ஒரு தெய்வம் தந்த பூவே!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 31 Second

ADHD என்னும் (Attention Deficient Hyperactive Disorder)

குழந்தைகளிடத்தில் உள்ள ஆட்டிசக்குறைபாட்டை எப்படி கண்டறிகிறோமோ அதேபோல இதையும் ஆரம்ப நிலையில் கண்டறிவதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். Attention Deficient Hyperactive Disorder என்பது அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு அல்லது கவனக்குறைவு மிகையியக்கம் குறைபாடு எனலாம். அதாவது கவனக்குறைவு மற்றும் அளவுக்கு மீறிய இயக்கம் என இரண்டு நிலையைக் கொண்ட நிலை. இது சிறு வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு மண்டலம் சார்ந்த ஓர் குறைபாடாகும்.

குழந்தையின் நான்கு வயது தொடக்கத்திலிருந்து இதை கண்டுபிடிக்கலாம். ‘என் குழந்தை சோர்வே இல்லாமல் பேட்டரி போட்ட பொம்மை போல ஓடிக் கொண்டே இருக்கிறான். அல்லது ஒரு வேலையை முழுவதுமாக செய்யாமல் எல்லா வேலையையுமே பாதி பாதியாக செய்கிறான்‘ என பெரும்பாலான தாய்மார்கள் எங்களிடம் சொல்லிக் கொண்டு வருவார்கள். கோவில், பார்ட்டி, உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் வீட்டிற்கு கூட்டிச் செல்லும் போது அங்கேயும் இவர்கள் இப்படித்தான் ஒரு இடத்தில் இல்லாமல் ஓடிக் கொண்டே இருப்பார்கள். பெற்றோர்கள் இதை ‘விஷமம்‘ என்றும் என் குழந்தை இப்படி இருப்பது பழகிவிட்டது என்று கூறுவார்கள். பழக்கமான இடத்தில் என்றால் பரவாயில்லை ஆனால், தெரியாத இடத்திலும் இதே நிலை என்றால் சற்று பிரச்னைதான்.

அடுத்து, குழந்தை பள்ளிக்குச் செல்லும் போது ஆசிரியர், ‘உங்கள் மகன் ஒரு இடத்தில் உட்காராமல் ஓடிக் கொண்டும், மற்ற குழந்தைகளையும் கவனிக்க விடாமல் இடையூறு செய்கிறான்‘ என்று புகார் சொல்ல ஆரம்பிப்பார்கள். ‘குழு விளையாட்டுகளின் போதும் கவனம் செலுத்தாமல் பாதியிலேயே விட்டுச் சென்று விடுகிறார்கள். உரையாடல்களின் போதும் கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கு ஒதுக்கிய இடத்தில் உட்காருவதில்லை‘ போன்ற புகார்கள் தொடரும்.

இப்படி உள்ள குழந்தைகளுக்கு Attention Deficient Hyperactive Disorder இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.இதுவொரு நோய் அல்ல குறைபாடு மட்டுமே என்பதை முதலில் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும். அடுத்தது, இதனை முழுவதும் தகுந்த சிகிச்சைகள் மூலம் சரி செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஆண், பெண் இரு பாலினக் குழந்தைகளுக்கும் வரக்கூடும் என்றாலும், ஆண் குழந்தைகளுக்கே அதிகம் வரக்கூடியது. அதாவது, 10 ஆண் குழந்தைகளுக்கு 1 பெண் குழந்தை வீதம் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

இக்குறைபாடு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் அதிகம் இருக்கிறது என்றாலும் வளரும் நாடுகளில் தான் மிக அதிகம். இதன் அறிகுறிகளை 3 – 4 வயதில் பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும், மற்றவர்களும் எளிதில் வெளிப்படையாக கண்டறியலாம் ஒரு பள்ளியில், ஒரு வகுப்பிற்கு ஒரு குழந்தையேனும் ஏடிஎச்டி குறைபாட்டால் பாதிக்கப்படுகிறது என்பது தற்போதைய நிலை.

பெரும்பாலும் குழந்தைகளுக்கான ஏடிஎச்டி 1 வயது முதல் 7 வயது வரை எந்த வயதிலும் வரக்கூடும். உலக அளவில் 30 குழந்தைகளுக்கு 1 குழந்தை ஏடிஎச்டி குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக சொல்கிறது அண்மைய ஆய்வு முடிவுகள். இது கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் என்றாலும் நகர்ப்புற குழந்தைகளின் எண்ணிக்கைதான் அதிகம் என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

ஏடிஎச்டி-யின் வகைகள்..?

1. கவனம் மட்டும் இல்லாமல் இருப்பது (attention deficient disorder)
2. மிகையியக்க செயல்பாடு (hyper activity disorder)
3. இவை இரண்டின் கலவை (attention deficient hyperactive disorder).

பெரும்பாலான குழந்தைகளுக்கு இவை இரண்டும் இணைந்தே வரக்கூடும்.

எப்படி தெரிந்து கொள்வது?

* வீட்டில் இருக்கும்போது, ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்கு காரணமின்றி சுற்றித் திரிவார்கள்.

* ஒரு விளையாட்டுப் பொருளில் அல்லது ஒரு விளையாட்டில் அதிகபட்சம் 2 – 3 நிமிடங்கள் கூட கவனம், நேரம் செலுத்த மாட்டார்கள்.

* தூக்கம் சிறிது நேரம்தான் இருக்கும். பெரும்பாலும் தாமதமாக தூங்கி சீக்கிரம் எழுந்துவிடுவார்கள்.

* எந்நேரமும் சுறுசுறுப்புடன் இயங்குவார்கள். ஓரிடத்தில் அதிக நேரம் அமர்ந்திருக்க மாட்டார்கள். உதாரணமாக, உணவு உண்ணும் போது, வீட்டு பாடம் படிக்கும் போது, பெயின்டிங் செய்யும் போது அவர்கள் அதிக ஆற்றலோடு இருப்பதால், குளிக்க வைப்பது, சரியான நேரத்தில் பள்ளிக்கு கிளப்புவது என தினசரி வேலைகளை செய்வது கூட சிரமமாக இருக்கும்.

* ஏதேனும் ஒரு வேலை கொடுத்து செய்யச் சொன்னால், அதை முடிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, ஓர் அறையில் இருக்கும் பொருளை மற்றொரு அறையில் இருக்கும் நபரிடம் கொடுக்கச் சொன்னால், அதை புரிந்து அவர்கள் செய்வார்கள். எனினும் அதற்குள் எக்கச்சக்கமான கவனச்சிதறல்கள் இருக்கும். ஆகையால் 1 நிமிடத்தில் செய்ய வேண்டிய வேலைக்குப் பல நிமிடங்களை வீணடிப்பார்கள்.

* பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் என்றால், விளையாட்டுப் பள்ளி, மான்டிஸரி பள்ளி என விளையாட்டு முறை கல்வியானாலும் கூட இவர்கள் கவனமும், உட்கார்ந்து இருக்கும் நேரமும் குறைவாகவே இருக்கும்.

* கதைநேரம், சிற்றுண்டி நேரம், கலரிங் செய்வது போன்ற நேரங்களில் தன்னுடைய இருக்கையில் உட்காராமல் அடிக்கடி எழுந்து ஓடுவது, பக்கத்தில் இருக்கும் குழந்தைகளை அவர்கள் வேலையை செய்ய விடாமல் கவனம் சிதறச் செய்வது.

* வரிசையில் நிற்கும்போது ஓரிடத்தில் நில்லாமல் சுற்றித் திரிவது.

* யாரிடமும் பேசாமல், உடன் சேர்ந்து விளையாடாமல், பாடம் நடத்தும்போது கவனிக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

* பொது இடங்களைப் பொறுத்தவரை, பூங்கா, விளையாட்டு திடல் போன்ற இடங்களில் முழுமையாக ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த மாட்டார்கள்.

* பள்ளி வளாகம், தெருக்கள் போன்று காலி இடங்களைப் பார்த்தால் அங்கு ஓடிக்கொண்டே இருப்பார்கள்.

* சூப்பர் மார்க்கெட், மால் போன்ற இடங்களுக்குக் கூட்டி சென்றால் பெற்றோர்களுடன் இருக்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பது.

* சாலையில் வண்டிகள், ஆட்கள் வருவது தெரியாமல் சுற்றித் திரிவது.

* உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு சென்றால், அவர்களுடன் பேசாமல், அங்கு இருக்கும் பொருட்களை ஆராய்வது, கீழே தள்ளி விடுவது, அங்கு இருக்கும் பொருட்களை விளையாட வேண்டும் என்று அடம் பிடிப்பது, பொருட்களை உடைப்பது.

