இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் பழங்குடி பெண்! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 13 Second

பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கியது இந்திய அணி. இந்தப் போட்டியில் முதல் முறையாக விளையாட வாய்ப்பு கிடைத்து அதில் அவர் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி கிரிக்கெட் உலகில் பேசு பொருளாக மாறியிருப்பவர்தான் 23 வயதே ஆன மின்னு மன்னி. கேரளாவை சேர்ந்த மின்னு மன்னி குறிச்சியா என்ற பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது மின்னுவின் கனவு.

இது ஆண்களுக்கான விளையாட்டு. வசதி படைத்தவர்கள் மட்டுமே அதில் விளையாடி கிரிக்கெட் வீரராக வலம் வரமுடியும் என்ற பேச்சுகளை எல்லாம் இன்று உடைத்திருக்கிறார். அதோடு இவர்தான் கேரளாவின் முதல் பழங்குடி கிரிக்கெட் வீராங்கனை. குடும்ப சூழ்நிலை ஏழ்மையாக இருந்தாலும் தன்னுடைய லட்சியங்கள் எல்லாம் பெரிதாக வைத்து இன்று இந்தியாவின் முகமாக மாறியிருக்கிறார் மின்னு மன்னி. வங்கதேச போட்டி முடிந்த கையோடு அடுத்த போட்டிகளுக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார் மின்னு மன்னி.

‘‘கேரளா வயநாடுதான் என் ஊர். அப்பா கூலித் தொழிலாளி. அம்மா ஒரு வீட்ல வேலை பார்க்கிறாங்க. நாங்க குறிச்சியா என்ற பழங்குடி சமூகத்தை சேர்ந்தவங்க. பள்ளியில் படிக்கும் போதே எனக்கு விளையாட்டு மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. குறிப்பா தடகள போட்டிகளில் ஆர்வத்தோடு கலந்து கொள்வேன். அதில் பல பரிசுகளும் வாங்கி இருக்கேன். இதோட உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கேன்.

அப்ப நான் எட்டாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். பள்ளி விடுமுறை நாட்களில், நானும் என் தம்பிகள் எல்லாரும் சேர்ந்து வயல் வெளியில் கிரிக்கெட் விளையாடுவோம். அப்படித்தான் எனக்கு இந்த விளையாட்டு பழக்கமாச்சு. கிரிக்கெட் விளையாடும் போது என் தம்பிகள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஆடிய ஷாட்டுகளை பற்றியும் அன்றைய காலகட்டங்களில் நடந்த மேட்சுகளை பற்றியும் பேசுவார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்கும் போது எனக்கும் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நானும் அவங்களோட சேர்ந்து கிரிக்கெட் மேட்சுகளை பார்க்க ஆரம்பிச்சேன்.

கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் களம் இறங்கும் போது ரசிகர்களின் வரவேற்பு மற்றும் கரகோஷத்தை பார்த்த போது, எனக்கும் அப்படி ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனையாக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. அதன் பிறகு நான் கிரிக்கெட் போட்டியினை மிகவும் கவனமாக பார்க்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு வீரரும் பந்து வீசும் திறன் மற்றும் அவர்கள் பேட்டிங் செய்யும் விதங்களை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டேன். என் தம்பிகள் விளையாடும் போது எல்லாம் அதை எனக்கு பயிற்சிக் களமாக எடுத்துக் கொண்டேன். ஆனால் அவர்களுடன் விளையாடும் போது பந்து வீசவோ அல்லது பேட்டிங் செய்யவோ எனக்கு வாய்ப்பு ெகாடுக்க மாட்டாங்க.

காரணம், அந்த டீமில் நான் மட்டும்தான் பெண். அதனால் என்னை பீல்டிங் செய்ய சொல்வாங்க. அப்படியும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொண்டு என் திறமையை மேம்படுத்திக் கொள்வேன். அதைவிட நான் இவர்களுடன் விளையாடுவதை விட நானே தனியாக பயிற்சி எடுத்துக் கொள்வேன். அப்படித்தான் நான் விளையாடவே கற்றுக் கொண்டேன்.

