தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? -யதீந்திரா (கட்டுரை)!!

Read Time:21 Minute, 51 Second

timthumbதமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை தொட்டணைக்க முடியாக் கேள்வியாக தொடர்கிறது?

முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழர் அரசியலுக்கான தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் வீழ்சியைத் தொடர்ந்து, அவரால் வனையப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை பொறுப்பேற்றது. அந்த வகையில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று ஜந்து வருடங்கள் ஆகின்றன.

இந்த ஜந்து வருடங்களாக அவ்வப்போது ஒரு கேள்வியும் தலைநீட்டியவாறே இருக்கின்றது. அதாவது, கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்து பலப்படுத்த வேண்டுமென்பதே அக்கேள்வி. ஆனால், இன்றுவரை ஒரு ஆக்கபூர்வமான பதிலை கண்டடைய கூட்டமைப்பின் தலைவர்களால் முடியவில்லை.

மாவை சேனாதிராஜா தமிழரசு கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கின்ற பின்னணியில் மீண்டும் அக்கேள்வி தமிழர் அரசியல் அரங்கில் தலைநீட்டியிருக்கிறது. அண்மையில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், தன்னால் முன்னாள் வன்முறையாளர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாதென்று கூறியதைத் தொடர்ந்தே கூட்டமைப்பு தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் மேலெழுந்திருக்கின்றன.

விக்னேஸ்வரனின் கருத்து கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவற்றின் கௌரவத்திற்கு நேரடியாகவே சவால் விடுக்கும் ஒரு கருத்தாகும்.

விக்னேஸ்வரனது அபிப்பிராயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் சார்பில் எந்தவொரு அபிப்பிராயமும் இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் வரை பதிவாகியிருக்கவில்லை.

பெரும்பாலான ஊடக தரப்பினர் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில், விக்னேஸ்வரன் ஒரு அரசியல்வாதியல்ல. அதானால்தான் அவர் இப்படியெல்லாம் பேசுகின்றார் என்றவாறான அபிப்பிராயமே காணப்படுகிறது. அவ்வாறாயின் எப்போதுதான் விக்னேஸ்வரன் அரசியலாவாதியாக மிளிர்வார்?

ஆனால், கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் விக்னேஸ்வரனை தனித்து பார்க்கவில்லை. தங்களை ஓரங்கட்டுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு சதுரங்க விளையாட்டின் ஒரு காயாகவே விக்னேஸ்வரனை கணிக்கின்றனர்.

வடக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் அமைச்சுப் பொறுப்புக்களை பகிர்வதில் தொடங்கிய கசப்புணர்வு இன்றும் அப்படியே தொடர்கிறது. வடக்கு மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனமானது முற்றிலும் விக்னேஸ்வரனது தீர்மானத்தின் கீழ் இடம்பெற்றதாகவே கூறப்படுகிறது. அன்று இதுபற்றி எழுப்பட்ட கேள்விகளின் போதும் அவ்வாறானதொரு பதிலே வழங்கப்பட்டிருந்தது.

இன்று விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் அபிப்பிராயத்திலிருந்து அவர் தமிழரசு கட்சி அல்லாத கட்சிகளைச் சார்ந்தவர்கள் எவரும் தன்னுடைய அமைச்சரவையில் இடம்பெறக் கூடாதென்பதில் உறுதி காண்பித்திருக்கிறார் என்பது தெளிவு.

எனவே, ஆற்றல் வாய்ந்தவர்கள் அனுபவசாலிகள் என்பதையும் விட அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் எவரும் ஆயுதப் பேராட்ட பின்னனியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடாது என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு தார்மீக கேள்வி எழுகிறது, அவ்வாறாயின் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் அரசியல் பெறுமதிதான் என்ன? இதற்கான பதிலை சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழர் அரசியல்சார்ந்து கருத்துக்களை உருவாக்குபவர்களின் பொறுப்பாகிறது.

இங்கு ஒரு முரண்நகையான விடயத்தையும் அடிக்கோடிட வேண்டியிருக்கிறது. முன்னாள் வன்முறையாளர்களுடன் தன்னால் பணியாற்ற முடியாதென்று கூறும் விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபை தேர்தலின் போது பிரபாகரனை ஒரு மாவீரன் என்றும் – அவரை ஒரு பயங்கரவாதியென்று குறிப்பிட முடியாது என்றும் – கூறியதை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

விக்னேஸ்வரன் அவ்வாறு கூறுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளை அம்மையார் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு கொலைகார அமைப்பென்று வர்ணித்திருந்தார்.

