சுவாமியின் போதனை: புலிகளுக்கு சுவாமியும் உதவி செய்துள்ளார் உங்களுக்கு தெரியுமா? (கட்டுரை)-எம்.எஸ்.எம். ஐயூப்-..!!

Read Time:19 Minute, 9 Second

timthumbஇந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக்கு வந்து வெளியிடும் கருத்துக்களை நாம் நம்புவதாக இருந்தால் தற்போது இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை தொடர்பான தமது நிலைப்பாடுகளை பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளது என்று நம்ப வேண்டியுள்ளது.

குறிப்பாக இந்திய அரசாங்கம் இலங்கையில் அதிகார பரவலாக்கல் திட்டம் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணை ஆகியவை விடயத்தில் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளது என்றே அவரது உரைகளை கேட்டுக் கொண்டு இருக்கும் போது தோன்றுகிறது.

சுவாமி அண்மையில், அதாவது பா.ஜ.க. இம் முறை ஆட்சிக்கு வந்து நரேந்திர மோடி பிரதமரானதன் பின்னர் இரண்டு முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

கடந்த மாதம் அவர், சர்வதேச கற்கைக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் அழைப்பின் பேரில், அந் நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வந்தார். கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற பிராந்திய பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்து கொள்வதற்காகவும் அவர் வந்திருந்தார்.

இவ்விரண்டு விஜயங்களின் போதும் அவர், இந் நாட்டில் புலிகள் அமைப்பை வெறுப்போரும் குறிப்பாக இலங்கை அரசாங்கமும் மகிழ்ச்சியுறும் வகையில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

அவரது நோக்கமே இலங்கை அரசாங்கத்தை திருப்திப் படுத்துவதைப் போல் தான் இருந்தது. அவரது சில கருத்துக்கள் எந்தளவுக்கு யதார்த்தபூர்வமானது என்பதை இலங்கையில் பல ஊடகங்கள் ஆராயத்தவறியதையும் அவதானிக்க முடிந்தது.

கடந்த வாரம் மேற்கொண்ட விஜயத்தின் போது சுவாமி, மேற்படி பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையற்றுகையிலும் தனியார் தொலைக் காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின் போதும் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை வெளியிட்டார்.

கடந்த மார்ச் மாதத்தில் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பாக அமெரிக்கா உட்பட ஐந்து நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் அதனடிப்படையில், தற்போது ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் ஆரம்பிக்கப்படுள்ள விசாரணையின் அறிக்கையும் பெறுமதியற்ற ஆவணங்கள் என்பது சுவாமி வெளியிட்ட ஒரு கருத்தாகும்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையால் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவற்றுக்கு பெறுமதி கிடைக்கும் என்றும் அவர், மேற்படி பாதுகாப்புக் கருத்தரங்கின் போதும்; தொலைக் காட்சி பேட்டியின் போதும் கூறியிருந்தார்.

இலங்கையில் அதிகார பரவலாக்கல் தொடர்பான விடயத்தைப் பற்றிப் பேசும் போது சுவாமி இலங்கையின் அரசியலமைப்புத் திட்டத்தின் 13ஆவது திருத்ததைப் பற்றி இந்திய அரசாங்கம் அவ்வளவு அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூறினார். அத் திருத்தத்தில் அடங்கியிருக்கும் விடயங்களில் 90 சதவீதமானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது போன்ற சில விடயங்கள் இன்னமும் மீதமாக இருப்பதாக கூறிய சுவாமி, அவ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதை தாமதப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்;கு போதுமான காரணங்கள் இருக்கின்றன என்றும் மேலும் கூறினார்.

இந்த இரண்டு விடயங்களில் இலங்கை அரசாங்கம் எந்தக் குறையும் இல்லாமல் பரிபூரணமாகவே நடந்து கொண்டுள்ளது என்பதைப் போல் தான் அவர் கருத்து வெளியிட்டு இருந்தார்.

இலங்கையில் சிங்கள மக்கள் உட்பட பலரும் குறிப்பாக, இலங்கை அரசாங்கமும் அவரது இந்தக் கருத்துக்களால் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள் என்பதை சிங்கள ஊடகங்களையும் அரச ஊடகங்களையும் பார்க்கும் போது தெளிவாக தெரிய வருகிறது.

உண்மையான நிலைமை அவர் கூறுவது தானா என்பதை ஏனைய ஊடகங்களும் அவ்வளவாக ஆராயவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜெனிவா பிரேரணையையும் அதனடிப்படையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையையும் தடுத்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் படாத பாடு பட்டது. அவ்வாறு இருக்கத் தான் அந்தப் பிரேரணையும் அவ் விசாரணையும் வெற்றுக் காகிதங்கள் என்று சுவாமி கூறுகிறார்.

