சுய உதவிக் குழுக்கள் சேமிப்பு மற்றும் கடனை மேம்படுத்துவதிலும், வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.

சுய உதவிக் குழுக்களின் நோக்கங்கள்

ஒரே பகுதியில் வசிக்கும் பலர், குறிப்பாக மகளிர் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் குழுவாக ஒன்றிணைந்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க வேண்டும். அந்த தொகை குழுவில் தேவைப்படுவோருக்கு கடனாக வழங்கப்படும். அதற்கான வட்டி கடன் பெற்ற நபரிடம் வசூலிக்கப்படும். அவ்வாறு பெறப்படும் வட்டி குழுவின் செலவு போகப் பகிரும் ஒற்றுமைச் செயல்பாடே சுய உதவிக்குழுவின் இயக்கமாகும். இதன் மூலம் உறுப்பினர்களிடையே சேமிக்கும் பழக்கமும் சிறிய வங்கி போல இயங்கி அனுபவம் பெறும் சூழலும் ஏற்படுகிறது. தேவையானவருக்கு கடன் வழங்கி பொருளாதார செழுமையை பணப்பயனோடு மேம்படுத்துகிறது.

பெண்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, அவர்களின் சொந்த மூலதனத்தை மட்டுமில்லாமல் சுய உதவிக் குழுவின் மூலதனத்தை எளிதாக உயர்த்த முடிகிறது.

குழுவின் சட்ட திட்டங்கள்

* உறுப்பினர் ஒரு குறைந்தபட்ச தொகையையாவது ஒவ்வொரு மாதமும் குழுவில் சேமிக்க வேண்டும்.
* குழு வருடந்தோறும் சேமிப்பு மீதான வட்டியை கணக்கிட வேண்டும். வட்டி சதவீதத்தை குழுவே நிர்ணயிக்கலாம். மாத சராசரி சேமிப்புத் தொகையின் மீது வட்டி கணக்கிடப்படும்.
* சுய உதவிக் குழுவின் நிதி நிலைக்கேற்ப உள்கடன் அல்லது குழுவின் அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு வெளிக்கடன் வழங்கலாம்.
* உறுப்பினர் அவ்வப்போது நடைபெறும் கூட்டங்களுக்கு வருகை, தவணை தவறாத சேமிப்பு, கடன் திரும்ப செலுத்தும் முறை, பெற்றுள்ள கடன் தொகை மற்றும் எண்ணிக்கை, திரும்ப செலுத்தும் திறன் ஆகியவை கணக்கில் பதிவாகும்.
* குழுவிலுள்ள உறுப்பினர்கள் குறித்த விவரப் பட்டியல், குழுவின் தீர்மானம், அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட இணை கையொப்பதாரர்கள் ஆகியவற்றை எழுத்து மூலம் தெரிவித்து வங்கியில் சுய உதவிக்குழுவிற்கு கணக்கு துவக்கலாம்.

* சுயஉதவிக் குழுவிற்கும் உள்கடன் அல்லது வெளியாருக்கு வழங்கும் வெளிக்கடன் ஆகியவை ரூ.5000 மற்றும் அதற்கு மேல் என்றால் கடன் பெறுபவரின் பெயர், முகவரி, கடன் தொகை, கடன் பெறும் தேதி, இடம் ஆகியவற்றை உறுதிமொழிப் பத்திரத்தில் எழுதி கடன் பெறுபவரின் கையெழுத்தைப் பெறவேண்டும்.
* ஒருவருக்கு ஏற்கனவே கடன் இருந்தால் மீண்டும் கடன் வழங்க இயலாது. ஆனால் சில அத்தியாவசியமான தேவைகளுக்கு குழுவின் தீர்மானத்தின்படி கடன் வழங்கலாம்.
* குழு பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் ரொக்கம் மற்றும் சேமிப்பு மற்றும் கடன் பேரேடு குழு உறுப்பினர்களின் கூட்டம் நிறைவடைந்த உடனேயே பதிவேடுகள் எழுதப்பட வேண்டும்.
* உறுப்பினர் வாரியாக சேமிப்பு கணக்குப் புத்தகம் அந்தந்த உறுப்பினரிடம் இருக்கவேண்டும். சேமிப்புத் தொகையைச் செலுத்தியவுடன் இந்தப் புத்தகத்தில் செலுத்திய தொகையை வரவு வைத்து உறுப்பினர்களிடம் வழங்க வேண்டும்.
* உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன் ‘வராக் கடனாக’ மாறிவிடாமல் இருக்க உரிய கண்காணிப்பு தேவை. இவ்வாறு துவக்கப்பட்டு செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் உதவிகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அத்திப்பழத்தின் மகத்துவம்!! (மருத்துவம்)
Next post மதிப்புக்கூட்டும் பொருளாக மாறும் உலர் கழிவுகள்! (மகளிர் பக்கம்)