உங்கள் வாக்கை பயனுறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. -சிவநேசன் (பவன்)!!
குறுகிய கால இடைவெளிக்குள் எங்களை நோக்கி ஒரு பிரதேச ரீதியான தேர்தல் வந்துள்ளது. எமது மண்ணினதும் இனத்தினதும் பிரதிநிதித்துவத்தின் விகிதாச்சாரத்திற்கு பங்கமேற்படாமல் தெளிவான சிந்தனையுடனும் அர்ப்பணிப்புடனும் எமது முழுமையாக வாக்குப்பலத்தை செலுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் அனைவரும் நன்கறிவோம்.
எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை நாமே திட்டமிட்டு தீர்மானிப்பதன் மூலமே எமதும் – எமது வருங்கால சந்ததியினரதும்; இருப்பையும் வாழ்வையும் உறுதி செய்யமுடியும் என்பதை அண்மைக்கால வரலாறுகள் எமக்கு பாடங்களாக தந்துள்ளன.
எமது பிரதேசங்களில் எங்கள் மண்ணை அபிவிருத்தி செய்ய, எங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய எங்கள் கைகளிலேயே பிரதேசசபை இருத்தல் வேண்டும். தமிழ் தேசியத்தை வலியுறுத்தி -தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களாலேயே- உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே உங்கள் வாக்குகளை அளித்து தமிழர்களின் வாழ்வையும் இருப்பையும் உறுதிசெய்து எங்களுக்கான அபிவிருத்திகளை நாங்களே தீர்மானிப்போம்.
தேசிய இனப்பிரச்சனைகளுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழிவகை தேடியே தேசிய மட்டத்தில் மாற்றங்களை வேண்டி நின்றோம். ஆனால், எமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் வஞ்சகமாக, திட்டமிட்டு, கொள்ளையிட்டு செல்லப்படுவதை தடுப்போம்.
1. வேறுபட்ட அரசியல் சூழ்நிலையில் தயாரிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் காரணமாக பிரதிநிதித்துவத்தை இழக்கும் வட்டாரங்களுக்கு, உரிய நடவடிக்கைகளின் மூலம் பிரதிநிதித்துவங்களை வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.
2. அத்துமீறிய குடியேற்றங்கள் மூலம் எமது மண்ணினதும் கடலினதும் வளங்கள் எங்கள் கையை விட்டுச் செல்வதை தடுத்து நிறுத்தி எமது மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த தேவையான தார்மீக ரீதியானதும், சட்டரீதியானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவோம்.
3. மீள்குடியேற்றம் என்ற பெயரில் எமது மண்ணின் அரிய சொத்தாக விளங்கும் காட்டு வளங்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.
4. கவனிக்கப்படாத நிலையில் இருக்கும் உள்ளுர் போக்குவரத்து பாதைகள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்படுவதில் எமது பூரண கவனத்தை செலுத்தி பாடசாலை மாணவர்கள், பாதசாரிகள், பொதுமக்களின் அவலநிலை நீங்கிட உடன் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
5. மனிதனின் அடிப்படைத் தேவைகளாக இருந்தும் புறக்கணிக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான கிராமப்புற மக்களின் குடிநீர்த் தேவை, மலசல கூட வசதிகள், சுகாதார மற்றும் சூழல் மேம்பாடு போன்றவற்றில் அதிகூடிய கவனம் செலுத்துவோம். மேலும் சுகாதாரம், போக்குவரத்து, சூழல் மேம்பாடுகளில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு மத்திய, மாகாண அரசுகளினதும், அரசுசாரா நிறுவனங்களினதும் உதவிகளுடன் அவற்றை நடைமுறைப்படுத்துவோம்.
மேலே கூறப்பட்டவைகளை நடைமுறைப்படுத்த, தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அடையாளமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் “வீடு” சின்னத்திற்கு முதலில் புள்ளடியிட்டு, பின்னர் எனது இலக்கம் 2 ற்கு நேரே மூன்று புள்ளடிகளை இட்டு உங்கள் வாக்கை பயனுறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள்
கந்தையா சிவநேசன் (பவன்), ஜே. பி.
Average Rating