அவை வெற்றுக் காகிதங்களாயின் இலங்கைத் தலைவர்களுக்கு அது தெரியாதா? குறிப்பாக சட்டத் துறையில் பேராசிரியரான வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு அது தெரியாதா? இலங்கை அரசாங்கம் அவற்றை தடுத்துக் கொள்ள ஆபிரிக்க கண்டம் முழுவதிலும் அலைந்து திரிந்து ஆதரவு திரட்ட ஏன் முயற்சி செய்தது என்ற கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றி அவர் தெரிவிக்கும் கருத்தும் அதே போலவே பல கேள்விகளை எழும்;புகின்றன. அவர், கருத்து வெளியிட்டு இரண்டு நாட்களிலேயே அவரது கருத்து பிழையானது என்பதை அவரது கட்சி பதவியில் உள்ள இந்திய மத்திய அரசாங்கமே நிரூபித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடிக்கடி இந்திய உதவியை நாடுவதைப் பற்றியும் அவர் கருத்து வெளியிட்டு இருந்தார். கூட்டமைப்பு, இந்திய தலைவர்களை சந்திப்பதில் அர்த்தம் இல்லை என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.

அந்தக் கருத்தின் படி இந்திய பிரதமர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தம்மை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுப்பதிலும் அர்த்தம் இல்லை. ஆனால், அவர் இந்த கருத்தை வெளியிட்டு இரண்டே நாட்களில் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று இந்திய தலைவர்களை சந்திப்பதற்காக புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையிலான அந்தக் குழு கடந்த வெள்ளிக்கிழமை இந்திய புதிய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்ஜையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமையும் சந்தித்தது.

கூட்டமைப்பின் இந்த விஜயம், சுவாமி மேற்படி கருத்துக்களை தெரிவித்த கடந்த செவ்வாய்க்கிழமைக்குப் பின்னர் ஏற்பாடு செய்யப்படதல்ல. அதற்கு முன்னரே அது முடிவு செய்யப்பட்டு இருந்தும் சுவாமி அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை போலும்.

அறிந்திருந்தால் அவர் அதைக் குறிப்பிட்டு இருப்பார். அதேவேளை, தமது பிரதமரின் அவ்வாறான சந்திப்புக்களை அவர் மட்டந்தட்டிப் பேசியிருக்கவும் மாட்டார்.

கூட்டமைப்பின் இந்த விஜயத்தைப் பற்றி சுவாமிக்கு முன் கூட்டியே தெரியாமல் இருந்தால் பா.ஜ.க.வின் தவிசாளராக இருந்தாலும் அவருக்கு இந்திய அரசாங்கத்தில் உள்ள இடம் என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கூட்டமைப்பைப் பற்றி சுவாமி வெளியிட்டு இருந்த கருத்துக்கள் தொடர்பாக கடந்த 20ஆம் திகதி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிடுகையில், கூட்டமைப்பின் விஜயம் சுவாமியின் முகத்தில் விழுந்த அறையென்ற கருத்துப்பட பேசியிருந்தார். சுவாமிக்கு இந்திய அரசாங்கத்தில் உள்ள இடத்தைப் பற்றியும் மனோ கேள்வி எழுப்பியிருந்தார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றி இந்திய அரசாங்கம் அலட்டிக்கொள்வதில்லை என்ற சுவாமியின் கருத்து எவ்வகையிலும் உண்மையல்ல. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உறுதிபடுத்துவார்.

கடந்த மே மாதம் 26 ஆம் திகதி, நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவிப் பிரமானம் செய்து கொண்ட போது அந்த வைபவத்துக்;கு இலங்கை ஜனாதிபதியும் அழைக்கப்பட்டு இருந்தார்.

27ஆம் திகதி இலங்கை ஜனாதிபதியும் புதிய இந்திய பிரதமரும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அப்போது ஆராயப்பட்ட பிரதான விடயமாக இருந்ததும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுலாக்குவதே.

அது மட்டுமல்லாது இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்ததன்; பிரகாரம் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதனையும் இந்திய பிரதமர் ஞாபகப் படுத்தியிருந்தார்.

இந்த விடயத்தில் தமது அரசாங்கம் முன்னைய காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து விலகிச் செல்லவில்லை என்பதை இலங்கை ஜனாதிபதிக்கு உணர்த்துவதற்காக, இந்திய பிரதமர் இந்த சந்திப்பின் போது ஒரு உத்தியை கையாண்டு இருந்தார்.

பேச்சுவார்த்தையின் இடை நடுவே தமது வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங்கை விழித்த மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கை அரசாங்கம் என்ன வாக்குறுதிகளை வழங்கியிருந்தது என்று கேட்டார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக நிறைவேற்றி அதற்கு அப்பாலும் செல்வதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளதாக சுஜாதா சிங் கூறவே, மோடியும் அந்த விடயங்களை வலியுறுத்தியிருந்தார்.

இவை உடனடியாக செய்யக் கூடியவையல்ல என்று இலங்கை ஜனாதிபதி கூறவே, ஏற்கெனவே தயார் நிலையல் இருந்த பதிலைப் போல் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டதாக இந்தியப் பிரதமர் கூறியிருந்தார்.

இந்தியப் பிரதமர், இலங்கை ஜனாதிபதியுடனான முதலாவது பேச்சுவார்த்தையின் போதே பிரதான விடயமாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எடுத்துக் கொள்வதாக இருந்தால், இந்தியாவுக்கு அந்த திருத்தம் அவ்வளவு முக்கியமல்ல என்று சுவாமி கூறுவது எவ்வகையிலும் உண்மையல்ல என்பது புலனாகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயமும் இந்தியா 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கைவிட்டுவிடவில்லை என்பதையே காட்டுகிறது.

