வட இந்து சமுத்திரத்தில் அடுத்து ஏற்படும் புயலுக்கு ‘பந்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வட இந்து சமுத்திரத்தில் அடுத்து ஏற்படும் புயலுக்கு ‘பந்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலக காலநிலை மையம் இதனைத் தீர்மானித்திருக்கின்றது. அடுத்தடுத்து வரும் புயலுக்கான பெயர்களை உலக நாடுகள் பரிந்துரைக்க, அதனை மேற்படி மையம் தீர்மானிப்பது நடைமுறையில் இடம்பெற்று வரும் செயற்பாடாகும். தற்போது, ஆந்திரா, சென்னை மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதிகளில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் ‘லைலா’ புயலுக்குப் பாகிஸ்தானே பெயர் சூட்டியது. வட இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள பங்களாதேஷ், இந்தியா, மாலைத்தீவு, மியன்மார், ஓமான், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் இதுவரை 64 பெயர்களைக் குறிப்பிட்டுள்ளன. இந்நாடுகளே காலத்துக்குக் காலம், அடுத்துவரும் புயலுக்கான பெயரை சிபார்சு செய்கின்றன. கடைசியாக வீசிய ஆறு புயல்களின் பெயர்கள் இவைதாம்: நிஷா(பங்களாதேஷ்), பிஜி (இந்தியா), அய்லா (மாலைதீவு), பைன் (மியன்மார்), வார்ட் (ஓமான்). தற்போதுள்ளது லைலா; இனி வரபோவது பந்து. 1970 களில் ஜெனீவாவிலுள்ள உலக காலநிலை மையம், பசுபிக் சமுத்திர நாடுகளிடம் புயல் பெயர் தொடர்பான பட்டியலைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2000ஆம் ஆண்டிலேயே இந்து சமுத்திர நாடுகளிடம் இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.
Average Rating