கீரைகள் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்!!! (மருத்துவம்)
நாம் உண்ணும் உணவு வைட்டமின், தாது உப்புகள், புரதம், மாவுப் பொருட்கள், கொழுப்பு என எல்லா சத்துக்களும் கொண்டவையாக இருக்க வேண்டும். இதைத்தான் ‘சமச்சீர் உணவு’ என்று சொல்கிறோம். ஆனால் நாம் உண்ணும் பெரும்பாலான உணவில் புரதம், மாவுப் பொருள், கொழுப்புச்சத்து ஆகியவை மட்டுமே கிடைக்கின்றன. சமச்சீர் உணவிற்கு வைட்டமின், தாது உப்புகளும் அவசியம். இவை கீரையில் நிறைய இருக்கின்றன.
கீரைகள் பல வகை இருந்தாலும். இவைகளை பெரும்பாலானோர் உண்பதில்லை. பீட்ஸா, பர்கர், பேல்பூரி, பானிபூரி போன்ற ஃபாஸ்ட் ஃபுட்களையே விரும்புகிறார்கள்.
நாம் இந்த உணவுகளை தவிர்த்து, கீரைகளையும் சாப்பிட பழக வேண்டும். கீரைகளில் வைட்டமின், சுண்ணாம்பு, இரும்பு, தாது உப்புகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. என்ன கீரைகளில் என்ன சத்துக்கள் நமக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்
* கண் பார்வைக்கு வைட்டமின் ஏ அவசியம். அகத்திக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை, கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இக்கீரைகளை சமைக்கும்போது வைட்டமின் ஏ அதிகமாக பாதிக்கப்படுவதில்லை என்றாலும் இதனை முழுமையாக சமைக்காமல் பாதி அளவு சமைத்து சாப்பிடுவது நல்லது.
* வைட்டமின் பி என்பது பல வைட்டமின்கள் சேர்ந்த கூட்டுப் பொருள். இது குறைந்தால் பசி ஏற்படாது. நரம்புகள் தளர்வடையும். உடம்பில் வலிமை குறையும். ரத்த சோகை மற்றும் பெரி பெரி என்ற நோய் பாதிக்கும். கறிவேப்பிலை, அகத்திக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணி இவைகளில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.
* நோய் எதிப்பு சக்திக்கு வைட்டமின் சி அவசியம். பல், எலும்பு வலிமையுடன் வளர்ச்சியடைய உதவுகிறது. அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, கொத்துமல்லிகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
* நம் இதயம் சுருங்கி விரிவதற்கு சுண்ணாம்புச் சத்து அவசியம். குறிப்பாக குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்து அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, நச்சுக்கொட்டைக் கீரை, மணத்தக்காளிக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரைகளில் உள்ளது.
* இரும்புச்சத்து உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. ரத்தசோகை ஏற்படாமல் இருக்க முளைக்கீரை, அரைக்கீரை, கொத்துமல்லித் தழை, மணத்தக்காளிக்கீரை, குப்பைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரைகளை சாப்பிடலாம்.
* எல்லா வைட்டமின் மற்றும் தாது உப்புகள் நிறைந்தது தவசிக்கீரை.
* கீரைகளில் வைட்டமின்கள், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் ஏதேனும் ஒரு கீரை வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.