ஒரு நாள் நான் பள்ளியில் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்த என்னுடைய உடற்கல்வி ஆசிரியர் என்னை அழைத்து, ‘நீ கிரிக்கெட் நல்லா விளையாடு. தொடர்ந்து விளையாடு’னு சொல்லி என்னை மேலும் உத்வேகப்படுத்தினார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்குள் நான் எங்கோ ஒளிந்து போன என் கனவினை மீண்டும் புதுப்பித்தது. அதன் பிறகு தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பிச்சேன். ஆனால் எனக்குள் இந்த விளையாட்டு மேல் ஆர்வம் இருந்தாலும் அதை வெளிப்படையாக செய்வதற்கு எனக்கு பயமாக இருந்தது. காரணம், நாங்கள் வசிப்பது கிராமத்தில். என் வீட்டின் பொருளாதார சூழ்நிலை. மேலும் எனக்கு ஒரு தங்கை இருக்கா.

அவளையும் படிக்க வைக்கணும். அதற்கு நான் நல்லா படிச்சு வேலைக்கு போகணும். அப்பதான் என் குடும்பத்திற்கு என்னால் உதவ முடியும். இந்த நிலைமையில் நான் கிரிக்கெட் கனவு காண்பது என்பது முடியாத விஷயம். எல்லாவற்றையும் விட என் பெற்றோர்களும் கிரிக்கெட் எல்லாம் பெண்களுக்கு எதற்குன்னு சொல்லிட்டாங்க. எல்லாவற்றையும் விட எங்கப் பகுதியில் பெண்கள் யாரும் இந்த விளையாட்டினை விளையாட மாட்டாங்க.

ஆண்கள் மட்டுமே தான் விளையாடுவாங்க. இதனாலேயே என்னால் வீட்டில் நான் கிரிக்கெட் விளையாட போகிறேன்னு வெளிப்படையா சொல்லிட்டு போக முடியாது. இருந்தாலும் எனக்குள் இருந்த அந்த விளையாட்டு மோகம் நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தவில்லை. என்னுடைய ஆர்வத்தை புரிந்து ெகாண்டு என் உடற்கல்வி ஆசிரியர் என்னை கேரளா கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து விடுவதாக கூறினார்.

அகாடமியில் சேர்ந்தால், தினமும் பயிற்சிக்கு போகணும். வீட்டில் அனுமதிக்க மாட்டாங்க. ஆனால் என் ஆசிரியர் என் ஆர்வத்தை புரிந்து கொண்டு, அவரே வீட்டில் வந்து பேசி சம்மதமும் வாங்கினார். அதன் பிறகு கேரளா கிரிக்கெட் அசோசியேஷன் அகாடமியில் கிரிக்கெட் விளையாட சேர்ந்தேன். நான் பயிற்சிக்கு சேர்ந்த போது, ஜூனியர் பெண்களுக்கான மாநில அளவிலான போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. நான் வயநாடு அளவில் 13 வயதிற்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் பிரிவில் விளையாட தேர்வானேன்.

அகாடமிக்கு செல்ல நேரடி பேருந்து வசதி கிடையாது. நாலு பஸ் மாறிதான் போகணும். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து அம்மாவுக்கு கிச்சன் வேலைகளை முடித்துக் கொடுத்து, 7 மணிக்கு பஸ் ஏறுவேன். அப்பதான் 9 மணிக்கு பயிற்சிக்கு போக முடியும். என் பெற்றோருக்கு நான் நல்லா படிக்கணும். எனக்கோ கிரிக்கெட் விளையாடணும். இரண்டு கனவுகளுக்கும் நேரம் ஒதுக்கினேன். பயிற்சி நேரங்கள் போக மீதி நேரங்களில் படிப்பேன். நான் கிரிக்கெட் போட்டிகளில் ஆல்ரவுண்டராக வலம் வந்தேன். இடது கை பேட்ஸ்மேன், வலது கை சுழற்பந்து வீச்சாளர் நான். என் பலமே இடது கை பேட்ஸ்மேன் என்பதுதான்னு என் உடற்கல்வி ஆசிரியர் கூறுவார்.

