கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 45 Second

பேனாவால் புருவம் வரைபவரா நீங்கள்?

சாருமதிக்கு ஐம்பது வயது. மாதத்தில் ஒரு நாள், சராசரியாக 25 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து விடுவார். அவர் தொடர்ந்து விடாமல் வருவதற்குக் காரணம் அவர் கண்ணில் ஏற்படும் உறுத்தல். அது என்ன மாதத்தில் ஒரு முறை மட்டும் வரும் உறுத்தல்? மற்ற நாட்களில் வராதா என்று கேட்கிறீர்களா? அவரது உறுத்தலுக்குக் காரணம், அவரது இடது கண்ணின் கீழ் இமையில் வழக்கத்திற்கு மாறாக உள்நோக்கி வளரும் இரண்டு முடிகள். அடுத்த முறை அழகு நிலையத்திற்குச் சென்று புருவங்களில் முடியை நீக்கும் போதோ, அல்லது முன்னங்கை, முன்னங்கால்களில் உள்ள முடிகளைக் கையால் அகற்றினாலோ கவனித்துப் பாருங்கள், சராசரியாக ஒரே மாதத்தில் அதே நீளத்திற்கு அந்த இடத்தில் முடி வளர்ந்திருக்கும்.

இதே வளர்ச்சி கண்‌ இமைகளில் உள்ள முடிக்கும் பொருந்தும். சாருமதிக்கு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பாக ஒரு சாலை விபத்தில் முகத்திலும், கை, கால்களிலும் காயம் ஏற்பட்டது. கை மற்றும் காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அளவு பெரிது. ஒப்பீட்டளவில் கண்ணின் அருகில் ஏற்பட்டிருந்த காயம் மிகச்சிறியது என்பதால் கண் நிபுணர் அல்லாத வேறொரு மருத்துவரோ செவிலியரோ முகத்தில் தையல் போட்டுவிட்டார்கள்.

அந்தக் காயம் இடது கண்ணின் இமையின் கீழ்ப்பகுதி வரை நீண்டிருந்தது. தையல் போட்டதற்குப் பின் அந்தப் புண் ஆறி தழும்பாக மாறும் பொழுது இமையில் இரண்டு சென்ட்டிமீட்டர் மட்டும் உள்நோக்கி வளைந்து விட, அந்த சின்ன ஏரியாவில் உள்ள முடிகள் மாதா மாதம் உள்நோக்கி வளர்ந்து கண்ணில் உறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதைப்போன்ற காரணங்களால் எங்கள் செவிலியர்கள் மற்றும் செவிலிய உதவியாளர்களிடம் கண்களின் அருகில் இருக்கும் காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் போது மிகவும் கவனத்துடன் இருக்குமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

சாருமதிக்கு என்னதான் தீர்வு? இப்படி ஆயுள் முழுமைக்கும் வந்து கொண்டே இருக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது. சாருமதியிடம் அவரது உடலின் பிற காயங்கள் ஆறிய சில நாட்களிலேயே இதற்கு நிரந்தரத் தீர்வு இருக்கிறது. லேசர் கதிர்கள் மூலமாக உள்நோக்கி வளரும் இரண்டு முடிகளின் வேர்களையும் (hair follicles) நிரந்தரமாக செயலிழக்கச் செய்துவிட்டால் அதன் பின் அந்த இரண்டு முடிகள் மட்டும் வளராமல் இருக்கும். மற்ற முடிகள் எப்பொழுதும் போல் இருக்கும் என்று கூறினேன். ஏகப்பட்ட சிகிச்சைகளை செய்து உடலும் மனமும் அயர்ச்சியுற்று விட்டதால், இந்த மாதம் போகிறேன், அடுத்த மாதம் போகிறேன் என்று தள்ளிப் போட்டு வருகிறார் சாருமதி. பிளாஸ்டிக் சர்ஜன்கள் இப்படி தடம் மாறி வளரும் முடிகளின் வேர்களை இடம் மாற்றி வைக்கும் அறுவை சிகிச்சை முறைகளை முயற்சித்து வருகிறார்கள்.

இதே போன்றதொரு பிரச்சனை தான் பிரியதர்ஷினிக்கு. இவருக்கு 30 வயதுதான் ஆகிறது. அவருடைய கீழ் இமையின் அனைத்து முடிகளும் உள்நோக்கி வளர்கின்றன. இதை ஒரு பிறவிக் குறைபாடு என்றும் சொல்லலாம். சிலருக்கு இமை முடிகள் இரண்டு வரிசைகளாய் அமைந்திருக்கும். பிறரைப் போல ஒரு வரிசை கீழ்நோக்கி இருக்க, கூடுதலாய் அமையப்பெற்ற ஒரு வரிசையின் முடிகள் கண்ணின் உட்புறமாய் வளரும்.

