‘பணத்தை எண்ணுங்க; வலியை மறந்துடுங்க’
பணத்தை எண்ணி கொண்டே இருந்தால், என்ன வலி உடலில் இருந்தாலும் போயே போய்விடும்’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்காவின், மின்னசோட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சில மாணவர்களை வைத்து ஓர் ஆராய்ச்சி நடத்தினர். ஒரு சிலருக்கு பணக்கட்டுகள் மற்றும் சில்லறைகளை கொடுத்து, எண்ண சொல்லினர். ஒரு சிலருக்கு வெற்றுத்தாள்களை கொடுத்து எண்ண சொல்லினர். பணத்தை எண்ணும் போதும், வெற்றுத்தாள்களை எண்ணும் போதும் மாணவர்களிடம் ஏற்பட்ட மாறுபாடுகளை, வேகத்தை, ஆய்வு செய்தனர். எண்ணி முடித்த பின், ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்ட வெந்நீரில், கையை நனைக்கும்படி கேட்டு கொண்டனர்.
அப்போது அவர்கள் எவ்வளவு வலி மற்றும் எவ்வளவு நேரம் வெந்நீரில் கையை வைக்க முடிகிறது என்பதை குறித்து கொண்டனர். ஆய்வின் முடிவில், பணம் எண்ணியவர்களிடம் ஏற்கனவே இருந்த வலி குறைந்துள்ளதும், நீண்ட நேரம் கையை வெந்நீரில் வைக்க முடிகிறது என்பதும் தெரிய வந்தது.இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ‘பணம் எண்ணுவது, தன்னம்பிக்கையையும், திருப்தியையும் உருவாக்குகிறது. அவர்களின் வலிகள் குறைந்து விடுகின்றன. தன்னம்பிக்கை கொண்டிருத்தல் வலியை குறைக்க போதுமானது’ என, தெரிவித்தனர்.
இதுபோன்ற ஆய்வுகள், வலி நிவாரணி மாத்திரைகள் இல்லாமல், வலியை குறைக்கும் வழிகளை கண்டுபிடிக்க உதவுகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒருவர் அன்பு செலுத்தும் நபரின் போட்டோவை காண்பதன் மூலம், வலியை குறைக்கலாமென கண்டறிந்துள்ளனர். அதேபோல், சிகாகோவிலுள்ள லயோலா பல்கலை ஆராய்ச்சியாளர்கள், அறுவை சிகிச்சையால் அதீத வலியில் வேதனைப்படுபவர்கள், தங்கள் வீட்டு மிருகங்களை அன்புடன் தடவி கொடுப்பதன் மூலம், வலியிலிருந்து ஓரளவு விடுபடலாமென கண்டுபிடித்துள்ளனர்.
Average Rating