கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 18 Second

என் வயது 24. எனக்குப் புகைப்பழக்கம் இருக்கிறது. அதை நிறுத்த நினைக்கிறேன். சில நண்பர்கள் இ-சிகரெட்டைப் பரிந்துரைக்கிறார்கள். இ-சிகரெட் என்றால் என்ன? அதற்கும் சாதாரண சிகரெட்டுக்கும் என்ன வித்தியாசம்? அதை எடுத்துக்கொள்வது சரியா? புகைப்பழக்கத்தை நிறுத்த வேறு ஏதேனும் வழிகள் உள்ளனவா?”
– வே.ஜீவானந்தன், நாமக்கல்.

இ-சிகரெட் என்பது எலெக்ட்ரானிக் சிகரெட். பீடி, சிகரெட் போன்றவற்றில் இருக்கும் ஹைட்ரோ கார்பன்ஸ், நைட்ரஸ் அமைன் போன்ற அபாயகரமான வேதிப் பொருட்களில் இருந்து விடுபடுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட எலெக்ட்ரானிக் சாதனம் இது. சிகரெட் தரும் போதையை அதன் அபாயகரமான விளைவுகள் இன்றி கொடுக்கிறது என்பதால், புகையின் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக இந்தப் பழக்கத்துக்கு மாறுகின்றனர் சிலர். ஆனால், இதிலும் வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இ-சிகரெட் உபயோகித்தாலும் நிச்சயம் உடல் நலம் பாதிக்கப்படும்.

சாதாரண பீடி, சிகரெட் அளவுக்கு இல்லாவிடினும் இதில் நிக்கோடின் உள்பட எண்ணற்ற வேதிப்பொருட்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன என்பதால், இவையும் தீங்கானவையே. இ-சிகரெட் உபயோகிப்பதற்குப் பதிலாக நிக்கோடின் மாத்திரை பயன்படுத்தலாம். ஆனால், அதை நீங்களாக எடுத்துக்கொள்ளாமல் உரிய மருத்துவரை அணுகி, அவரின் பரிந்துரையின்படி எடுத்துக்கொள்வது நல்லது.

சிகிச்சை தேவைப்படுபவரின் வயது, உடல்நிலை, அவர் சிகரெட்டைப் பயன்படுத்தும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு எத்தனை மாத்திரைகள் தேவை என்று தீர்மானிப்பார். மேலும், அவருக்குத் தேவையான கவுன்சலிங்கும் அளிக்கப்படும். எனவே, முறைப்படி சிகிச்சை எடுத்துக்கொண்டு பழக்கத்தில் இருந்து விடுபடுவதே நல்லது. நீங்களாக எதையும் முயற்சி செய்ய
வேண்டாம்.

35 வயதாகும் எனக்கு சமீபமாக உடல்வலி இருந்துவருகிறது. குறிப்பாக, முதுகுப் பகுதியில் அடிக்கடி வலி இருக்கிறது. தினமும் என் மகனை, உடலை மிதித்துவிடச் சொல்கிறேன். அப்படி செய்தால், நன்றாக இருப்பதாக உணர்கிறேன். இப்படி, அடிக்கடி உடலை மிதித்துவிடலாமா? இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?
– ரா.சரவணன், கோவை.

குழந்தைகளை மிதிக்கச் சொல்வது ஒருவிதத்தில் மசாஜ் செய்வதுபோலத்தான். எப்போதாவது ஒரு நாள்தான் வலி இருக்கிறது என்றால், இந்த முறையைப் பயன்படுத்தலாம். தவறு இல்லை. ஆனால், நாள்பட்ட வலியாய் இருந்தாலோ அதிக வலியாய் இருந்தாலோ மிதிக்கவிடச் சொல்லிக்கொண்டே இருப்பது நல்லது அல்ல. அது உடலில் ஏற்பட்டிருக்கும் ஓர் உபாதையை அலட்சியம் செய்வதாகவே இருக்கும். குழந்தைகளுக்கு உடலைக் குறித்து அதிகம் தெரியாது என்பதால், அவர்களிடம் மிதித்துவிடச் சொல்வது சரியானது அல்ல. ஏனெனில், தவறான இடத்தில் மிதிக்கும்போது அந்த இடம் பாதிப்படையலாம்.