* தனக்கான நேரம் வரும் வரை காத்திருக்காமல் இருப்பது. பேசும்போது மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல் தான் சொல்ல கேட்க விரும்புவதை மட்டுமே செய்வது.

* நடந்து செல்லாமல் ஓடுவது, குதித்து குதித்து ஓடுவது.

* இடைவிடாது சம்பந்தமில்லாமல் எதையாவது பேசிக்கொண்டே இருப்பது.

* இப்படி இல்லாமல், குழந்தைகள் நம் கண்களை, முகத்தைப் பார்த்து பேச வேண்டும். அவர்கள் குறைந்தது 5 லிருந்து 7 நிமிடங்களாவது ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஓரிடத்தில் குறைந்தபட்சம் 7லிருந்து 20 நிமிடங்களாவது நிற்கவோ அமரவோ வேண்டும். விளையாடும்போதோ, பேசும்போதோ தனக்கான நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

ஏடிஎச்டி வருவதற்கான காரணங்கள்

இதற்கான சரியான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், மரபியல், சுற்றுச்சூழல், சமூக காரணிகள் பங்கு வகிக்கலாம் என்று கூறப்படுகிறது. கர்ப்ப காலத்தில் தாய் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்றவற்றாலும், பிரசவ காலத்திற்கு முன்கூட்டியே பிறக்கும் குழந்தை, எடை குறைவாக பிறக்கும் குழந்தை போன்ற காரணங்களாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இவற்றோடு அதிக நேரம் குழந்தைகள் டிவி, தொலைபேசியில் செலவிடுவது, பெற்றோர், தாத்தா, பாட்டி போன்ற குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடாமல் இருப்பது போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏடிஎச்டி தன்னிச்சையாகவும், ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், வளர்ச்சி தாமதம் போன்ற குறைபாடுகளோடு இணையாக வரும் வாய்ப்பும் உள்ளது.
எப்படி கண்டுபிடிப்பது?

குழந்தையின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பது.ஒரு குழந்தையானது மற்றவர்களிடம் வளரும் போது, குழந்தை காப்பாளர், தாத்தா, பாட்டி ஆகியவர்களிடம் பெற்றோர் அக்குழந்தையின் உடல் வளர்ச்சி, நடவடிக்கைகள், மூளை வளர்ச்சி போன்றவற்றை கேட்டு தெரிந்து கொள்வது அவசியம்.

ஏடிஎச்டியை பொறுத்தவரை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்பதால் அதை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிக முக்கியம். ஏனெனில், குழந்தை இந்தப் பருவத்தில்தான் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது. இந்நிலையில் கவனக்குறைவு இருந்தால் அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும்.

சிகிச்சை முறைகள்

பிசியோதெரபி எனும் இயன்முறை மருத்துவத்தில் இக்குறைபாட்டினை சரி செய்யலாம். உடலில் எக்கச்சக்கமான ஆற்றல் இருப்பதால்தான் அவர்கள் மிகையாக செயல்படுகிறார்கள். பயனில்லாத வகையில் அதீத ஆற்றலோடு செயல்படுவதால்தான் கவனச்சிதறல் ஏற்படுகிறது. இந்த மிகை ஆற்றலைக் குறைக்க குழந்தைகளுக்கான விளையாட்டு முறை பிசியோதெரபி வழங்கப்படும் போது அவர்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். அப்படி ஈடுபடும் போது அவர்களுடைய ஆற்றல் பயனுள்ள வகையில் செயல்பட இச்சிகிச்சை உதவி புரியும்.

இது தவிர, நடத்தைமுறை சிகிச்சை (Behavioural Therapy), தொழில் சிகிச்சை (Occupational Therapy) போன்ற சிகிச்சை முறைகளும் இதற்கான பிரத்யேக மருந்துகளும் இருக்கின்றன. மருந்து கொடுக்கும் போது அவர்களின் மிகை செயல்பாடு குறைந்து கவனத்திறன் அதிகரிக்கும். மீண்டும் நான் வலியுறுத்தி சொல்வது, ஏடிஎச்டியை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் போது கண்டிப்பாக சரி செய்துவிடலாம். ஏனெனில், இந்த வயதில்தான் ஒரு குழந்தை எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறது. இந்நிலையில், கவனக்குறைவு இருந்தால், அக்குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அதற்கு அவசியம் தேவை பெற்றோரின் பொறுமையும், கவனமும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பளிச்… பளிச்… பற்கள்!! (மகளிர் பக்கம்)
Next post 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்!! (அவ்வப்போது கிளாமர்)