நாடகமே எனது உலகம்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 46 Second

*நாடக நடிகை லாவண்யா வேணுகோபால்

பரதநாட்டிய கலைஞராக தனது கலை வாழ்வினை துவக்கி, ஒரு நடன கலைஞராக மேடையில் தோன்றிய லாவண்யா வேணுகோபால், கடந்த பத்து வருடங்களாக மேடை நாடக நடிகையாக நாடக உலகில் துருவ நட்சத்திரமாக மின்னி வருகிறார். தனக்கென தனிப்பாதையை வகுத்து நாடக உலகில் தனி இடம் பிடித்துள்ள லாவண்யா தற்போது தனது சக நாடகக் கலைஞருடன் இணைந்து ‘Three’ என்ற நாடகக் குழுவினை அமைத்து சொந்தமாக மேடை நாடகங்களை நடத்தி பல்வேறு பாராட்டுகளை பெற்று வருகிறார். அவர் தனது பத்து வருடகால நாடக அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

*உங்களை பற்றி…

ஆறு வயதில் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு நடன கலைஞராக மேடையேறினேன். எட்டு வருடம் தனஞ்செயன் மாஸ்டரிடம் நடனம் கற்றுக்கொணடேன். அதனை தொடர்ந்து ஊர்மிளா சத்யநாராயணனுடன் மேடை நடனம் ஆடிக்கொண்டிருந்தேன். அதன் பிறகு கடந்த பத்து வருடம் முன்பு குடந்தை மாலி அவர்களால் நாடக நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டேன். பிறகு காத்தாடி ராமமூர்த்தி அவர்களோட மேடை நாடகங்களில் தொடர்ந்து எட்டு வருடமாக நடித்தேன். அவருடைய நாடகக்குழுவில் கடவுளின் அருளால் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அவருடைய புகழ்பெற்ற நாடகங்களான ‘‘துப்பறியும் சாம்பு”, ‘‘ஹனிமூன் கப்புள்”, ‘‘கௌரி கல்யாணம்” போன்ற புகழ்பெற்ற நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அவருடைய 500 ஷோக்களில் கிட்டத்தட்ட 17 நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்பவே பெருமையா இருக்கு.

*‘Three’ நாடகக் குழுவை உருவாக்கியது எப்படி?

நிறைய மேடை நாடகங்களில் நடித்த அனுபவங்களை சேர்த்து எனக்கென சொந்தமாக ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இதுவரை 25 நாடகங்களில் நடித்த அனுபவம் எனக்கு உண்டு. ஒவ்வொரு நாடகங்களும் பலமுறை மேடைகளில் அரங்கேற்றிய அனுபவத்தினை வைத்தே சொந்த நாடகக் குழுவை உருவாக்கினேன். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் எனது சக நாடக கலைஞர் பாஸ்கர் அவர்களோடு சேர்ந்து ‘Three’ நாடகக் குழுவை ஆரம்பித்தேன். அதன் மூலம் எனது சில்வர் ஜூப்ளி நாடகமாக ‘‘பாயும் ஒளி” நாடகத்தினை எனது குழுவின் முதல் நாடகமாக மேடையேற்றினோம். இதுவரை ‘‘பாயும் ஒளி” நாடகத்தை ஏழு முறை மேடையேற்றி பலரது பாராட்டுதல்களை பெற்று வருகிறது.

*‘‘பாயும் ஒளி”க்கு வரவேற்பு எப்படி இருந்தது?

பாயும் ஒளி நாடகத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஸ்ரீவத்சன். இவருக்கும் நாடக உலகில் 25 வருடகால அனுபவம் உண்டு. இவரும் சொந்தமாக நாடகக்குழு ஒன்றை நடத்தி வருகிறார். எங்க நாடகக் குழுவிற்காக ஒரு நாடகம் எழுதித் தருமாறு நானும் பாஸ்கரும் இவரிடம் கேட்டோம். அப்படித்தான் எங்களுக்காக இந்த அருமையான நாடகத்தை எழுதி தந்தார். நடுத்தர வயதில் ஏற்படும் காதல் குறித்த கதைதான் பாயும் ஒளி. அதை அழகாக நாடக வடிவத்தில் கொண்டு வந்துள்ளார். கத்தி மேல் நடக்கும் கதைக் களம் என்றாலும் அவர் குறிப்பிட்டுள்ள விஷயத்தை இம்மியளவும் தரம் விலகாமல் தந்துள்ளார். இந்த நாடகம் எங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பினையும் பாராட்டுதல்களையும் பெரிய அளவில் பெற்றுத்தந்துள்ளது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

