வடிவேல் பட பாணியில் அதிமுக பிரமுகரிடம் நூதன முறையில் கொள்ளை!!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்தவர் தமிழழகன். இவர் கூட்டுறவு மற்றும் வேளாண் விற்பனை சங்க இயக்குனராக இருந்து வருகிறார். அ.தி.மு.க. பிரமுகரான இவர் கந்தர்வக்கோட்டை கடை வீதியில் அரிசி, வத்தல், பருப்பு உள்ளிட்டவைகளை மொத்தமாகவும், சில்லைறையாகவும் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று தமிழழகன் கடையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த டிப்–டாப் வாலிபர்கள் தமிழழகனிடம் அரிசி பற்றி விலை கேட்டனர். ஒவ்வொரு அரிசிக்கும் விலையை தமிழழகன் கூறினார்.
அப்போது ஒரு வாலிபர் 15 கிலோ அரிசி கட்டுமாறு கூறியதால் அரிசியை எடை போட்டு கட்டி கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த வத்தல் மூட்டையை காட்டி தலா 5 கிலோ கொண்ட 5 பார்சல்கள் கேட்டனர். இதற்கிடையில் மற்றொரு வாலிபர் இரண்டு 500 ரூபாயை தமிழழகனிடம் கொடுத்து ரூ.1000 தரும்படி கேட்டனர்.
கல்லாவில் இருந்து 1000 ரூபாயை எடுத்து கொடுத்த தமிழழகன் வத்தலை எடை போட்டு கட்டி கொண்டிருந்தார். இந்த நேரத்தில் 2 வாலிபர்களும் அனைத்தையும் கட்டி வைத்திருக்குமாறும் பக்கத்து கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தமிழழகன் கல்லாவை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் 4 கிராம் மோதிரம், வங்கி பாஸ்புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்த பையும் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் கடைக்கு வந்த வாலிபர்கள் வடிவேலு பட பாணியில் தன்னிடம் கொள்ளையடித்து விட்டு சென்றதை உணர்ந்த தமிழழகன் கந்தர்வக்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் துலுசிபட்டி என்ற இடத்தில் தமிழழகன் கடையில் இருந்து தூக்கி சென்ற பை கிடைத்துள்ளது. அதில் பணம் மற்றும் மோதிரத்தை தவிர மற்றவை இருந்துள்ளது. அதனை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating