தயாமாஸ்டர் ஜோர்ஜ் மாஸ்டர் அரசுக்கு எதிராக செயற்பட்டனரா? என விசாரண

Read Time:1 Minute, 57 Second

முன்னாள் புலி உறுப்பினர்களான தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர் ஆகியோர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தபோது அரசுக்கு எதிராகச் செயற்பட்டார்களா என்பது குறித்து புலனாய்வு விசாரணை நடத்தி மன்றுக்கு எதிர்வரும் ஜனவரி 25ம்திகதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ரவீந்திர பிரேமரட்ண இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இருவர்மீதான வழக்கும் நேற்று மன்றில் எடுக்கப்பட்டபோது புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இவர்கள் இருந்தபோது அரசுக்கு எதிராகச் செயற்பட்டார்களா என்பது குறித்து தாங்கள் புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனரென பொலிஸார் தெரிவித்தனர். இப்புலனாய்வு விசாரணையை பூர்த்தி செய்வதற்கு காலஅவகாசம் தேவைப்பபடுகின்றது என்றும் அவர்கள் மேலதிக நீதிவானுக்கு தெரியப்படுத்தினர். இதையடுத்து, மேலதிக நீதிவான் இப்புலனாய்வு விசாரணையைப் பூர்த்தி செய்வதற்கு உரிய கால அவகாசம் வழங்கி வழக்கை எதிர்வரும் ஜனவரி 25ம் திகதிக்கு ஒத்திவைத்தார். அன்றையதினம் பொலிஸாரின் குறித்த புலனாய்வு அறிக்கையை மன்றுக்கு சமர்பிக்க வேண்டுமென்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “தயாமாஸ்டர் ஜோர்ஜ் மாஸ்டர் அரசுக்கு எதிராக செயற்பட்டனரா? என விசாரண