*நாடக உலகில் கிடைத்த விருதுகள் குறித்து…

நான் நடிக்க வந்த முதல் வருடமே நாடக உலகின் ஆஸ்கார் என்று அழைக்கப்படும் மயிலாப்பூர் அகாடமி விருதினை பெற்றேன். கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சிறந்த நடிகைக்கான விருதினை காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் ‘‘நீயாநானா” நாடகத்திற்காக 2016ம் ஆண்டு ஒருமுறையும், ‘‘நன்றி மீண்டும் வாங்க” நாடகத்திற்காக 2019ல் இரண்டாவது முறையும் பெற்றுள்ளேன். மீண்டும் ‘‘நீயா நானா”விற்காக மயிலாப்பூர் அகாடமியின் சிறந்த நடிகை விருதினை இரண்டாவது முறையாக பெற்ற போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்றுதான் சொல்லணும். அடுத்து நாடகத்துறையை சிறப்பு செய்தமைக்காக 2019ம் வருடம் Performance Excellence என்ற விருது கிடைத்தது. அதே ஆண்டு சிறந்த தியேட்டர் ஆர்டிஸ்ட் விருதினையும் பெற்றேன். லேடிஸ் ஸ்பெஷல் பத்திரிகை வழங்கிய யுவஷக்தி விருதினை 2022ல் பெற்றேன்.

*நாடகத் துறையை தேர்வு செய்ய காரணம்?

நடன கலைஞராக மேடையேறிய எனக்கு மேடையிலேயே இருக்க வேண்டும் என்கிற பேராசை உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றியது இந்த நாடகத்துறை என்றால் அது மிகையாகாது. நமது பொக்கிஷம் போன்று சிறந்து விளங்கும் நாடகக் கலையை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் சொந்த நாடகக்குழு என்கிற ஐடியா.

நாடகத் துறைக்கு நிறைய இளைய தலைமுறையினரை வரவழைக்க வேண்டும் என்கிற ஆசைகள் எனக்கு நிறைய உண்டு. நாடகத்துறைக்கென ஒரு வருமானத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத்தர வேண்டும். ஆனால் அதே சமயம் துரதிர்ஷ்டவசமாக நாடகத்துறைக்கென போதுமான விளம்பரதாரர்களோ, வருமானங்களோ கிடைப்பதில்லை என்கிற கசப்பான உண்மையையும் நாங்கள் ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது. இருந்தாலும் இந்த நாடகக் கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது என்னுடைய கனவு. அந்த முயற்சியை நோக்கி எங்களின் ‘Three’ நாடகக்குழு பயணிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

*பிடித்த கதாபாத்திரங்கள்…

மனோரமா ஆச்சி நடித்த ‘‘என் வீடு என் கணவன் என் குழந்தை” நாடகம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் ஆச்சி கேரக்டரில் ‘‘அன்னபூரணி”யாக நான் நடித்த அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தற்போது ‘பாயும் ஒளி’யில் நான் செய்யும் நர்மதா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர். பாயும் ஒளி மேடை நாடகத்தை பார்த்த பலரும் எங்களை பாராட்டியது மேலும் எங்களுக்கு நல்ல சிந்தனை கொண்ட நாடகங்களை உருவாக்க வேண்டும் என்ற உற்சாகத்தினை அளித்துள்ளது. குறிப்பாக நாடக உலக ஜாம்பவான்களான டெல்லி கணேஷ் மற்றும் பாம்பே ஞானம் அவர்களும் எங்களின் நாடகத்தைப் பார்த்து வாழ்த்து தெரிவித்திருக்காங்க. அதை எங்களின் வாழ்நாள் பாக்கியமாக நினைக்கிறேன்.

*உங்கள் எதிர்கால லட்சியங்கள்…

நாடகத்தில் எனது சிறப்பான நடிப்பை கண்டு பெரியத்திரை, சின்னத்திரை, விளம்பர படங்கள் என ஏராளமான வாய்ப்புகள் தொடர்ந்து வருகிறது. ஆனால் எனக்கு நாடகத்துறை மீதே அதிக அளவு ஆர்வம் இருக்கிறது. இன்னமும் நாடகத்துறையில் சவாலான பலதரப்பட்ட கதாபாத்திரங்களை நடிப்பதில் மட்டுமே எனக்கு அதீத விருப்பமாக உள்ளது. Three குழு மூலம் தொடர்ந்து நாடகத்துறையில் புதிய முயற்சிகளில் இறங்கவே விரும்புகிறேன்’’ என்கிறார் லாவண்யா வேணுகோபால்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் பழங்குடி பெண்! (மகளிர் பக்கம்)
Next post தலையணை இல்லாமல் தூங்கப் பழகுங்கள்!! (மருத்துவம்)