By 14 May 2010 0 Comments

உருத்திரகுமாருக்கு எதிராகச் சதிசெய்பவர்கள் யார்?? (பாகம் -2)

‘நாடு கடந்த தமிழீழ அரசின் திட்டங்களை முறியடிப்பதற்கு எங்களின் தூதர்களுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன’- இது அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்தவினால் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கூறப்பட்ட கருத்துக்கள். மகிந்தவின் அந்தக் கருத்துக்களில் தூதர்கள் என்று குறிப்பிடுவது நான் முன்னர் குறிப்பிட்ட நோர்வேக்குழுதான் போலும். சிங்களம் ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த நினைக்கின்றது. நாடு கடந்த தமிழீழ அரசைச் செயலிழக்கச் செய்வது மற்றும் புலத் தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பது போன்றவற்றை இந்த நோர்வேக்குழு மூலம் நிறைவேற்ற சிங்களம் திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்த நோர்வேக்குழு உடந்தையாகி நிற்கின்றது. அதுசரி இந்த நோர்வேக்குழுவின் தோற்றம் பற்றி அறிவதற்கு முதல் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பை திறம்பட நடாத்திவந்த குமரன் பத்மநாதன் என்று அழைக்கப்பட்ட கே.பி பற்றி இந்த இடத்தில் ஆராய்வது சிறந்தது என்று நான் நினைக்கின்றேன்.

1995ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் விடுதலைப் புலிகளின் பிரதான ஆயுத விநியோகிஸ்த நடவடிக்கைகளுக்குத் தலைவராகச் செயற்பட்டவர்தான் இந்த கே.பி. வெளிநாடுகளில் ஒழிந்து வாழ்ந்து வந்த இவர் பல்வேறு நாடுகளின் கடல்மார்க்கங்கள் ஊடாக எவரின் கண்களில் படாமலும் ஆயுதக் கப்பல்களை வெற்றிகரமாக வடக்கு மற்றும் கிழக்குக் கடல்களுக்குக் கொண்டு வந்து சேர்த்தவர். இதன் மூலம் புலிகளை ஆயுத ரீதியாக பலமடையச் செய்தார். அத்துடன் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுகளையும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளையும் 2002ஆம் ஆண்டுவரை சிறப்பாக வழிநடத்தி வந்தவர் என்ற பெருமையும் கே.பிக்கு உண்டு.
கே.பியின் சாதனைகளில் ஒன்றாக இன்றும் பலரால் பேசப்படுவது அன்ரன் பாலசிங்கம் அவர்களை வன்னியிலிருந்து வெளிநாட்டுக்கு அழைத்து வந்தமை.

1996ஆம் ஆண்டு காலப் பகுதியில் வன்னியிலிருந்த பாலசிங்கம் அவர்களுக்கு கடும் சுகவீனம் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். வேறுவழியின்றி அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அரசைத் தொடர்புகொண்ட புலிகள் அமைப்பினர், பாலசிங்கத்தை வெளிநாட்டுக்குக் கொண்டுசென்று சிகிச்சையளிக்க அனுமதியளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், சந்திரிகா அரசு புலிகள் மீது நிபந்தனைகளை விதித்தது. அதாவது பாலசிங்கத்தை வெளிநாட்டுக்கு அனுமதிப்பதாயின் அவர்கள் (புலிகள்), யாழ்ப்பாணத்தில் அரசு படைகளுக்கு எதிராக நடாத்தும் தாக்குதல்களை உடனடியாகக் கைவிடும்படி கேட்டுக்கொண்டது. அந்த நிபந்தனைக்கு புலிகள் இணங்க முன்வந்தாலும் பாலசிங்கம் முன்வரவில்லை.

