இலங்கை அரசு_புலிகள் பேச்சு தோல்வி: சமரசத்திலிருந்து விலகுவது குறித்து நார்வே பரிசீலனை

Read Time:4 Minute, 42 Second

norweflagnew.gifஆஸ்லோவில் நடப்பதாக இருந்த இலங்கை அமைதிப்பேச்சுவார்த்தையில் புலிகள் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து சமரச நடவடிக்கையிலிருந்து விலகுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று நார்வே அறிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தா ராஜபக்சே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதவி ஏற்றது முதல் இலங்கையில் பல வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

கடந்த 2002_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட போர்நிறுத்தம் இவர் பதவி ஏற்றதும் மீறப்பட்டது. இலங்கை ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்பட்டனர். எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் அபாயநிலை உருவானது. எப்படியாவது போர் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பிய சமரச நாடான நார்வே ஏற்கனவே நின்று போன பேச்சுவாத்தையை மீண்டும் உயிர்ப்பித்து இலங்கையில் அமைதி திரும்ப முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக நார்வே தூதர் எரிக் சோல்ஹிம் இலங்கை வந்து அரசுடனும், புலிகளுடனும் பேச்சு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக ஆஸ்லோவில் அநைதி பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்வதற்கு முன்பே தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த புலிகள் ஆஸ்லோவில் நடக்க இருந்த அமைதிப்பேச்சுக்கு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் இந்த பேச்சுவார்த்தை நடக்காமலே தோல்வி அடைந்தது. இது குறித்து நார்வே அரசு இரண்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிக்க கூடியதாக உள்ளன. இலங்கை அரசும், புலிகளும் ஒத்துழைக்காதவை இந்த அமைதிப்பேச்சு வார்த்தையயை தொடர்ந்து நடத்த முடியாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்பாடு மீறப்பட்டு இலங்கையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இது அந்நாட்டு மக்களால் சகித்துக்கொள்ள முடியாது. அது மட்டும் அல்ல சர்வதேச நாடுகளும் இலங்கை பிரச்சசினை குறித்து கவலை தெரிவித்துள்ளன. இலங்கையில் அமைதி திரும்புவதற்கும் மீண்டும் அமைதி பேச்சு புத்துயிர் பெறுவதற்கும் இலங்கை அரசும் புலிகளுமே பொறுப்பு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் உள்ள போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ள ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் இக்குழுவில் அங்கம் வகிப்பதை புலிகள் விரும்பவில்லை. இக்குழுவில் இடம் பெற்றுள்ள 5 நாடுகளில் 3 நாடுகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளாகும். இதனால்தான் புலிகள் ஆஸ்லோ பேச்சில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இலங்கை அமைதிப்பேச்சு நடவடிக்கையிலிருந்து விலகிக்கொள்ளலாமா என்பது குறித்து நார்வே பரிசீலனை செய்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தான்சானியா நாட்டில் துயரம் பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து 56 பேர் பலி
Next post பொதுமக்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.—ரிஎம்விபி தூயவன்.