நவிப்பிள்ளையின் கருத்தை மறுதலிக்கும் நோக்கில்தான், அந்த நேரத்தில் விக்னேஸ்வரன் அவ்வாறு குறிப்பிட்டதாகவும் ஒரு அபிப்பிராயம் உண்டு.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் இருக்கின்ற ஒரு அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்படும் தீவிரவாதம் தொடர்பான அறிக்கையில் புலிகளின் பெயரும் இருக்கிறது. 2013இல் வெளியான அறிக்கையிலும் புலிகளின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இதனை விக்னேஸ்வரன் அறியாதவரல்லர்.

ஆயினும், விக்னேஸ்வரனால் பிரபாகரனை ஒரு மாவீரன் என்று சங்கடமின்றி சொல்ல முடிந்திருக்கிறது. நான் முரண்நகையென்று கூறுவது இந்த விடயத்தைத் தான்.

முன்னாள் வன்முறையாளர்களுடன் தன்னால் இணைந்து பணியாற்ற முடியாதென்று கூறும் விக்னேஸ்வரனால் எவ்வாறு பிரபாகரனை புகழ்துரைக்க முடியும்? விக்னேஸ்வரனும் தமிழரசு கட்சியினரும் புலிகளையும் ஏனைய அமைப்புக்களையும் வேறுபடுத்தி நோக்க விளைகின்றனரா?

எனவே, இந்த இடத்தில் விக்னேஸ்வரன் இன்னும் ஒரு அரசியல்வாதியாக செயற்படவில்லை என்றுரைப்பவர்கள் அல்லது அவ்வாறு கருதுபவர்களின் அவதானம் வலுவிழந்து போகிறது.

ஒருபுறம் பிரபாகரனை அங்கீகரித்துக் கொண்டு, முன்னாள் வன்முறையாளர்களுடன் தன்னால் இணைந்து பணியாற்ற முடியாதென்று கூறும்போதே விக்னேஸ்வரன் ஒரு பக்கா அரசியல்வாதியாகி விட்டார் என்பது தெளிவு.

இப்படியான விடயங்களை முன்வைத்து ஆராய்ந்தால் ஒரு விடயம் வெள்ளிடைமலையாகும். அதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்பது உறுதியான ஒன்றல்ல. குறிப்பாக இரா. சம்பந்தனுக்கு பிற்பட்ட காலத்தில் கூட்டமைப்பு இப்போதிருப்பது போன்று இருக்காது.

விக்னேஸ்வரனின் அபிப்பிராயம் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய மூன்று கட்சிகள் மத்தியிலும் தங்களுடைய இடம் என்ன? என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.

உண்மையில் இதிலுள்ள முரண்நகை என்னவென்றால், கூட்டமைப்பு என்பதே வன்முறை அரசியலின் விளைவு என்பதுதான்.

பிரபாகரன் சர்வதேசத்தின் அனுசரனையுடன் பேச்சுவார்த்தை ஒன்றிற்குள் பிரவேசிப்பதற்கான முடிவெடுத்த பின்னணியிலேயே, அதுவரை புலிகளை எதிர்த்துக் கொண்டு அல்லது புலிகளின் தனிநாட்டு வாதத்திற்கு சவாலாக இருந்த ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஓரணிப்படுத்தும் வேலைத்திட்டமொன்றுக்கு அங்கீகாரம் அளித்தார்.

அந்த அங்கீகாரம் என்பது ஏனைய கட்சிகள் அனைத்தையும் புலிகளின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அங்கீகாரமேயன்றி, அவர்களை ஒரு சுயாதீனமான அமைப்பாக இயங்கச் செய்வதற்கான அங்கீகாரம் அல்ல.

இதன் மூலம் சம்பந்தன் போன்ற மூத்த மிதவாதத் தலைவர்களும் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்கின்றனர் என்னும் கருத்தை வெளியுலகிற்கு கொடுப்பதே புலிகளின் திட்டம். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

ஏனெனில், ஜனநாயக மரபில் ஏகத்தலைமைத்துவம் என்பது எப்போதுமே ஏற்புடைய ஒன்றல்ல. எனவே, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வென்று வரும்போது தமிழ் மக்களை ஜனநாயக ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் கருத்தறிவதும், அவர்களது ஆலோசனையை பெற வேண்டியதும் கட்டாயமான ஒன்றாகும்.

ஆனால், கூட்டமைப்பு புலிகளின் தலைமைத்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதன் மூலம் அதற்கான தேவைப்பாடு இல்லாமல் போனது. புலிகள் வலுவாக இருந்த காலம் முழுவதும் கூட்டமைப்பு என்பது புலிகளின் ஒரு உப அமைப்பாகவே செயற்பட்டது. இது அனைவரும் அறிந்த விடயமும் கூட.

புலிகளின் வழிமுறைகளை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதனை பகிரங்கப்படுத்தாதிருந்த கூட்டமைப்பில் தான் பின்னர் சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்றவர்கள் இணைந்து கொண்டனர்.

இவர்களது இணைவிற்குப் பின்னர் கூட்டமைப்பின் முகம் முற்றிலும் மாறியது. இது பற்றி கூறும் சிலர், இதனை ஒரு புலிநீக்க உபாயம் என்கின்றனர்.

ஆனால், தற்போது விக்னேஸ்வரன் உதிர்த்திருக்கும் வார்த்தைகளிலிருந்து நோக்கினால் இது புலி நீக்கமா? அல்லது ஒட்டுமொத்தமான இயக்க அரசியல் நீக்கமா? என்னும் கேள்வியெழுகிறது.

புலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையென்னும் தகுதியை பெற்றுக் கொண்ட கூட்டமைப்பின் ஆரம்பமே உள்முரண்பாட்டுடன் தான் ஆரம்பமானது.

அதுவரை கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. கஜேந்திரகுமாருடன் இணைந்து புலிகளால் அரசியல் அரங்கிற்குள் கொண்டு வரப்பட்டவர்களும் வெளியேறினர்.

இவ்வாறானவர்களை வெளியேற அனுமதித்ததன் ஊடாக கூட்டமைப்பு தன்னை புலிநீக்கம் செய்ய முற்படுவதாகவே பலரும் அபிப்பிராயப்பட்டனர்.

கஜேந்திரகுமாரின் வெளியேற்றம் முற்றிலும் ஒரு கொள்கை நிலைப்பாடு சார்ந்தது. ஆனால், கஜேந்திரகுமார் அவ்வாறு வெளியேறியது தவறென்று கூறுவோரும் இருக்கின்றனர். கஜேந்திரகுமார் உள்ளிருந்தே தன்னுடைய வாதத்தை முன்னிறுத்தி இயங்கியிருக்க வேண்டும் என்போருண்டு. கஜேந்திரகுமார் கூட்டமைப்பிற்குள் இருந்திருந்தால் இப்போது அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பார்.

மேலும், கஜேந்திரகுமார் கூட்டமைப்பிற்குள் இருந்திருந்தால், சுமந்திரன் இந்தளவு தூரம் மேலெழ முடியாதும் போயிருக்கலாம். ஆனால், நிலைமைகளை வாசிப்புச் செய்வோர் கஜேந்திரகுமார் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டுக்காக பதவிநிலைகளை புறக்கணித்து செயற்பட்டிருக்கின்றார் என்னும் முடிவுக்கே வருவர்.

தமிழர் அரசியலில் கஜேந்திரகுமாரின் இடம் என்ன என்பதில் பல்வேறு அபிப்பிராயங்கள் இருப்பினும் தனக்கென்று ஒரு இடத்தை உறுதிப்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம்.

நான் இந்த இடத்தில் கஜேந்திரகுமார் பற்றி குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுண்டு. இன்று தமிழரசு கட்சியின் மேலாதிக்கம் தொடர்பில் அதிருப்தி வெளியிடுவோர், தங்களுக்குள் ஒன்றுபட்டு திடமான முடிவொன்றை எடுக்க முடிந்திருந்தால், இன்றும் கூட்டமைப்பை பதிவு செய்வீர்களா அல்லது இல்லையா என்னும் கேள்வியை அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது.

இன்றுள்ள கூட்டமைப்பின் உள்ளடகத்தை எடுத்து நோக்கினால், முன்னாள் போராட்ட அமைப்புக்களே கட்சி ரீதியான பலத்தை கொண்டிருக்கின்றனர். ஆனால், சட்டரீதியான தகுதி மற்றும் பிரதிநிதித்துவ பலம் என்பதை தமிழரசு கட்சியே கொண்டிருக்கிறது. இதிலிருந்தே முரண்பாடுகள் கருக்கொண்டது.

சட்டரீதியான தகுதிப்பாடு தமிழரசு கட்சி வசம் இருக்கும்வரை, ஏனைய கட்சிகள் என்னதான் விவாதித்தாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை. தமிழரசு கட்சியும் கூட்டமைப்பை ஒரு கட்சியாக தரமுயர்த்துவதில் பெரிய நாட்டம் எதனையும் காட்டப் போவதில்லை.

