கமலை தொடர்ந்து தனது பிறந்தநாளில் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த ஆதி!!
நடிகர் ஆதி தன் பிறந்தநாளை கடற்கரை தெருவில் இறங்கி சுத்தம் செய்து தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கினார். அதுமட்டுமல்ல இந்நாளில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினார். நடிகர் ஆதி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
வழக்கமாக நடிகர்கள், திரை நட்சத்திரங்கள், நண்பர்கள் புடைசூழ பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடுவார்கள். சிலர் அனாதை இல்லங்கள் செல்வார்கள். ஏதாவது உதவிகள் செய்வார்கள். நடிகர் ஆதி தனது பிறந்த நாளை மாறுபட்ட வகையில் கொண்டாடினார்.
அவர் இன்று அதிகாலையில் தன் குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் பெசன்ட் நகர் கடற்கரை சென்றார்.அங்கு குவிந்து கிடந்த குப்பைகள் முழுவதும் அகற்றி சுத்தம் செய்தார். இதில் எக்ஸனோரா அமைப்பையும் இணைத்துக் கொண்டார்.
‘க்ளீன் அண்ட் க்ரீன் சென்னை’ என்கிற பெயரில் இந்நிகழ்வை நடத்தினார். கடற்கரையைத் தூய்மைப்படுத்தியதுடன் மரக்கன்றுகளையும் ஓரங்களில் நட்டார். காலை நேரத்தில் இந்த தூய்மைப்பணி நடைபெற்றதால் ரசிகர்கள், அருகிலுள்ளவர்கள் மட்டுமல்ல நடைப்பயிற்சி சென்றவர்கள்கூட இதில் ஆர்வமாகப் பங்கேற்றனர்.
தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிரதமர் மோடி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியுள்ளார். அந்தப் பயணத்தில் ஆதியும் இணைந்துள்ளார் எனலாம்.
இதுபற்றி நடிகர் ஆதி கூறும்போது “இந்த தூய்மைப் பணியை மக்களிடம் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக செய்தோம். என் பிறந்த நாளில் அதுவும் காலையிலேயே இப்படி தொடங்கியதில் எனக்குப் பெருமையாகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.” என்கிறார்.
நடிகர் ஆதி கண்தான விழிப்புணர்வையும் இன்று ஏற்படுத்தினார். ஏற்கெனவே ஆதி, தான் நடிக்கும் ‘யாகாவாராயினும் நாகாக்க’ படப்பிடிப்பின் போதே படக்குழுவினரில் பலரையும் கண்தானம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளார். இதற்கான சம்மத படிவங்கள் சங்கர நேத்ராலயாவில் வழங்கப்பட்டுவிட்டன.
இதன் தொடர்ச்சியாக இன்று தன் பிறந்த நாளிலும் 28 பேரை கண்தானம் செய்ய சம்மதிக்க வைத்ததையும் பெருமையுடன் கூறுகிறார். ஆதி தன் நண்பர்கள் 8 பேருடன் இணைந்து ‘லெட்ஸ் ப்ரிட்ஜ்’ என்கிற அமைப்பை வைத்திருக்கிறார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் வாக்குரிமை உள்ளவர்களுக்கான வாக்களிக்கும் விழிப்புணர்வை வித்தியாசமாக நடத்தினர். இதன்படி சின்னஞ்சிறிய 50 குழந்தைகளைக் கொண்டு புதிதாக வாக்குரிமை வயது அடைந்தவர்களிடம் சென்று அவர்களின் கையில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அடிக்கச் செய்தனர்.
அதில் ‘எங்கள் எதிர் காலம் உங்கள் கையில்! சிந்திப்பீர் வாக்களிப்பீர்! ‘ என்று எழுதப்பட்டு இருக்கும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குழந்தைகள் நடித்த அதற்கான பாடல் காட்சியில் நடிகர்கள் சத்யராஜ், நாசர், விஜய்சேதுபதி போன்றோரும் ஆர்வமுடன் தோன்றியிருந்தார்கள்.
பிறந்தநாள் விழா என்றால் ரசிகர்களைக் கூச்சல் போடவும் தோரணம் கட்டவும் என்று பயன்படுத்தும் நடிகர்களிடம் ஆதி சமூக நோக்கில் ரசிகர்களைப் பயன்படுத்துவது பாராட்டுக்குரியது.
Average Rating