நலன்புரி நிலைய மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான அரசின் கரிசனையில் சந்தேகம்
நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் திடீர் அக்கறையும் கரிசனையும் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களில் மிகுந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக்கொண்டு, இந்த வருடத்துக்குள் அகதிகள் மீள்குடியேற்றத்தைப் பூர்த்திசெய்யும் அதிரடி நடவடிக்கையில் தான் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச சமூகத்துக்கு காட்ட, இலங்கை அரசாங்கம் முயல்கின்றது என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் நம்புவதாகவும் கூறப்படுகிறது. நாளாந்தம் சுமார் 3000 பேர்வரை சமீபத்திய நாள்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வண்ணமுள்ளனர் என்று மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அறிவித்துள்ளமையைக் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மிகவும் கவனத்தில் கொண்டுள்ளதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்தும் வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
Average Rating