இந்தப் பிரச்சினை உடனடியாக வெளிநாட்டிலிருந்த கே.பிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்குள்ளேயே சர்வதேசக் கடல் எல்லைகள் ஊடாக கப்பல் ஒன்றை அனுப்பி பாலசிங்கத்தை தாய்லாந்துக்கு அழைத்து வந்தார் குமரன் பத்மநாதன். இப்படியாகப் பல வழிகளில் புலிகளின் வெற்றிகளுக்கு மறைமுக காரணகர்த்தாவாக இருந்த கே.பிக்கு 2002ஆம் ஆண்டு பெரும் சோதனைக் காலமாக விளங்கியது.
அதாவது யுத்தநிறுத்தத்தின் பின்னர் புலிகள் இயக்கத்தில் கே.பியின் பங்களிப்பு இல்லாமல் செய்யப்பட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு புலிகளின் முன்னாள் வெளிநாட்டு நிர்வாகப் பொறுப்பாளர் பலர் காரணமாயிருந்தனர். பத்மநாதனிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. எனினும் நீண்ட விசாரணைகளின் பின்னர் தான் குற்றமற்றவர் என்று கே.பி புலிகளின் தலைமைக்கு நிரூபித்திருந்தார்.

இதனால் விரக்தி நிலைமைக்குத் தள்ளப்பட்ட குமரன் பத்மநாதன் 2003ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தானாகவே பணிகளிலிருந்து விலகிக்கொண்டார். அவரது விலகல்தான் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு தளமிட்டது. அதாவது அந்த விலகலின் பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டவர்தான் இன்று நோர்வேயைத் தளமாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசை செயலிழக்கச் செய்வதற்கு திட்டமிட்டு வருகின்றார்.
கே.பியின் விலகலின் பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டவர்தான் பேரின்பநாயகம் சிவபரன். இவர்தான் அந்த நோர்வேக்குழுவை தலைமையேற்று நடாத்தி வருகின்றார். சாதரண மனிதர்களின் உயரத்திலும் பார்க்க கொஞ்சம் உயரத்தில் கூடியவர் என்பதால் இயக்கத்தில் இணைந்த ஆரம்பகாலங்களில் சிவபரனை ‘நெடுவல்” என்று அழைத்தார்கள். பின்னர் அந்தப் பெயர் ‘நெடியவன்’ ஆக மாற்றம் பெற்றது. 18ஆவது வயதில் இயக்கத்தில் இணைந்த நெடியவனுக்கு தற்போது 34 வயதாகின்றது.

யுத்தநிறுத்த காலப்பகுதியில் தமது உறுப்பினர்கள் சிலரை வெளிநாடுகளுக்கு மேல்படிப்புக்காக அனுப்பிவைத்தது புலிகள் அமைப்பு. அவர்களில் ஒருவரான இந்த நெடியவன் ரஷ்யாவுக்கு கல்விகற்க அனுப்பப்பட்டார். ஆனால், கே.பியின் விலகல் அந்த நேரத்தில் நிகழ நெடியவனிடம் அந்தப் பொறுப்பை கையளிக்க புலிகளின் தலைமைப்பீடம் முடிவுசெய்தது. இதனால் மேல்படிப்பைத் தொடராமல் ஐரோப்பாவில் தஞ்சமடைந்தார் நெடியவன்.

கே.பியின் கீழ் இயங்கிய வெளிநாட்டுப் பிரிவுகள் அனைத்தையும் தம்வசம் கொண்டுவந்த நெடியவன் ஆயுத விநியோகத்தையும் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டார். எனினும் காலப்போக்கில் இவரது செயற்பாடுகளால் புலிகள் அமைப்பினர் அதிருப்தி அடைந்தனர்.

நெடியவனை புலிகள் அமைப்பிலிருந்து ஓரம்கட்ட முதலில் முடிவெடுத்தது யார் தெரியுமா? அவர் வேறு யாருமல்ல. தலைவர் பிரபாகரன்தான். ஏன் அவ்வாறு முடிவு எடுத்தார்? அந்த முடிவு வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டதா?
அதுபற்றி அடுத்த பத்தியில் பார்ப்போம்
ஆர்.தர்சானா…Post a Comment

Protected by WP Anti Spam