உறுத்தல், கண் சிவப்பு, கருவிழி புண்படுதல், வெளிச்சத்தைப் பார்த்தால் கூசுதல் போன்ற அதிகபட்ச தொந்தரவுகளை இந்தப் பிரச்சனைகள் தரக்கூடும். நீண்ட நாட்களாகக் கண் இமைகளில் இருக்கும் அழற்சி, தொற்று முதலியவற்றால் இமைமுடிகள் வளரும் திசை பாதிக்கப்படக் கூடும். தலையில் பேன், பொடுகு தொந்தரவு அதிகம் இருப்பவர்களுக்கு இமை முடியிலும் அதனால் அழற்சி ஏற்படலாம். அத்தகைய நோயாளிகள் நீண்ட நாட்களாய் கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டே இருப்பார்கள். நீண்ட நாள் அழற்சி மற்றும் கையால் தேய்த்தல் இரண்டும் சேர்ந்து முடிகளின் வளர்ச்சியை திசைமாற்றி விடக்கூடும் தீக்காயங்கள், ரசாயனங்களால் ஏற்பட்ட காயங்கள், சில வகை மருந்துகளுக்கு ஏற்படும் அதீத ஒவ்வாமைகள், சில இணைப்புத் திசை நோய்கள் இவற்றிலும் இமையின் அமைப்பு பாதிக்கப்பட்டு இமைகளின் ஓரங்களும் முடிகளும் தடம் மாறக்கூடும்.

வயது முதிர்ந்தவர்கள் பலர் கண் உறுத்துகிறது, சிவப்பாய் இருக்கிறது போன்ற அறிகுறிகளுடன் வருவதுண்டு. இவர்களுக்கு இமைகளின் முடி சரியான திசையில் வளர்ந்தாலும் கண்ணைச் சுற்றியுள்ள தசைகளும், இமைகளின் அமைப்புத் தசைகளும் வயது முதிர்வு காரணமாய் நெகிழ்வுற்றிருப்பதால் இமை முடிகள் திசை மாறியிருப்பது போன்ற தோற்றம் ஏற்படலாம்.

சாருமதி வந்துவிட்டுப் போன சில நிமிடங்களில் நவீன் என்ற சிறுவன் தன் பெற்றோருடன் வந்தான். அவனுக்கு அடிக்கடி தூசியால் தீவிர ஒவ்வாமை ஏற்படும். கூடவே இமை முடிகளில் பொடுகு போன்ற வெள்ளை நிறத் துகள் அடிக்கடி உருவாகும் (blepharitis). கண்களை எப்போதும் கைகளால் கசக்கியபடியே இருந்தான். பெற்றோர் இருவரும் இரண்டு கைகளையும் பிடித்து வைத்திருக்க முயன்றனர். ‘‘இப்பல்லாம் அலர்ஜி மருந்து போட்டா உடனேயே சரியாயிடுது மேடம். இருந்தாலும் அந்த பழக்கத்தை விடாமல் இவன் கண்ணைக் கசக்கிகிட்டே இருக்கான், போன தடவை வரும்பொழுது கண் இமைகளை கிளீன் பண்ணச் சொன்னீங்க.

அதுவும் செய்ய விட மாட்டேங்குறான்” என்றார்கள் அவனது பெற்றோர். ‘அடிக்கடி கண்ணைத் தேய்ப்பதால் இமை முடிகள் உதிர்ந்து விடக்கூடும், கூடவே அவற்றின் வளர்ச்சியின் திசையும் மாறலாம், இதோ இந்த ஆன்ட்டிக்கு செய்வது போல் மாதா மாதம் உனக்கு முடியைப் பிடுங்கி விட வேண்டியதாக இருக்கும். கூடவே கண் இமைகளில் முடிகள் இருப்பது கண்ணுக்குப் பாதுகாப்பானது, பல அழுக்குகளையும் தூசிகளையும் கண்ணுக்குள் விழுந்து விடாமல் அது பிடித்து வைத்திருக்கும், உன்னுடைய ஒவ்வாமை நீங்க வேண்டும் என்றால் தினமும் உன் பெற்றோர் கண்களை சுத்தம்செய்து விடுவார்கள், அதற்கும் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்றவுடன் சரி, இனிமேல் கண்ணைக் கசக்க மாட்டேன் என்று வாக்குக் கொடுத்தான்.