நான் இரண்டுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதுமட்டுமில்லாமல் விளையாட்டு விரர்களின் ஒவ்வொரு திறமையையும் கற்றுக் கொண்டேன். இதனால் எனக்கு ஒரு குறிப்பிட்ட வீரர் மட்டும்தான் ரோல்மாடல்னு சொல்ல முடியாது. எல்லோருமே என் ரோல் மாடலாகத்தான் நான் பார்த்தேன். அகாடமி என்னை ஒரு கிரிக்கெட்டராக மாற்றியது. எனக்கு பயிற்சியளித்தவர் ஷனாவாஸ் அவர்கள்தான். கிரிக்கெட் சம்பந்தமான பல நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். அகாடமியில் தொடர்ச்சியாக நன்றாக விளையாடியதால் 16 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவிலும் இடம் பெற்றேன். அதனை தொடர்ந்து கேரளா அணிக்கான பெண்கள் பிரிவில் விளையாட வாய்ப்பு கிடைச்சது.

அதுவும் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பும் கூடவே சேர்ந்து கொண்டது. தொடர்ந்து நான் விளையாட்டில் முன்னேறுவதை பார்த்த என் குடும்பத்தினரும் என்னுடைய கிரிக்கெட் விளையாட்டிற்கு முழு சப்போர்ட் கொடுக்க ஆரம்பிச்சாங்க. பயிற்சி காலத்தில் எனக்காக அப்பா வாங்கிய கடன்களை நான் விளையாட ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க ஆரம்பிச்சேன். அதுமட்டுமில்லாமல் எங்களுக்காக சின்ன வீடு ஒன்றும் கட்டினேன்.

கடந்த வருடம் மும்மையில் நடந்த தேசிய அளவிலான டி20 போட்டியில் எங்களுடைய கேரளா அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றோம். இந்த தொடரில் நான் 188 ரன்களுடன் பதினொரு விக்கெட்டுகளையும் எடுத்திருந்தேன். இந்த ஆட்டம் எனக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. இந்திய அணிக்காக விளையாட தேர்வானேன். பெண்களுக்காக நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டேவில்ஸ் அணி என்னை 30 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது’’ என்றவர் கடந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கிய பெண்கள் இந்திய அணியில் 11 பேரில் ஒருவராகவும் இடம்பிடித்துள்ளார்.

‘‘பெண்களுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் ‘ஏ’ பிரிவில் விளையாட வங்கதேசத்திற்கு எதிராக நடந்த போட்டியில் எனக்கு ஐந்தாவது ஓவரில் முதல் முறையாக இந்திய அணிக்காக பந்து வீச வாய்ப்பு கிடைத்தது. இதில் முதல் மூன்று பந்துகளில் 11 ரன்கள் எடுக்கவே, என்னை இந்திய அணியின் கேப்டன் பீல்டிங்கில் மாற்றம் செய்து கொள்ள சொன்னார். நான் சொன்னதுக்கு ஏற்ப மாற்றம் செய்த பிறகு, என்னுடைய நான்காவது பந்தில் விக்கெட் விழுந்தது.

முதல் ஓவரிலேயே முதல் விக்கெட். அது ஒரு நெகிழ்வான தருணம். உலக அரங்கில் என்னை கூர்ந்து கவனிக்க வைத்த தருணம். அந்த ஒரு நொடி என் வாழ்க்கையையே மாற்றி போட்டது. பல நாட்கள் என் வீட்டு சூழ்நிலை காரணமாக கிரிக்கெட் விளையாடுவதை விட்டு போய் விடலாம் என்று நினைத்து இருக்கிறேன். அந்த சமயம் எனக்கு வந்த சவால்களையும் கஷ்டங்களையும் நினைத்துக் கொண்டு திரும்பவும் பயிற்சிக்கு சென்று விடுவேன். என்றாவது ஒரு நாள் நான் சாதிப்பேன் என நினைத்து விளையாடுவேன். அது நான் எடுத்த விக்கெட்டின் முன் வந்து நின்றது. இந்த கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமே கொடுத்துள்ளது. 2018ல் வெள்ளத்தின் போது நான் கட்டிய வீட்டின் பெரும் பகுதியை வெள்ளம் அடித்து சென்றது.

இருந்தாலும் துவளாமல் மீண்டும் கட்டினேன். நான் இந்திய அணியில் விளையாடியதை பார்த்து என்னைப் போல் பல பெண்கள் தாங்களும் ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என கனவு கொண்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் நான் பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களையும் இந்தியாவின் எதிர்கால கிரிக்கெட் வீராங்கனைகளாக மாற்ற வேண்டும்’’ என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார் மின்னு மன்னி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விதைப்பை புற்றுநோய் அலர்ட்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post நாடகமே எனது உலகம்!! (மகளிர் பக்கம்)