குழந்தைகளின் தனித் திறமைகளை பெற்றோர்கள் கவனிக்கணும்! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 52 Second

தன்னிடம் பாடம் படிக்க வரும் குழந்தைகளின் திறமைகளை எல்லாம் என்னவென்று பார்த்து அவர்களுக்கான வழிகாட்டுதலையும் அந்த கனவை நோக்கி ஓடுவதற்கான பயிற்சிகளையும் கொடுத்து வருகிறார் திருச்சியை சேர்ந்த கிரிஸ்டி ரூபெல்லா. பரத நாட்டியம், கிளாசிக் டான்ஸ், யோகா வகுப்புகள் இவையெல்லாமே கற்றுக் கொடுப்பதற்காகவே ‘ஜேஎஸ்’ என்ற பெயரில் அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார் இவர்.‘‘நான் கத்துக்கணும்னு நினைச்சதெல்லாம் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தில்தான் நான் இந்த அகாடமியை ஆரம்பிக்க காரணம்’’ என மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார் கிரிஸ்டி.

‘‘எனக்கு சொந்த ஊரு திருச்சியில இருக்கிற லால்குடி. படிச்சதெல்லாம் இங்க தான். எம்.இ முடிச்சதும் வீட்டில் கல்யாணம் செய்திட்டாங்க. சின்ன வயசுல இருந்தே எனக்கு கலை சார்ந்த விஷயம் மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. ஆனால் நான் கிராமத்தில் வளர்ந்ததால், இங்கு அதைச் சொல்லிக் கொடுக்க முறையான பயிற்சி மையங்களோ அல்லது பயிற்சியாளர்களோ கிடையாது. இந்த விஷயம் எனக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. என்னோடது காதல் கல்யாணம்.

கல்யாணம் ஆனதும் வீட்டில் அதிக நேரம் இருந்தது. அதை நல்ல முறையில் செலவு செய்ய நினைச்சேன். அதனால் சிறிய அளவில் காய்கறி தோட்டம் அமைத்தேன். என் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை, இயற்கை முறையில நானே விளைவிச்சேன். இதுக்காக இயற்கை விவசாயம் கத்துக்கிட்டேன். அதன் பின் வேறு என்ன செய்யலாம்னு யோசிச்ச போது, எம்.இ படிப்பை வீணாக்காமல், மாலை நேரத்தில் வீட்டிலேயே டியூசன் வகுப்புகள் எடுக்க தொடங்கினேன். பக்கத்து வீடுகளில் இருக்குற குழந்தைகள் எல்லோருமே என்னிடம் டியூஷனுக்கு சேர்ந்தாங்க. அவர்களால் பெரிய அளவில் எல்லாம் கட்டணம் கொடுக்க முடியாது.

அதனால் அவர்களால் கொடுக்கக்கூடிய சிறிய தொகையை வாங்கினேன். ஆனால் அதிலும் சில பசங்களால் கொடுக்க முடியாது. அவர்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். இப்படி போயிட்டு இருக்கும் போதுதான் நான் பாடங்கள் தாண்டி குழந்தைகளுக்கு ஏதாவது சொல்லி தந்தால் என்ன என்ற யோசனை எனக்குள் ஏற்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் படிப்பை தவிர அவர்களுக்கு நாம் வேற எதுவும் திணிப்பதில்லை. அவர்களால் அவர்களுக்கு பிடிச்ச விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். மேலும் தங்களுக்கும் ஒரு திறமை ஒளிந்து இருக்கிறது என்பதைக் கூட அவர்கள் அறியவில்லை. இதை எல்லாம் யோசித்துதான் ஒரு அகாடமி ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்தேன்’’ என்றவர் தன் அகாடமியில் தரும் பயிற்சி குறித்து விவரித்தார்.

‘‘திருச்சியில நாங்க இருப்பதோ கிராமப் பகுதி. அங்குள்ள மக்கள் படிப்பு மட்டும் தான் தங்களை முன்னேற்றும் என்று நினைக்கிறாங்க. படிப்பு அவசியம் தான். அதே நேரத்தில் குழந்தைகள் எதை விரும்புறாங்க, அவங்களுக்கு என்னென்ன திறமைகள் எல்லாம் இருக்கு என்பதை எந்த பெற்றோர்களும் யோசிப்பதில்லை. அப்படியே சில பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு இருக்கும் திறமையினை கண்டறிந்தாலும், அதை மேலும் செம்மைப்படுத்துவதற்கான வழி அவர்களுக்கு தெரிவதில்லை. அது சார்ந்த பயிற்சிக்கூடங்கள் இருந்தாலும், அதில் அதிக கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வளவு கட்டணம் செலுத்தவும் இவர்களுக்கு வசதிகள் இருக்காது. அதனால் அப்படியே கைவிட்டு விடுகிறார்கள். சில குழந்தைகள் படிப்பு தாண்டி தங்களின் திறமைகள் மேல அதிக ஆர்வமா இருக்காங்க.

அதனால அவங்களால படிப்பு மேல ஆர்வம் செலுத்த முடியாமல் போகிறது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்காகவேதான் நான் ஒரு அகாடமியை தொடங்கினேன். வார இறுதி நாட்களில் பரத நாட்டிய வகுப்புகள், கிளாசிக் டான்ஸ் பயிற்சி, யோகா வகுப்புகள், கிட்டார் இசை பயிற்சி வகுப்புகள் என கலைச் சார்ந்த விஷயங்களை பற்றி சொல்லிக் கொடுப்போம். அதற்கான தனிப்பட்ட பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்தேன். இங்கு பயிற்சிக்காக வரும் குழந்தைகளிடம் ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் இடத்திற்கான வாடகைக்கான தொகையினை மட்டுமே வசூலிக்கிறேன். மற்றுப்படி வேறு எதற்காகவும் அவர்களிடம் நான் பணம் வாங்குவதில்லை.

சில குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்கும், ஆனால் போதிய வசதி இருக்காது. அவர்களுக்கு இலவச பயிற்சி கொடுக்கிறேன். சமூக நோக்கத்திற்காகத்தான் நான் இந்த அகாடமியை ஆரம்பிச்சேன். இதை லாபம் பார்க்கும் தொழிலா மாற்ற எனக்கு விருப்பமில்லை. நான் இது போக ‘பிரின்ஸ்’ என்ற பெயரில் வளர்ப்பு மீன் கடை ஒன்றையும் நடத்தி வருகிறேன். நான் இந்த பயிற்சி மையத்தினை என்னிடம் டியூஷன் படிக்கும் குழந்தைகளை மனதில் கொண்டுதான் துவங்கினேன்.

அவர்கள் மூலமாகத்தான் மற்ற குழந்தைகளும் என்னுடைய அகாடமிக்கு வந்தாங்க. இங்கு வந்த பிறகு குழந்தைகள் தங்களிடம் மறைந்து இருந்த டான்ஸ், பாட்டு போன்ற திறமைகளை மெருகேற்றிக் கொண்டு இருக்காங்க. அதே சமயத்தில் படிப்பிலும் கவனம் செலுத்துகிறார்கள். இதை எதிர்பார்த்துதான் நான் இந்த அகாடமியை தொடங்கினேன். நான் எதிர்பார்த்தது நடக்குதுன்னு நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு’’ என மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் கிரிஸ்டி ரூபெல்லா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குருதியுறையாமை அறிவோம்! (மருத்துவம்)
Next post குழந்தைகளுக்கான ஈகோ ஃப்ரண்ட்லி பொம்மைகள்!! (மகளிர் பக்கம்)