இந்திய பிரதமருடனும் இந்திய வெளியுறவு அமைச்சருடனும்; கூட்டமைப்பினர் 13ஆவது திருத்தத்தைப் பற்றியே கலந்துரையாடினர். அந்த விடயத்தில் இந்திய அரசாங்கம் அக்கறையில்லாமல் இருப்பதாக இருந்தால் அவ்வளவு வேலைப்பழுவுள்ள இந்தியப் பிரதமர், இலங்கையில் பிராந்தியக் கட்சியொன்றுக்கு அதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்க மாட்டார்.

இலங்கை அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுலாக்குவதோ அல்லது அதற்கு அப்பால் செல்வதோ ஒரு புறமிருக்க, அதனை தற்போதைய நிலையிலாவது வைத்திருக்க விரும்பவில்லை.

திவி நெகும சட்ட மூலம் சகல மாகாண சபைகளாலும் அங்கீகரிக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, குற்றப் பிரேரணையொன்றின் மூலம் அப்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்த அரசாங்கம் மாகாண சபைகளையும் இரத்துச் செய்ய கடந்த வருடம் முயற்சித்தது.

அவ்வாறானதோர் அரசாங்கமொன்றின் தலைவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முக்கியமானதல்ல என்று சுவாமி கூறும் போது எவ்வளவு மகிழ்ச்சியுறுவார்கள் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும்.

அவரது கூற்றை நம்பி இலங்கை அரசாங்கம் மாகாண சபைகளை இரத்துச் செய்ய மீண்டும் நடவடிக்கை எடுத்தால் உலகத்தார் முன்னிலையில் மீண்டும் மூக்குடைப்படுவது நிச்சயம்.

கடந்த வருடமும் மாகாண சபைகளை இரத்துச் செய்ய அரசாங்கம் முயற்சித்த போது அது தான் நடந்தது. அவர், ஏதோ ஒரு காரணத்துக்காக அண்மைக் காலமாக இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களை மகிழ்விக்க பெரு முயற்சி எடுத்து வருகிறார்.

புலிகளுக்கு சுவாமி செய்த உதவி
சுவாமி ஒரு சர்ச்சைக்குரிய நபர் என்பது இந்தியர்களுக்குத் தெரியும். அவர் புலிகளுக்கும் இஸ்ரேலிய மொஸாட் புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையே உறவை ஏற்படுத்திக் கொடுத்தார் என 1991 ஆம் ஆண்டு முன்னாள் மொஸாட் உளவாளியான விக்டர் ஒஸ்றொவ்ஸ்க்கி தமது ‘பை வே ஒப் டிஷெப்ஷன்’ (By way of Deception ) என்ற நூலில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை கலாநிதி தயான் ஜயதிலக்கவின் தந்தையான காலஞ்சென்ற மூத்த ஊடகவியலாளர் மர்வின் சில்வா தாம் நடத்திய லங்கா காடியன் சஞ்சிகையிலும் 1991ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிய இதழில் குறிப்பிட்டு இருந்தார்.

ஒஸ்றொவ்ஸ்கியின் விளக்கத்தின் பிரகாரம் நிலக்கண்ணி வெடி பற்றிய நிபுணத்துவம் உட்பட ஏனைய விடயங்களுக்காக புலிகளுக்கு இஸ்ரேலின் உதவியை பெற்றுக் கொடுப்பதற்காக சுவாமி தமது ஹாவர்ட் தொடர்புகளை உபயோகித்துள்ளார் என மேர்வின் சில்வா தமது சஞ்சிகையில் குறிப்பிட்டு இருந்தார்.

அதனை அடுத்து புலிகளுக்கும் மொஸாட் உளவுப் பிரிவுக்கும் இடையிலான உறவை விசாரணை செய்வதற்காக, அப்போதைய ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச ஆணைக்குழுவொன்றையும் நியமித்து இருந்தார்.

ஆனால், அதே ஆண்டு இடம்பெற்ற ராஜீவ் காந்தி கொலையை அடுத்து சுவாமி புலிகளை கடுமையாக எதிர்த்து வருகிறார். அந்த அடிப்படையிலேயே அவர், இப்போது இலங்கை அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வருகிறார்.

அதில் நியாயம் இருந்த போதிலும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்தியாவுக்கு அவ்வளவு முக்கியமானது அல்ல என்பது உண்மையல்ல.

தமது பிராந்திய ஆதிக்கவாதத்தை தொடர்வதற்காகவும் தமது நாட்டில் ஒரு பகுதியான தமிழகத்தின் அக்கறை காரணமாகவும் இந்திய மத்திய அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மீது பெரும் அக்கறை கொண்டுள்ளது என்பதே உண்மை.

-எம்.எஸ்.எம். ஐயூப்-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுவன் படுகொலை: வாலிபர் கைது!!
Next post I LOVE YOU விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா!!