குழந்தைகளுக்கான ஈகோ ஃப்ரண்ட்லி பொம்மைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 7 Second

பொம்மைகள் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது. பெற்றோர்களுடன் வெளியில் கடைக்கு சென்றாலோ அல்லது சுற்றுலா செல்லும் இடத்தில் நாம் முதலில் பார்ப்பது அங்கு இருக்கும் பொம்மைகளும், அலங்கார பொருட்களும்தான். அதிலும் தற்போது கைகளால் செய்யப்பட்ட மற்றும் நூல்களால் ஆன பொருட்களுக்கு நிகரே கிடையாது. அப்படிப்பட்ட குரோசே என சொல்லப்படும் நூல்களால் ஆன பொம்மைகளை பாட்டி, அம்மா மற்றும் பேத்தி என்று மூன்று தலைமுறையாக குடும்பமாக செய்து வருகின்றனர் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்த புவனேஸ்வரி.

‘‘என்னதான் மெஷின்களின் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொம்மைகளும், துணிகளும் இருந்தாலும், நம்முடைய கைகளால் செய்து கொடுக்கும் போது ஒரு அம்மாவுக்கு எவ்வளவு திருப்தி கிடைக்கும் என்பதை வாய் வார்த்தையாக சொன்னால் புரியாது. அதை உணரும் போது அதில் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. அந்த உணர்வினை நானும் அனுபவிக்க விரும்பினேன். என் குழந்தைக்கு எல்லாமே என் கையால் செய்ய ஆரம்பிச்சேன். அது நாளடைவில் எனது நண்பர்களின் வீட்டிற்கு செல்லும் போது, அன்பளிப்பு கொடுக்க என்னோட இந்தக் கலை மிகவும் உதவியது’’ என பேசத் துவங்கிய புவனேஸ்வரி, 2018ல் தன் குழந்தைக்காக பொம்மைகளை செய்ய ஆரம்பித்தவர், 2019ல்தான் அதனை விற்க ஆரம்பித்துள்ளார்.

‘‘சங்கரன்கோவில் தான் என் பூர்வீகம் என்றாலும் திருமணத்திற்கு பிறகு மலேசியாவில் செட்டிலாயிட்டேன். ஆரம்பத்தில் என் பாட்டி வீட்டில் இந்த நூல் பொம்மைகளை தயார் செய்வதை பார்த்திருக்கிறேன். அதன் பிறகு என் பெரியம்மாவை தொடர்ந்து நானும் இந்த நூல் பொம்மைகளை செய்துட்டு இருக்கேன். அவர்கள் வீட்டில் வைப்பதற்காகவும், ழுதுபோக்கிற்காகவும்தான் இதை செய்ய தொடங்கினார்கள்.

என் திருமணத்திற்கு பிறகு நானுமே எனது பொழுது போக்கிற்காகவும், என் குழந்தைக்காகவும் பின் என் நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது பரிசு பொருளாகவும் தான் இதனை செய்து வந்தேன். அதை பார்த்து பலரும் செய்து தரச்சொல்லி கேட்க ஆரம்பிச்சாங்க. அதன் பிறகுதான், எனக்கு இதை ஏன் ஒரு தொழிலாக மாற்றி அமைக்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அதனால், என் பெரியம்மாவையும் ஊக்கப்படுத்தி அவருடன் சேர்த்து நாங்கள் செய்யும் பொம்மைகளை விற்க ஆரம்பிச்சேன்.

ஆனால் இந்த பொம்மைகள் விற்பதில் எனக்கு இருக்கும் ஒரே சிக்கல் மலேசியாவிலிருந்து பொம்மைகளை இங்கு இறக்குமதி செய்வது மட்டுமே. காரணம், அதற்கு ஏற்படும் செலவு. அதனால், ஒவ்வொரு முறை நான் இந்தியாவிற்கு வரும் போதும் மற்ற நாட்களில் நான் செய்த பொம்மைகளை கையோடு கொண்டு வந்து அதை ஆர்டர் செய்தவர்களுக்கு அனுப்புவேன். அந்த இறக்குமதி செலவையும் பொருட்படுத்தாமல் சிலர் இந்த பொம்மைகளை வாங்கி செல்ல முன்வருவார்கள்.

அவர்களுக்கு நேரடியாக கொரியர் மூலமாகவோ அல்லது எனது நண்பர்கள் யாரேனும் இந்தியா செல்வது போல் இருந்தால் அவர்கள் மூலமாகவோ, மலேசியாவிலிருந்தே பொம்மைகளை அனுப்பி வைப்பேன். ஆனால், அதிகபட்சமாக நான் வரும் போது கொண்டு வருவதோடு சரி. அதையும் மீறி சிலர் உடனடியாக பொம்மை வேண்டும் என்று கேட்பார்கள். அவர்களுக்கு என் பெரியம்மா மூலமாக அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொம்மைகளை செய்து கொடுப்பேன்.

நான் செய்யும் இந்த பொம்மைகளின் விலை குறைந்தது நூறு ரூபாயிலிருந்து துவங்கி அதிகபட்சமாக ரூ.800 வரைக்கும் விற்கப்படுகிறது. இந்த பொம்மை செய்ய எடுத்துக் கொள்ளும் நேரத்தை பொறுத்தே இதோட விலை வேறுபடும். குறிப்பா குழந்தைகளுக்கு செய்யும் பொம்மைகள் அத்தனையும் காட்டன் நூல்களால் செய்வதால், நூலின் விலை மற்றும் தரத்தை பொறுத்தும் விலை வேறுபடும். சில கீ செயின்களில் விலங்குகளின் முகங்கள் மட்டும் செய்யும் போது அதில் தரமான பஞ்சுகளை வைத்து திணிப்பதற்கும், மற்ற பொம்மைகளை செய்வதற்கும் குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் ஆகும். 10 சென்டிமீட்டர் முதல் கொஞ்சம் பெரிய பொம்மைகள் வரை செய்துட்டு இருக்கேன்.

இந்த பொம்மைகளுடன், குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை செய்து தருகிறேன்’’ என்றவர், நூல் பொம்மைகள் செய்வது மட்டுமில்லாமல், குழந்தைகளூக்கான ஸ்வெட்டர், குழந்தைகளின் தொட்டில்களில் தொங்கவிடப்படும் பலவிதமான பொம்மைகள், கீ செயின்கள், குழந்தைகளின் ஆடைகளில் அவர்கள் விரும்பும் சில கார்ட்டூன் பொம்மைகளின் முகங்கள் மற்றும் புகைப்படங்களை அலங்கரிக்கும் போட்டோ ப்ரேம்கள், ஃப்ரிட்ஜ் மேக்னெட்களையும் செய்து வருகிறார்.

‘‘நான் பொம்மைகள் செய்ய துவங்கும் முன்பு நூல்களால் ஆன நகைகளைதான் செய்து வந்தேன். அதற்கு மலேசியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தற்போது இந்த பொம்மைகள் செய்வது தொடர்பாக ஆன்லைன் வகுப்புகளும் எடுத்து வருகிறேன். அதுமட்டும் இல்லாமல், இந்த பொம்மைகள் முழுக்க முழுக்க நூல் மற்றும் காட்டன் வைத்து செய்வதால் அவை அழுக்கானாலும் துவைத்து மீண்டும் உபயோகப்படுத்தலாம். நூல்களால் பொம்மைகள் செய்ய முக்கிய காரணம் ப்ளாஸ்டிக் இல்லாமல் உருவாக்கப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்கு விளையாட கொடுப்பது மட்டுமில்லாமல், ப்ளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம்’’ என்றுதனது கோரிக்கையை வைக்கிறார் புவனேஸ்வரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகளின் தனித் திறமைகளை பெற்றோர்கள் கவனிக்கணும்! (மகளிர் பக்கம்)
Next post ஆஸ்துமாவை விரட்டும் ஆடாதொடை!! (மருத்துவம்)