கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 12 Second

எனக்கு வயது 25. பதினைந்து வருடங்களாக தூரப்பார்வைப் பிரச்னைக்காக கண்ணாடி அணிகிறேன். கடந்த சில ஆண்டுகளாக, என்னை நண்பர்கள் பலரும் ‘லேசர்’ சிகிச்சை செய்துகொள்ளச் சொல்கிறார்கள். எனக்கு அதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. ஒருமுறை லேசர் சிகிச்சை செய்தால், மீண்டும் கண்ணாடி உபயோகிக்கவேண்டிய சூழலே உருவாகாதா அல்லது எந்த மாதிரியான நேரத்தில் மீண்டும் கண்ணாடி உபயோகிக்க வேண்டும்?
– கே.ஷ்யாமளா மாதவன், திருப்பூர்.

தூரப்பார்வை இருப்பவர்களுக்கு மட்டுமே லேசர் சிகிச்சை பரிந்துரைக்கப்படும் என்பதால், நீங்கள் தாராளமாக சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு பவர் (Power) மிக அதிகமாக இருந்தால், லேசான நெருடல் ஏற்படலாம். வெகு சிலருக்கே இப்படியான நெருடல் ஏற்படும் என்பதால், அதுகுறித்து பயப்பட வேண்டாம்.

40 வயதுக்கு மேல், வாசிப்பதில் சிக்கல் ஏற்படுவது மிகவும் பொதுவான பிரச்னை என்பதால், அந்நேரத்தில் வாசிப்பதற்காக மட்டுமே கண்ணாடி உபயோகிக்கவேண்டிய சூழல் இருக்கும். 60 வயதுக்கு மேல், வயது முதிர்வு காரணமாக கருவிழிகளில் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருக்கும்.

மற்றபடி, இதே தூரப்பார்வைப் பிரச்னைக்காக மீண்டும் ஒருமுறை கண்ணாடி உபயோகிக்கவேண்டிய சூழல் உருவாகாது. தூசு அதிகமிருக்கும் பகுதியில் இருப்பவர்கள், மிகக் கூர்மையான, நுண்ணிய பொருட்களைப் பார்த்து வேலை செய்பவர்கள் போன்றோர் லேசர் சிகிச்சை செய்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதுண்டு. ஒருவேளை உங்கள் பணி அப்படிப்பட்ட ஏதாவதொன்று என்றால், உங்கள் மருத்துவரிடம் நன்கு ஆலோசித்துக்கொள்ளுங்கள்.

இரவில் எவ்வளவு சாப்பிட்டுப் படுத்தாலும், காலையில் எழுந்ததும், அதிகமாகப் பசிக்கிறது. வயிற்றுக்குள் கொள்ளிக்கட்டை எரிவதுபோல ஓர் உணர்வு. எப்போதும் சோர்வாகவே இருக்கிறது. சாப்பிட்டாலும் சோர்வு நீங்குவதில்லை. இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது?
– கு.சின்னதம்பி, திருச்செந்தூர்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அதீத பசி உணர்வு இருப்பது இயல்பு. எனவே, சர்க்கரைக்கான பரிசோதனை ஒன்றைச் செய்துகொள்வது நல்லது. ஒருவேளை சர்க்கரை நோய்க்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருபவர்கள் என்றால், மாத்திரையின் டோசேஜ் அளவு சீரற்று இருப்பதால் ஏற்படும் உடல் மாற்றங்களின் வெளிப்பாடாக இந்த அறிகுறிகள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள்,  உங்கள் சர்க்கரைநோய் நிபுணரை அணுகவும்.

இவை அல்லாமல், உணவுப் பழக்கத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும், நீங்கள் சொன்ன அறிகுறிகள் தெரியும். உதாரணமாக, இரவு கார்போஹைட்ரேட் அதிகமான உணவைச் சாப்பிட்டுவந்தால், அதிகாலையில் பசி அளவுக்கதிகமாக ஏற்படும். காரணம், கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானம் அடைந்துவிடும். புரதம் அதிகமுள்ள
உணவுகளைச் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது. இரவு நேரத்தில், 8:30 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக்கொள்ளுங்கள். ஒரு மணி நேர இடைவெளிக்குள் பால் குடித்து விட்டு உறங்கிவிடுங்கள். இந்தப் பழக்கம், உங்களை அதிகாலையில் புத்துணர்ச்சியோடு செயல்படவைக்கும்.

`சாம்பிள் மருந்துகளைத் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்’ என்கிறார்கள் நான் விசாரித்த மருத்துவர்கள் சிலர். என்றாலும், சிலர் அந்த சாம்பிள் மருந்துகளை விற்பனை செய்வதையும் காணமுடிகிறது. இப்படி விற்பனை செய்வது சரிதானா… சாம்பிள் மருந்துகளை உட்கொள்வது நல்லதுதானா?
– ஆர்.ரத்னவேலு, செண்பகத்தூர்.