மேலும், முதுகுத்தண்டுவடத்தில் பிரச்னை இருக்கும்போது மிதித்துவிடச் செய்தால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோல, இணைப்புகளில் மிதிக்கும்போது பிசகிவிட்டாலும் பிரச்னையே. எனவே, ஓரிரு நாள்களுக்கு மேல் வலி இருந்தாலோ, அதிக வலி இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவதுதான் பாதுகாப்பானது. இதுபோன்ற எளிய வைத்தியங்கள் பலன் தராது.

என் குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. திடீரென வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிறான். டாக்டர் அவனுக்கு ஜியார்டியாசிஸ் (Giardiasis) பாதிப்பு என்கிறார். ஜியார்டியாசிஸ் என்றால் என்ன? இது ஏன் ஏற்படுகிறது? இதைத் தடுக்க முடியுமா?
-கே.எம்.ஆர்.கவிதா, மதுரை.

ஜியார்டியாசிஸ் எனப்படுவது குடலில் உருவாகும் நுண்ணிய ஒட்டுண்ணித் தொற்று. சிறுநீர், மலம் போன்றவை கலந்த சுத்தமற்ற கிணறு, ஏரி, குளம், ஆற்று நீரில் `ஜார்டியா’ எனும் நுண் கிருமி இருக்கும். இது, ஒரு செல் உயிரி வகையைச் சேர்ந்தது. சுகாதாரமற்ற நீரில் புழங்கும்போது, நமது உடலுக்குள் செல்லும் இந்த நுண்கிருமியால் ஏற்படும் பிரச்னையை ‘ஜியார்டியாசிஸ்’ என்கிறோம். இதனால், வயிற்று உப்புசம், வயிற்றுவலி, மலம் நுரைத்து வெளியேறுதல், வயிற்றுப்போக்கு, உணவில் இருந்து சத்துகளை முழுமையாகக் கிரகிக்க முடியாத நிலை போன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக, இந்தப் பிரச்னை மூன்று முதல் ஆறு வாரங்களில் தானாகவே சரியாகிவிடும்.

ஆனால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு நீடித்தால், நீரிழப்பு ஏற்பட்டு, உடல் சோர்வு, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால், இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், நீரை வடிகட்டி, காய்ச்சி அருந்த வேண்டும். சுகாதாரமற்ற இடங்களில் புழங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்து, ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது.

என் மகளுக்கு 10 வயது. கடந்த சில மாதங்களாக பேன் தொல்லையால் அவதிப்படுகிறார். வழக்கமான ஷாம்புக்கள் பயன்படுத்தியும் தீர்வு இல்லை. பேன் எதனால் உருவாகிறது? தீர்வு என்ன?
– எஸ்.தேன்மொழி, திருநின்றவூர்.

சுகாதாரமான முறையில் தலைமுடியைப் பராமரிக்காமல் விட்டால் பேன்கள் பெருகும். பொதுவாக, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதாகத் தொற்றுகிறது. பேன் தொல்லை உள்ளவருடன் நெருக்கமாக அமர்வது, அவரின் உடைகள், சீப்பை பயன்படுத்துவது போன்றவை மூலம் பரவுகிறது. பேன் தலையில் உள்ளதன் முக்கியமான அறிகுறி தலையைச் சொரிந்துகொண்டே இருப்பதுதான். பேன்கள் மூன்று நாட்கள் மட்டுமே உயிர் வாழும். ஏழு நாட்களில் முட்டைகள் பொரிக்கும். கூந்தலின் அடித்தண்டுப் பகுதிகளில் இவை ஒட்டிக்கொண்டும் ஊர்ந்துகொண்டும் இருக்கும்.

ஐவர்மெக்டின் (Ivermectin), பைரித்திரின் (Pyrethrin), பர்மெத்ரின் (Permethrin) உள்ள ஷாம்புக்களை சரும மருத்துவர் பரிந்துரையோடு பயன்படுத்தலாம். லின்டேன் (Lindane) கலந்த ஷாம்புக்களை குழந்தைகள் பயன்படுத்தக் கூடாது.பேன்களுக்கான ஷாம்பு பயன்படுத்தும்போது அதில் குறிப்பிட்டு உள்ள வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும். கண்ணிலும் மூக்கிலும்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சருமத்தில் எரிச்சல், நமைச்சல் போன்ற பக்கவிளைவுகள் இருந்தால் உடனடியாக ஷாம்பு பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மருத்துவரை நாட வேண்டும்.

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் கர்ப்பிணிகளும் பேன் ஷாம்புக்களைப் பயன்படுத்தக்கூடாது.பேன்களை நீக்கிய பிறகு, முட்டைகளையும் நீக்கினால்தான் முழுமையாகத் தடுக்க முடியும். தலையைச் சுத்தம் செய்தபின் தலையணை உறை, படுக்கை விரிப்புகளைத் துவைக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேன் உள்ளது என்றால், ஒரே நேரத்தில் அனைவரும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவராக எடுத்துக்கொண்டால், பேன் உள்ளவர்களிடம் இருந்து, மற்றவருக்குப் பரவும் நிலை ஏற்படலாம்.

எனக்கு வயது 23. மாதவிடாய் சமயத்தின்போதும் முடிந்த பின்னும் அடி வயிற்றில் வலி ஏற்படுகிறது. அது எதனால்? வலியைப் போக்க என்ன செய்யலாம்?”
ஆர்.முத்துக்கனி, சென்னை.

மாதவிடாயின்போது சிலருக்கு அதிக ரத்தப்போக்கின் காரணமாக அடிவயிற்றில் வலி ஏற்படும். கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் இதுபோன்று வலி ஏற்படும். மேலும், வயிற்றில் உள்ள புழுக்கள், உண்ட உணவு நீண்ட நேரம் வயிற்றில் இருத்தல், வாய்வுத்தொல்லை, உடல் உஷ்ணம் போன்ற காரணங்களாலும், மாதவிலக்குச் சுழற்சி முடிந்த பின்னும் வலி தொடரும். இதனால், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய அவ்வப்போது தண்ணீரைத் தொடர்ந்து குடிக்கலாம்.

மாதவிடாயின்போது சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்பு உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். திரவமாக எடுத்துக்கொள்வது நல்லது. வயிற்றில் ஹாட் அல்லது கூல் பேக் வைத்துக்கொள்ளலாம். இது வலியைச் சற்று குறைக்கும். வலி தொடர்ந்து இருப்பின், மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். மருத்துவர் பரிந்துரையின்படி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

என் மகனுக்கு 14 வயதாகிறது. கடந்த ஆறு மாதங்களாக அடிக்கடி பசி எடுக்கிறது என்கிறான். சாப்பிடும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் எதையாவது கொறித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பழக்கத்தில் இருந்து அவனை எவ்வாறு மீட்டெடுப்பது?
-பி.எஸ்.செளந்தர்யா, ஈரோடு.

பொதுவாக குழந்தைகள் டீன் ஏஜ் எனப்படும் பதின்பருவத்தில் காலடி எடுத்துவைக்கும்போது, அவர்களது உடலில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் நடைபெறுகின்றன. உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப கலோரிகள் தேவை அதிகரிக்கும். இதன் விளைவாகப் பசி உணர்வு அதிகமாகத் தூண்டப்படும். இந்த வயதில், அதிகமான பசி எடுப்பது இயல்பான விஷயம்தான். ஆனால், சாப்பிடும் அளவுக்கு ஏற்ப ஓடியாடி விளையாடி கலோரிகளை எரிக்க வேண்டியதும் அவசியம்.

கொழுப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதைக் கண்டிப்பாக குழந்தைகளுக்கு வாங்கித் தரக் கூடாது. உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

ஒருவேளை, அவர் அதீத உடற்பருமன் கொண்டவராக இருந்தால், குழந்தைகளுக்கான நாளமில்லா சுரப்பி நிபுணரிடம் காட்ட வேண்டும். பரிசோதனைக்குப் பின்னர், தேவைப்பட்டால் நொறுக்குத் தீனிகள் சாப்பிடத் தூண்டும் உணர்வைக் கட்டுப்படுத்த மருந்துகளை மருத்துவர் வழங்குவார். பசி எடுக்கும்போது, சிறுதானியங்கள், நட்ஸ், பயறு வகைகள் போன்றவற்றால் செய்யப்பட்ட ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை அளவாகச் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதும் சிறந்ததே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மலிவான மீன் என்றாலும் அதன் மதிப்பு அதிகம்! (மகளிர் பக்கம்)
Next post கீரைகள் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்!!! (மருத்துவம்)