சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட இலங்கையர்கள் பயணித்த படகு விபத்து!
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட இலங்கையர்கள் பயணித்த படகு நடுக் கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த படகில் பயணித்த 15க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திரத்தின் கொக்கோஸ் தீவுகளுக்கு அருகாமையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு சொந்தமான எல்.என்.ஜீ எண்ணெய் கப்பல் மற்றும் தாய்வான் மீன்பிடி படகு ஆகியன படகில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர்கள் 14 மணித்தியாலங்களுக்கு மேலாக கடலில் தத்தலித்துக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. படகில் பயணித்த 19 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏனையர்களை தேடும் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களை கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படகில் 42பேர் பயணித்துள்ளதாகவும் பெண்களும், சிறுவர்களும் இந்தப் படகில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரொட், இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் சிரேஸ்ட ராஜதந்திரியான ஜோன் மெக்கார்த்தியை இலங்கைக்கு விரைவில் அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெ;ரிவித்துள்ளார். எவ்வாறெனினும், குறித்த படகில் பயணித்தவர்கள் இலங்கை சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களா என்பது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இதுவரையில் எவ்வித உறுதிப்படுத்தல்களையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating