துவையலுக்கு பருப்பு வறுக்க போகிறீர்களா? கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 25 Second

*பருப்பு வேகவைக்கும் போது தீய்ந்து போனால் அதை வேறு பாத்திரத்தில் எடுத்து போட்டு அதனுடன் இரு வெற்றிலையை போட்டு ஒரு கொதி விட்டு இறக்கினால் தீய்ந்த வாசனை போய்விடும்.

*துவையலுக்கு பருப்பு வறுக்க போகிறீர்களா? அதற்கு முன் துளி எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்தபின் பருப்பைச் சேர்த்து வறுத்தால் உங்கள் துவையல் ருசியும் மணமும் பெறும்.

*புழுங்கலரிசியுடன் இரண்டு பங்கு பச்சரிசி சேர்த்து மாவரைத்து புட்டு செய்தால் மிருதுவான புட்டு கிடைக்கும்.

*எலுமிச்சம் பழம் தோல் காய்ந்து கடினமாக இருந்தால் வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்து சாறு பிழியுங்கள். சுலபமாகவும், அதிகமாகவும் சாறு கிடைக்கும்.

– விசாலாட்சி கண்ணன், ஓசூர்.

உப்புமா சுவையாகச் செய்ய சில யோசனைகள்…

* நீர் கொதிக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் நெய் கலந்தால் உப்புமாவின் சுவையும், மணமும் கூடும்.

* உப்புமா செய்து இறக்கும் முன்பு அதில் மோர், எலுமிச்சை சாறு அல்லது ஆம்சூர் (மாங்காய்) பொடி சேர்த்து விட்டால், சுவை அபாரமாக இருக்கும்.

*உப்புமாவை இரண்டு பிரெட் துண்டுகளுக்கு இடையில் வைத்து டோஸ்ட் செய்தால் சுவையான உப்புமா சாண்ட்விச் ஆகிவிடும்.

* ரவா உப்புமா போலவே, கோதுமை ரவை, அரிசி குருணை, ஓட்ஸ், அவல் அல்லது பிரட்டில் உப்புமா செய்யலாம்.

– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.

* கெட்டியாக இருக்கும் வெல்லத்தை கேரட் துருவியில் உள்ள பெரிய துளைகளில் துருவினால் பூப்பூவாக உதிர்ந்து விடும்.

* பிரவுன் பிரட்டை நீளமாக வெட்டி, நெய்யில் பொரித்து, உடனே பொடித்த சர்க்கரையில் புரட்டினால் குழந்தைகள் விரும்பி உண்ணும் திடீர் ஸ்வீட் தயார்.

* கூழ் வற்றலை வேர்க்கடலை வறுப்பது போல வெறும் சட்டியை காய வைத்து அதில் போட்டு வறுக்கலாம். எண்ணெய் சேர்க்காதவர்கள், இந்த முறையில் வற்றல் வறுத்து சாப்பிடலாம்.

* குழம்பு, பொரியல், கூட்டு எதுவானாலும் உப்பு அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். கொஞ்சம் தேங்காய்த் துருவலுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சேர்த்துவிட்டால் அதிகப்படியான உப்பு சரியாகி விடும்.

– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* ஆம வடைக்கு அரைக்கும் போது மாவில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வடை தட்டினால் எண்ணை குடிக்காது. ரவை சேர்த்து ஆம வடையை தட்டினால் நல்ல மொறுமொறுவென இருக்கும்.

* வேப்பம் பூ ரசம் வைக்கும் போது புளி, உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்த பிறகு இறக்கும் போது வேப்பம்பூ, கடுகு, மிளகாயை எண்ணெயில் வறுத்துப் போட்டு மூடி வைக்கவும். ரசம் கசக்காமல் இருக்கும்.

* வாழைப்பூ அல்லது வாழை தண்டு நறுக்கினால் அரிவாள்மணை கறுப்பாகும். இதனை போக்க சிறிது புளியை வைத்து தேய்த்தால் எளிதாக கறுப்பு நீங்கும்.

* ஜவ்வரிசி வடாம் செய்யும் போது கார்ன் பிளேக்ஸை (1 கிலோ ஜவ்வரிசிக்கு ¼ கிலோ வீதம்) கொட்டி கலந்து பிழிந்து காய்ந்ததும் பொரிக்கலாம். நன்றாக இருக்கும்.

– ச.லெட்சுமி, தென்காசி.

* டோஃபுவை உபயோகிக்கும் முன் அதை லேசாக எண்ணெயில் பொரித்துப் போட்டு செய்தால் மணமும், சுவையும் அதிகரிக்கும்.

* அரிசி உப்புமாவிற்கு அரிசியை காயவைத்து, பொடிப்பதற்கு முன் சற்று துவரம் பருப்புடன் வறுத்து பொடிக்க, வாசனையாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும்.

* சேப்பங்கிழங்கை ரோஸ்ட் செய்ய, கிழங்கு வெந்ததும் மசாலத்தூள், உப்பு, பெருங்காயம், சீரகத்தூள், இதனுடன் ரவா மாவு (அ) பொட்டுக்கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன் தூவி பிசிறிய பின் வறுக்க விரைவில் ரோஸ்ட் ஆவதுடன் கிழங்கில் மசாலா ஒட்டி எண்ணெயில் பிரியாமல் இருக்கும்.

– மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

ராகி சேமியா வடை

தேவையானவை: ராகி சேமியா – 200 கிராம், உருளைக்கிழங்கு – 200 கிராம், கடலைமாவு – 25 கிராம், தேங்காய் துருவல் அரை கப், பச்சை மிளகாய் – 6, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, புதினா – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 200 கிராம்.

செய்முறை: கொதிக்கும் தண்ணீரில் ஒரு பங்கு சேமியாவுக்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு போட்டு ேவகவைத்து அடுப்பிலிருந்து இறக்கி, தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த தண்ணீரை வேகவைத்த சேமியாவில் ஊற்றி, மறுபடியும் தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பிசைந்து வைக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி தழை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசைந்து, பின்பு மஞ்சள் தூள், தேங்காய் துருவல், கடலை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவு கலவையை எடுத்து வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். உடலுக்கு சத்தானது, ருசியானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்!! (அவ்வப்போது கிளாமர்)