ஆனால், இன்றைய சூழலில் தமிழ் மக்களின் தலைவர் என்னும் வகையிலும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் என்னும் வகையிலும் இரா. சம்பந்தன் முன்னால் ஒரு பணியுண்டு. கட்சிச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு கூட்டமைப்பை ஒரு வலுவான அரசியல் கூட்டணியாக வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு சம்பந்தனையே சார்கிறது.

கட்சி என்பது மக்களது நலனுக்கேயன்றி, கட்சியில் இருப்போரின் நலனுக்கானதல்ல. தமிழர்கள் இன்றிருக்கும் நிலையில் கட்சிச் சிந்தனையென்பது அடிப்படையிலேயே பயனற்ற ஒன்றாகும்.

தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஜ.ஜே.வி. செல்வநாயகம் ஒரு முக்கியமான தருணத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட கட்சியையும் சின்னத்தையும் புறம்தள்ளி புதிய அமைப்பொன்றை நோக்கி அவரால் சிந்திக்க முடிந்திருக்கிறது.

கட்சிகள் அல்லது இயக்கங்கள் என்பவை குறிப்பிட்ட சூழலில் ஒரு இலக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை ஆகும். சூழ்நிலை மாறும் போது குறிப்பிட்ட கட்சிகளின் அல்லது இயக்கங்களின் தேவையும் இல்லாமல் போகிறது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தொடங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரை எத்தனையோ கட்சிகள் தமிழர் அரசியல் அரங்கில் இயங்கியிருக்கின்றன. நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட தேவையற்ற ஒன்றாகிப் போகலாம்.

ஒரு கட்சியால் புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் போகும் போது இன்னொன்று அதன் இடத்தை எடுத்துக் கொள்ளும். அதுவே இயங்கியல் விதி.

தமிழ் தலைமைகளின் முன்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். கடந்த காலத்தில் தமிழர் அரசியலை சீரழித்தவற்றில் கட்சிச் (இயக்கச்) சிந்தனைக்கே பிரதான இடமுண்டு.

என்னுடைய, எங்களுடைய கட்சியென்னும் சிந்தனை இறுதியில் எங்களுடைய கட்சி மட்டுமே சரியானது என்னும் மேலாதிக்கமாக உருவெடுக்கிறது. இயக்கங்கள் பல இயங்கிய காலத்தில் அவற்றின் சீரழிவின் விதையாக இருந்ததும் இந்த கட்சிச் (இயக்க) சிந்தனைதான்.

கட்சிச் சிந்தனை அல்லது இயக்க சிந்தனையென்பது இறுதியில் எதற்காக அவைகள் தோற்றுவிக்கப்பட்டனவோ, அதிலிருந்து விலகி ஒரு தனியார் வர்த்தக நிறுவனமாக முகம்கொள்ளக் காரணமாகியது.

பல அமைப்புக்கள் இருப்பதும், பல்வேறு நிலைப்பாடுகள் இருப்பதும் பிரச்சினையான ஒன்றல்ல. ஆனால், அவை அனைத்தும் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியதாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாத போது கட்சி அல்லது இயக்கம் என்பவையெல்லாம் தேவையற்ற சுமைகளாவிடும். பின்னர் அந்த சுமைகளை சுமப்பதே மக்களின் தலைவிதியென்றாகும்.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை அடியொற்றிய விவாதங்களும் விமர்சனங்களும் அவ்வாறுதான் வெளித்தெரிகின்றன. உண்மையில் கடந்த ஜந்து வருடங்களாக கூட்டமைப்பு என்பது கட்சிச் சிந்தனைகளால் நிரம்பிய ஒரு கூடாரமாக இருக்கிறதேயன்றி, அது ஒரு அரசியல் கூட்டணியாக இல்லை.

கூட்டமைப்பு சம்பந்தரின் காலத்தில் ஒரு வலுவான அரசியல் கூட்டணியாக உருப்பெறுமா என்பதே இன்றெழுந்திருக்கும் கேள்வி.

சம்பந்தன் சில உக்திகளை கையாண்டு கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு தேர்தல் கூட்டாக பேணிக் கொள்வதில் வெற்றி பெறலாம். ஆனால், அவரது காலத்திற்குப் பின்னர் நிலைமைகள் அவ்வாறிருக்காது.

(தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “தொப்பை” குறைய உதவும், ஸ்கிப்பிங் பயிற்சி…!!
Next post தந்தையின் மரணம் குறித்துகூட தேடாத சஜித் ஜனாதிபதியாக முயற்சிக்கிறார் – பீலிக்ஸ்!!