சாம்பிள் மருந்துகள் என்பவை பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு நோயாளிகளுக்குக் கொடுக்கலாம் என்ற நிலையில்தான் மருத்துவர்களின் கைகளுக்கு வருகின்றன. எனவே, சாம்பிள் மருந்துகளை, நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் அதிகாரம் மருத்துவர்களுக்கு உண்டு. ஆனால், அவற்றின் நன்மை தீமைகள் குறித்தும், அவற்றின் பயன்பாடு மற்றும் சாம்பிள் மருந்து குறித்தும் நோயாளிக்கு முன்னரே அறிவுறுத்தவேண்டியது அவசியம். எந்தச் சூழலிலும், பார்மஸி படிக்காத ‘மெடிக்கல் ரெப்’ கூறும் பரிந்துரையின் பேரில் மருத்துவர்கள் சாம்பிள் மருந்துகளை வாங்கக் கூடாது. அதேபோல, சாம்பிள் மருந்துகளை விற்பனை செய்வது சட்டத்துக்குப் புறம்பானது. ஒருவேளை அப்படியான நடவடிக்கைகள் தெரியவந்தால், கீழ்க்காணும் இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்.
http://www.drugscontrol.tn.gov.in/index.html

எனக்கு வயது 30. என் கன்னங்கள் இரண்டிலும் சருமம் வெளிர் நிறத்துடன் காணப்படுகிறது. இது ரத்தச்சோகையின் அறிகுறியா… இதற்குத் தீர்வு என்ன?
– கண்மணி, சேலம்.

சருமத்தில் வெளிர்நிறத் திட்டுகள் ஏற்படுவதை ரத்தச்சோகையின் அறிகுறி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. சருமப் பிரச்னைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். முதலில், ரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவை பரிசோதித்துப் பாருங்கள். ஏழுக்கும் குறைவாக இருந்தால், நெல்லிக்காய், பேரீச்சை, கீரை வகைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பழக்கத்துக்கு மாறுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையோடு இரும்புச்சத்து மாத்திரையும் உட்கொள்ளவும். ஒருவேளை ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால், சரும மருத்துவரை அணுகுங்கள்.

என் மகளுக்கு மூன்று வயதாகிறது. அவளுடைய பற்கள் அதிகளவு பூச்சி பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. `பல் விழுந்து முளைத்தால் சரியாகிவிடும்’ என்கிறார்கள் வீட்டிலுள்ளவர்கள். இதற்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமா?
– மேகலா ஸ்ரீநிவாசன், தாராபுரம்

குழந்தைகளுக்கு முதன்முறையாக முளைக்கும் பற்களுக்கு, `பால் பற்கள்’ என்று பெயர். இவை ஆறு வயதில் விழுந்து, அடுத்ததாக நிரந்தரப் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். பொதுவாக, குழந்தைகளின் பால் பற்களின் ஆரோக்கியத்தை, சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவைதான் அதிகம் பாதிக்கும். ஒரு முறை பற்களில் கிருமிகளின் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், பற்கள் விழுந்து முளைத்தாலும் பாதிப்பின் தாக்கம் நிச்சயம் இருக்கும். கிருமிகள் ஒரு பல்லிலிருந்து அடுத்தடுத்த பற்களுக்கு எளிதில் பரவி, மற்ற பற்களையும் சேதத்துக்கு உள்ளாக்கிவிடும். எனவே, லேசான பாதிப்பு இருக்கும்போதே சிகிச்சை மேற்கொள்வது நல்லது. மேலும் காலை, இரவு என இரண்டு வேளைகளும் குழந்தையைப் பல் துலக்கவைப்பது அவசியம். லேசான பாதிப்புதானே என விட்டுவிட்டால், குழந்தைகளுக்குப் பேசுவதில் தடுமாற்றம், உணவை மென்று உண்பதில் சிக்கல் போன்றவை ஏற்படும். பால் பற்கள்தானே என்று நினைக்காமல், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறவும்.

எனக்கு 30 வயதாகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்குப் பிறகான இந்த மாதங்களில் அடிக்கடி கால்களிலும் கைகளிலும் வலி ஏற்படுகிறது. எனக்கு கால்சியம் சத்துக் குறைபாடு ஏற்பட்டிருக்குமா?
– ஜி.நந்தினி, புலியூர்.

கைகால்களில் வலி உண்டாக, உடலின் நீர்ச்சத்துக் குறைபாடு (Dehydration) காரணமாக இருக்கலாம். நீங்கள் பாலூட்டும் அம்மாவாக இருந்தால், இதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டரை லிட்டர்வரை தண்ணீர் அருந்தவேண்டியது அவசியம். இளநீர் மிக நல்லது. கால்சியம் சத்துக் குறைபாட்டை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியவும். ஒருவேளை அது உறுதிசெய்யப்பட்டால், முட்டை, காய்கறிகள் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவும். தேவைப்பட்டால், மருத்துவரின் பரிந்துரையின்படி மாத்திரைகள் உட்கொள்ளலாம். உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைத்தால்தான் கால்சியம் குறைபாட்டை முழுவதுமாகச் சரிசெய்ய இயலும்.

இந்த வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் என்பதால், மருத்துவர் பரிந்துரைக்கும் நேரத்தில் தினமும் 10, 15 நிமிடங்கள் சூரிய ஒளி உடம்பில் படுவதுபோல வெயிலில் நிற்கவும். பிரசவகால சத்துக்குறைபாடுகளை ஈடுசெய்யவும், பாலூட்டும் காலத்துக்குத் தேவைப்படும் ஊட்டத்துக்காகவும் மருத்துவர் உங்களுக்குச் சத்து மாத்திரைகளை, குறிப்பிட்ட மாதங்கள்வரை உட்கொள்ளச் சொல்லிப் பரிந்துரைத்திருப்பார். அவற்றைத் தவறாமல் சாப்பிடவேண்டியதும் அவசியம். உடல் பலவீனமாவதிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ள அவை கைகொடுக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரண்டையின் பலன்கள்!! (மருத்துவம்)
Next post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…! (அவ்வப்போது கிளாமர்)