அழகு தரும் வளையல் அலங்காரம்! (மகளிர் பக்கம்)
பெண்களுக்கு அழகுக்கு அழகூட்டுவது அவர்கள் அணியும் வளையல்களே… அவைகளை அந்தந்த விழாக்களுக்கு ஏற்ப அணிந்து சென்றால் அதன் அழகே தனிதான்.
*குட்டையான உடல் தோற்றத்தைப் பெற்ற பெண்கள் தங்க வளையல்களாக இருந்தால் நல்ல பட்டையான அமைப்புடன் உள்ள வளையல்களை அணிய வேண்டும். மெல்லிய வளையல்களாக இருந்தால் ஒவ்வொரு கையிலும் நான்கு வளையல்கள் வீதம் அணிந்தால் அழகாக இருக்கும். சற்று உயரமான பெண்கள் பட்டையான வளையல்களையோ, அதிகப்படியான மெல்லிய வளையல்களையோ அணிவது பொருத்தமாக இருக்காது.
*கண்ணாடி, பிளாஸ்டிக் வளையல்கள் கவர்ச்சிகரமான முறையில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தி தங்கள் அழகை மேலும் கவர்ச்சி ஆக்கிக் கொள்ளலாம்.
*திருமணம் போன்ற குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளும் போது தங்கத்தினால் ஆன கல் இழைக்கப்பட்ட வளையல்களை அணிந்தால் கௌரவமான தோற்றத்தையும், கவர்ச்சியையும் தரும். தங்க வளையல்கள் அணிய இயலாதவர்கள் கல்லிழைத்தது போன்ற தோற்றமுடைய பிளாஸ்டிக், கண்ணாடி வளையல்களை அணிந்து கொள்ளலாம். அவையும் எடுப்பான தோற்றத்தைத் தரும்.
*ஆலயங்களுக்கு செல்லும் போது எளிமையான தோற்றமுடைய மெல்லிய தங்க வளையல்களை அணியலாம். பிளாஸ்டிக், கண்ணாடி வளையல்களாக இருந்தால் ஒரே வண்ணத்தில் அமைந்ததாக இருப்பின் அழகாக இருக்கும்.
*உடுத்திக் கொள்ளும் புடவையின் வண்ணத்துக்குப் பொருத்தமான நிறத்தில் வளையல்கள் அணிந்தால் கவர்ச்சியாக இருக்கும். கண்ணாடி வளையல்களை அதிகமாக அணியும் போது, அவைகள் எழுப்பும் கல கலவென்ற ஓசையே ஒரு தனி அழகு மட்டுமல்லாது, மங்களகரமாகவும் இருக்கும். கண்ணாடி வளையல்களை கை நிறைய அணிந்து கொள்வது பாரம்பரியமானதுடன், மிகுந்த கவர்ச்சியையும் தரும்.பாரம்பரியமான வளையல்களை அணிவோம். எழிலுடன் திகழ்வோம்.