பிரண்டையின் பலன்கள்!! (மருத்துவம்)
பிரண்டை சதைப்பற்றுள்ள நாற்கோண வடிவமான தண்டு. பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற பெயர் உண்டு. பிரண்டைச் சாறு உடலில் பட்டால் நமைச்சல் அரிப்பு ஏற்படும். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, கரோட்டின் போன்ற சத்துகள் உண்டு. அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றிற்கு சிறந்த பயன் தரக்கூடியது.
மன அழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் பிரண்டை துவையல் எடுத்துக் கொண்டால் செரிமான சக்தி தூண்டப்படும். மூல நோயால் அவதிப்படுவோருக்கு பலன் கூடும். இதயப் பாதிப்புக்குள்ளானவர்கள் இத்துவையலை சாப்பிட்டு வர, ரத்தத்தில் உள்ள கொழுப்புப் படிதல் நீங்கி ரத்த ஓட்டம் சீராகும். இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி இடுப்புவலி போன்றவற்றிற்கு நல்லது.
குழந்தை பிறப்பிற்குப் பின் பெரும்பாலான பெண்களின் அடிவயிறுப் பகுதி சதை போடும். பிரண்டையில் உள்ள சத்துகளுக்கு அடிவயிற்றின் கொழுப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. குழந்தை பெற்ற தாய்மார்கள் பிரண்டையை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் அடிவயிறு கொழுப்பை எளிதாக குறைக்கலாம். பிரண்டை உப்பு 2 முதல் 3 கிராம் பாலில் கலந்து குடிக்க அடிவயிறு பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.
பிரண்டையை துவையலாக செய்து உண்ண சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபகசக்தி பெருக்கும், எலும்புக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்தும்.
வாரத்தில் இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். குழந்தைகளுக்கு கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும், எலும்பு முறிவு ஏற்பட்டாலும் உடைந்த எலும்புகள் விரைவாக கூடும்.
அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டைச் சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாக பற்றுப் போட வேண்டும்.
பிரண்டைத் துவையல் செய்ய, பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்றி அதில் உள் நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக தேங்காய், உளுந்து சேர்த்து கொள்ளலாம்.