இவர்களுக்கெல்லாம் இமை முடிகளால் நிறைய தொந்தரவு என்றால், இன்னும் ஒரு சாராருக்கு இமைகளில் சுத்தமாக முடியே இல்லை என்பது தான் குறை. தைராய்டு குறைபாடு, தொழுநோய், சிஃபிலிஸ், நீண்ட கால ஒவ்வாமை பிரச்சனைகள் இவற்றில் மேல் இமை மற்றும் கீழ் இமையில் முடிகள் முற்றிலுமாக உதிர்ந்து விடுவது நடக்கும். இமைகளில் முடி இல்லை என்பதை வைத்துக் கூட ஒரு சில நோயாளிகளுக்கு அதுவரை கண்டுபிடிக்கப்படாத உடலியல் நோய்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளித்திருக்கிறோம். தொழுநோயாளிகள் சிலர் கண்பரிசோதனைக்குச் சென்ற போது தான் தனக்கு தொழுநோய் இருப்பதை முதலில் கண்டுபிடித்தோம் என்று கூறியிருக்கின்றனர்.

இப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கும் இளைஞன் அவன். சராசரியை விடக் கூடுதலான உயரம், ஆறரை அடி இருப்பான். மிகவும் ஒல்லியான உடலமைப்பு. அவனுக்கு திடீரென்று ஒரு பிரச்சனை. தலைமுடி, கை கால்களில் உள்ள முடிகள் அனைத்தும் கறுப்பாக இருக்க, கண் இமைகளில் உள்ள முடிகள் மட்டும் வெள்ளை நிறமாக மாறிவிட்டன என்கிறான். அவனைப் பரிசோதனை செய்து பார்க்கையில் அவனது இரு கண்களிலும் லென்ஸ்கள் சற்று விலகியிருந்தன (subluxation of lens).

இதயம், இணைப்புத் தசை இவற்றிலும் சில குறைபாடுகள் காணப்பட்டன. இறுதியில் அவனுக்கு Marfan syndrome என்ற மரபணுநோய் இருந்ததைக் கண்டுபிடித்தோம். அதன் ஒரு அறிகுறியே இமைகள் முழுவதும் வெள்ளை நிறமாக முடி வளர்வது. இதனால் பார்வைக்கு எந்த பாதிப்பும் இல்லை, விலகி இருக்கும் லென்ஸ்களாலும் இப்போதைக்குத் தொந்தரவு இல்லை. உள்ளுறுப்புகளின் பிரச்சனைகளும் மிதமான அளவிலேயே இருந்ததால் தொடர் கண்காணிப்பு மட்டுமே போதும். ஒரு விஷயம், உனக்குத் திருமணம் செய்கையில் உறவுக்குள் திருமணம் செய்ய வேண்டாம் என்ற அறிவுரையைக் கொடுத்தேன்.

சென்ற வாரத்தில் நாளிதழ் ஒன்றின் சிறுவர் பக்கத்தில் கண்இமைக்கும் கண் புருவத்துக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டிருந்தாள் தமிழில் அரிச்சுவடி கற்று வரும் ஒரு பள்ளிச்சிறுமி. கண் புருவம் என்பது நேற்று என் குறிப்பிட்ட பகுதியில் வளரும் நொடிகளின் தொகுப்பே. இது கண்ணுக்குச் சற்று மேலே அமைந்திருப்பது, அதற்கும் கண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை ஆனால் இமைகளை பாதிக்கும் சில பிரச்சனைகள் கண் புருவத்திலும் ஏற்படலாம். கண் இமையில் முடி உதிரக் காரணமான பொடுகு, தொழுநோய், தைராய்டு போன்ற பிரச்சனைகள் புருவத்தில் வளரும் முடிகளையும் தாக்கக்கூடும். சில வகையான புரதச்சத்துக் குறைபாடுகள், வைட்டமின்B12, E, துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக் குறைபாடுகள் இவற்றிலும் புருவத்தில் முடி வளர்வது குறையலாம்.

அதீத மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் இவையும் இமைகள் மற்றும் புருவங்களில் முடி வளர்வதைத் தீர்மானிக்கும் காரணிகள்.புருவங்களில் முடிகள் இல்லாமல் பேனாவால் வரைந்து வைத்திருக்கும் நபரைப் பார்த்தால் கேலி செய்பவர்கள் பலர் உண்டு. அதன் பின்னணியில் இத்தனை காரணங்கள் இருப்பது தெரிந்தால் அவர்களின் பார்வை மாறலாம், அறியாத நண்பர்களிடம் விவரம் கூறி முறையான சிகிச்சைக்கு வழிநடத்தவும் வாய்ப்பிருக்கிறது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்!! (மருத்துவம்)
Next post உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி!! (அவ்வப்போது கிளாமர்)