குடும்ப வன்முறை சட்டத்தில் கணவன் மீது பொய் வழக்கு: மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்!!
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட குடும்ப வன்முறை (தடுப்பு) சட்டத்தை பல பெண்கள் தவறாக பயன்படுத்தி கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை பழிவாங்கி வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பொய்யான தகவல்களை அளித்து தனது கணவர் மீது இந்த சட்டத்தின்கீழ் வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தற்போது டெல்லியில் வசித்தும் ஒரு பெண் 1989-ம் ஆண்டு பாட்னா நகரில் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், சில ஆண்டுகளுக்கு பிறகு டெல்லிக்கு வந்து வாழ்ந்துவரும் தன்னை கணவரும், மாமனார்- மாமியாரும் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வருவதாகவும் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், அந்தப் பெண்ணால் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் மீது குடும்ப வன்முறை (தடுப்பு) சட்டத்தின்கீழ் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் விசாரணையின்போது புகார் அளித்த பெண் பல உண்மைகளை மறைத்து, போலியாக ஜோடிக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் மூலம் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது தெரியவந்தது.
எனவே, குடும்ப வன்முறை (தடுப்பு) சட்டத்தை தவறாக பயன்படுத்திய அந்தப் பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ஷிவானி சவுகான், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற தவறான தீய நோக்கத்துடன் இந்த சட்டத்தை இனிமேல் யாரும் பயன்படுத்த கூடாது என்று மற்றவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் இந்த அபராதம் விதிக்கப்படுவதாக குறிப்பிட்ட மாஜிஸ்திரேட், இந்த ஒரு லட்சம் ரூபாயை பார்வையிழந்தோர் நலவாழ்வு நிதிக்கான வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating