கற்பனைத் திறனை தூண்டும் பனை ஓலை பொம்மைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 54 Second

‘கல்வி… பிழைப்புக்கானது என்று மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல… தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர அறிவு சார்ந்து மட்டுமில்லாமல் கலை சார்ந்த விஷயங்களையும் வெளிக்கொண்டு வருவதற்கு கல்வி இன்றியமையாதது’’ என்கிறார் மோகன வாணி. இவர் பனை ஓலைகளில் பறவைகள், பூக்கள் செய்து அதற்கு தனியாக கதைகளை சொல்லி குழந்தைகளுக்கு பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார். தமிழ்நாடு மட்டுமில்லாமல் பெங்களூர், மும்பை என பல இடங்களுக்கும் இந்த பயிற்சி வகுப்புகளை நீட்டித்து உள்ளார். எல்லா பயிற்சி வகுப்புகளிலும் தற்சார்பு வாழ்வியல் நடைமுறையில் யதார்த்த கல்வியையும் இதனோடு சொல்லி வருகிறார்.

‘‘பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவையில் உள்ள மதுக்கரையில்தான். படிப்பு முடிச்சதும் கல்யாணம், குழந்தை என வாழ்க்கை கழிந்தது. நான் சின்ன வயதிலேயே சமூகம் சார்ந்த விஷயங்களை செய்வதில் ஆர்வமாக இருந்தேன். அதனாலேயே கல்வி சார்ந்தும் கொஞ்சம் மாற்று சிந்தனைகளை கொண்டிருந்தேன். நம்முடைய கல்வி திட்டங்கள் அறிவு சார்ந்த விஷயங்களை மட்டுமே கணக்கில் வைத்துள்ளது. வாசிப்பதும் எழுதுவதை தாண்டி குழந்தைகளுடைய மன உணர்வுகளை, குழந்தை தனங்களை எல்லாம் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை. கல்வி என்பது பிழைப்புக்கானது, தொழிலுக்கானது என்று அணுகக்கூடாது.

தன்னை பற்றியும் மற்றவர்கள் குறித்தும் புரிந்து கொள்ளவும், சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகள் அதன் காரணிகளை அறிந்து கொள்ளவும், அந்த சூழ்நிலைகளை கையாளவும் தெரிந்து கொள்ளவது தான் உண்மையான கல்வி. சமுதாயத்தை சீர்படுத்தவேண்டுமென்றால் அதை குழந்தைகளிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். இதை சொல்லி தருவதற்காக மாற்று சிந்தனைகளை கொண்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதற்காக எங்கெல்லாம் இந்த மாதிரி பள்ளிகள் இருக்கிறது என ஆராயத் தொடங்கினேன். அப்போதுதான் எனக்கு
‘குக்கூ’ காட்டுப் பள்ளிகள் குறித்து தெரிய வந்தது.

அவர்களுடைய கல்வி சம்பந்தமான வேலைகள் எல்லாமே எனக்கு பிடித்திருந்ததால், என்னுடைய பங்களிப்பை செலுத்த நினைத்தேன்.ஒருமுறை கோவை புத்தகக் கண்காட்சியில் குக்கூ பள்ளியில் வெளியிடும் இதழ்கள், புத்தகங்களை விற்பனைக்காக ஸ்டால் அமைத்திருந்தார்கள். அதில் குழந்தைகளை கவரும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்காக யூடியூப்பில் பனை ஓலைகளில் பறவைகள், பூக்கள் போன்றவை செய்வதை பார்த்து நானும் செய்ய கற்றுக் கொண்டேன். அந்த கண்காட்சிக்கு வரும் பள்ளிக் குழந்தைகளை கவர பனை ஓலைக் கொண்டு பொம்மைகள் எல்லாம் செய்து ஸ்டாலில் வைத்திருந்தேன். கண்காட்சிக்கு வந்திருந்த குழந்தைகளை பனை ஓலை பொருட்கள் கவர்ந்தது.

பலரும் அதை சொல்லி கொடுக்க சொல்லி கேட்டார்கள். எனக்கும் இதை ஏன் குழந்தைகளுக்கு சொல்லி தரக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது’’ என்றவர் பள்ளி குழந்தைகளுக்கு அதைச் சொல்லி கொடுக்க தொடங்கியுள்ளார். ‘‘பொம்மைகளை பார்த்தாலே குழந்தைகளுக்கு ஆர்வம் வரும். ஆனால் அவர்களுக்கு கிடைப்பது எல்லாமே பிளாஸ்டிக் பொம்மைகளே. அதோடு அந்த பொம்மைகள் எல்லாமே யாரே ஒருவர் செய்தது. நம் சின்ன வயது பருவங்களில் களிமண்ணால் பொம்மைகள் செய்து மகிழ்ந்திருப்போம். அதில் ஒரு கற்பனைத் திறனும் குழந்தைகளின் சுட்டித் தனங்களும் அடங்கி இருக்கும். அந்த சுவாரஸ்யங்கள் பிளாஸ்டிக் பொம்மைகளில் கிடைக்காது.

பனை ஓலைகளில் பொருட்கள் செய்வதை சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல் இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறை குறித்தும் சொல்லிக் கொடுப்பதற்கான ஒரு ஊடகமாகத்தான் நான் இந்த பொம்மைகளைப் பார்த்தேன். இதற்காக நேரடியாக பள்ளிகளுக்கு சென்று பனை ஓலைகளில் பொருட்கள் செய்ய கற்றுக்கொடுப்பதற்காக பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டேன். முதலில் நான் அதை செய்ய கற்றுக் கெண்டேன். என் மகனுக்கும் சொல்லிக் கொடுத்தேன்.

அவனும் முழு ஈடுபாட்டோடு கற்றுக் கொண்டான். அது மட்டுமில்லை, அவன் புதிதாக சில பொருட்கள் மற்றும் பொம்மைகளை உருவாக்கினான். அதைப் பார்த்த போது, கண்டிப்பாக இந்த பொம்மைகள் குழந்தைகளின் கற்பனை திறனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அடுத்த கட்டமாக, பள்ளி குழந்தைகளுக்கு இதைப் பற்றி பயிற்சி அளிக்க தயார் ஆனேன். நான் செய்வதை எளிமையாக குழந்தைகள் செய்வதற்கு ஏற்ப நானே பயிற்சி செய்து பார்த்துக் கொண்டேன். நான் பார்க்கும் பிளாஸ்டிக் பொருட்களை எல்லாம் பனை ஓலைகளில் செய்ய முடியுமா என முயற்சி செய்து பார்த்தேன்.

சில பொருள்கள் செய்ய முடிந்தது சிலவற்றை செய்ய முடியவில்லை. அதன் பிறகு முதல் கட்டமாக என் வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் அனுமதி பெற்றேன். நான் செய்தவற்றை தொகுத்து குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கத் தொடங்கினேன். அவர்களின் கற்பனைத் திறன் அதிகரிப்பதை நேரில் பார்க்க முடிந்தது. நான் சொல்லித் தந்ததைக் கொண்டு, அவர்களுடைய கற்பனைத் திறனும் சேர்ந்த போது அது அழகான வேறொரு பொருளாக மாறியது.

மேலும் அவர்களின் கவனம் சிதறுவது குறைந்ததால், பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களும் நல்ல மதிப்பெண் எடுக்க ஆரம்பித்தார்கள். ஒரு பறவை அல்லது விலங்கினை பனை ஓலைக் கொண்டு செய்யும் போது, அந்தக் குறிப்பிட்ட விலங்கு பற்றி கதையும் சொல்ல ஆரம்பித்தேன். அதில் பொம்மையாக வடிக்கப்பட்ட விலங்கு குறித்த தகவல்கள் இருக்கும். இதன் மூலம் குழந்தைகள் பொம்மை மட்டுமில்லாமல், அந்த விலங்கு குறித்த செய்தியையும் தெரிந்து கொண்டார்கள். இதனால் பள்ளி நிர்வாகம் மத்தியில் இந்த பயிற்சி வகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து என் மகனுடைய பள்ளியிலும் பயிற்சி வகுப்புகளை நடத்தினேன்.

தமிழ்நாடு மட்டுமில்லாமல் பெங்களூர், மும்பையில் உள்ள பள்ளிகளில் பயிற்சிகளை நடத்தி வருகிறேன். அடுத்த கட்டமாக பழங்குடி குழந்தைகளிடமும் இதை கொண்டு சேர்க்க வேண்டுமென்று திருவண்ணாமலை, ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறேன். நான் ஒருவரே பல இடங்களுக்கும் செல்ல முடியாது என்பதால், அந்தந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். இதன் மூலம் பல பள்ளிகளில் இந்த பயிற்சி திட்டத்தினை செயல்படுத்த முடியும். என்னைப் பொறுத்தவரை புதுப்புது முறைகளில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரவேண்டும்’’ என்றவர், மாற்று சிந்தனை முறை கொண்ட வால்டோர்ஃப் (waldorf) கல்வி முறையை பயின்று வருகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வட மாநிலங்களுக்கு வண்டி ஓட்டும் லாரிப் பெண்கள்!! (மகளிர் பக்கம்)
Next post பிரண்டையின் பலன்கள்!! (மருத்துவம்)