  1. கடைசியாக வன்னி வெள்ளை முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற யுத்தத்தின்போது புலிகளின் பக்கத்தே இருந்த பலர் புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது மாவீரர் குடும்பங்கள் என்ற ஒரு கணிப்பு இருந்தது. அதுமட்டுமல்ல இவர்கள் மாவீரர் குடும்பங்கள் என்றபடியால் அவர்கள் அந்த வன்னிப் பிரதேசத்தையும் புலிகளையும் விட்டு வெளியேற முடியாமல் இருப்பவர்கள் என்றும் இவர்களில் பலர் புலிகளுடன் முக்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்ற கணிப்பும் இருந்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.
    இது உண்மையல்ல என்பதும் சாதாரண மக்களையே பலிக்காளாக்கினர் என்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்த கிளிநொச்சிக்கு இராணுவம் வந்தபோதே அப்போதிருந்து மக்கள் புலிகளின் துப்பாக்கி சூட்டுக்களினிடையேயும் புலிகளின் கட்டுப்பாட்டை மீறியும் பலர் ஓடித்தப்பியுள்ளனர்.
    இறுதிக் காலத்தில் இருந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் புலிகள் தமது அழிவுக்காலத்தின் போது மக்களை வலுக்கட்டாயமாக, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு ஒருவர் என்ற தேசவிடுதலை கோசத்தில் இழுத்துப் போயிருந்த அந்த பிள்ளைகளின் தாய் தந்தையர் உறவுகளே. பலர் இந்த யுத்தத்தின் அந்திம காலத்தில் தாமும் இறந்துள்ளனர்.
    இவர்களில் பலர் தமது குழந்தைகளை என்றுமே போராட்டத்திற்கு அனுப்பியவர்கள் அல்லர். அல்லது புலிகளின் போர்களுக்கிடையே என்றும் எந்தவித நேரடி ஈடுபாடுகளும் இல்லாமல் இருந்தவர்கள். தமது குழந்தைகளை புலிகள் பறித்துப் போனபோது தமது குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என்ற துடிப்பே இந்த பெற்றோர்கள் தமது மற்றய குழந்தைகளையும் தம்மோடு வைத்திருந்து இறந்து போயுள்ளனர். அல்லது அவர்கள் இறந்து போக குழந்தைகள் அநாதைகளாகியுள்ளனர்.
    பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மீளப் பெறும் முயற்ச்சிகள் சரிவராது என அறிந்தபோது தாம் தப்பியுள்ளனர். சிலர் பாதிக் குடும்பத்தை அனுப்பிவிட்டு பாதி தமது குழந்தைகளை மீட்டு எடுத்துப்போக இருந்தனர். இன்னும் சில இளைஞர்கள் தமது சகோதரங்களை மீட்டு எடுத்துப்போக, இந்த களத்தில் தமது உடன் பிறந்த சகோரதங்களை இந்த நிலையில் விட்டுவிட்டுப்போக முடியாமல் தவித்தனர். இதன்போது தமது உயிர்களையும் இழந்தனர். இந்த உறவுகள் புலத்தில் உள்ள உறவுகள் போன்று ஒப்புக்கு மாரடிக்கவில்லை. வாடகைக்கு உணர்ச்சி வசப்படவில்லை. தங்கள் உயிரைப் பணயம் வைத்து தம் உறவுகளை அழைத்துச் செல்ல தவிப்புடன் நின்றன. அவர்கள் வன்னிமண் பூர்வீகமண் என்ற புலத்து தமிழர்களின் அர்த்தமற்ற கோசங்களுக்காக செல் மழை பொழிந்த யுத்தப் பிரதேசத்தில் நிற்கவில்லை. மரணத்தின் எண்ணிக்கையை வைத்து அரசை அம்பலப்படுத்தும் மூன்றாம்தர அரசியலுக்காக அந்த மக்கள் மரணிக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். அதற்கு புலத்தில் உள்ள புலி ஆதரவுத் தலைமைக்கு முழுமையான பொறுப்புண்டு.
    புலிகளில் பெரும்பான்மையானவர்கள் தமது கட்டுப்பாட்டை மீறி தப்பிப் போகும் மக்களை கொலை செய்துள்ளனர். வே பிரபாகரனின் மகன் சார்ஸ்ள்ஸ் அன்ரனியும் அவருடைய இன்னுமொரு தளபதியும் மிக மோசமான முறையில் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக வன்னி முகாமில் உள்ளவர்களுடன் உரையாடியதில் தெரியவருகின்றது. ‘எங்களை விட்டுவிட்டு நீங்கள் தப்பிச் செல்வதா’ என்ற உணர்வில் அவர்கள் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். கடைசி நேரத்திலும் தமது இயக்கத்திலிருந்து தப்பிப் போனவர்களையும் தமது கட்டுப்பாடுகளை முன்பு (சில காலங்களுக்கு முன்னர்) மீறியவர்கள் இந்த வன்மையான போர் காலத்தின்போதும் சுட்டு கொன்று தமது பழிவாங்கல்களையும் செய்துள்ளனர்.
    வன்னி மக்கள் இலங்கை இராணுவத்திடம் மனிதாபிமானத்தையும் மனிதநேயத்தையும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் இலங்கை இராணுவம் தம்மை அழிக்க முற்படுகின்ற ஒரு இராணுவமாகவே பார்த்தனர். ஆனால் தங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் தங்களைப் பணயம் வைத்து தங்கள் மரணத்தின் மீது அரசியலை நடத்த முற்பட்டபோது மக்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர்.
    புலிகளின் பல மாவீரர் குடும்பங்களும் புலிகளின் பல முக்கிய ஆதரவாளர்களும் ஏற்கனவே இந்த யுத்த பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட்டனர். பலர் படகுகள் மூலம் தப்பி ஓடிவிட்டனர். எஞ்சிய முக்கிய தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களில் சில முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் சிலர் சிறையில் உள்ளனர்.
    முகாம்களை விட்டு வெளியேறிய பலர் தமது உறவினர்கள் வீட்டிலும் அவர்கள் வீட்டு முற்றத்தில் புதிய ரென்டுகளும் பந்திகள் போட்டும் தங்கியுள்ளனர். இவர்களில் பலருக்கு வாடகை கொடுக்க பணம் கிடையாது. அடிப்படை உடுப்புக்கள வாங்க பணம் கிடையாது. வன்னிக்குள்ளே போனால் என்ன நடக்குமோ என்ற மனப்பயம் நிறைந்துள்ளனர்.
    தாம் தப்பி ஓடும்போது தம்மை துரோகிகள் என்று வெளிநாட்டிலிருந்து பட்டமளித்த ஜபிசி போன்ற ரேடியோக்கள் தொலைக்காட்சிகள் பற்றி அறியாதவர்கள் தலைவரைக் காப்பாற்ற போராட்டம் செய்தவர்கள் போருக்கு பண உதவி செய்தவர்கள் இன்று எங்கு போயினர் என்று அங்கலாய்த்துள்ளனர். புலிகள் அழிந்ததும் போராட்டம் முடிஞ்சுதாமோ?? என்று கேட்கின்றனர். ‘நாம் யார்? இந்தப் போராட்டம் யாருக்காக நடாத்தினார்களாம்? எங்கே இவர்கள்?’ என்ற ஏக்கம். இவர்கள் தங்களுக்காகவா மக்களுக்காகவா இவ்வளவு காலமும் இயங்கினார்கள் என்று ஏமாற்றமடைந்தவர்களாக உள்ளனர்.

    தமக்காக ஒருவேளை என்றாலும் உணவு கொண்டுவந்து சேர்த்த சிங்கள மக்கள் பெளத்த துறவிகள் முஸ்லீம்கள் பற்றி நன்றியுடன் பேசுகிறார்கள் ஆனால் வன்னி மக்களின் நலனில் எவ்வித அக்கறையும் இன்றி அந்த மக்களின் பெயரில் அரசியல் நடத்துபவர்களை அந்த மக்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வார்களா என்பது ஒன்றும் கடினமான கேள்வி அல்ல.
    – நண்பர் சோதிலிங்கம் சொன்னவை இவை

Leave a Reply

Previous post நெற்களஞ்சிய பகுதி விடத்தல்தீவு மக்களை மீள்குடியமர்த்தும் வகையில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு ஐந்து இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
Next post ஸ்ரேயாவா அது? – பகீர் படம் கிளப்பும் கேள்வி!