இதுதான் இந்தியா: இரவு பகலாக படித்து நான்கு டிகிரி வாங்கியவர் குப்பை பொறுக்குகிறார்!!
வளர்ந்து வரும் இந்தியா, பல விஷயங்களில் உலக நாடுகளைப் போல் மேலும் முன்னேற நினைக்கிறது. ஆனால், சில விஷயங்களில் உலக நாடுகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது.
“நாங்கள் மலம் அள்ளுபவர்களாகவே பிறந்தோம். பிறந்ததிலிருந்தே அடிமைகளாக இருக்கிறோம். எங்களுக்கு உண்மையில் எந்த அதிகாரமும் இல்லை. இந்த கொடுமையிலிருந்து நாங்கள் வெளியேற நினைக்கிறோம். அம்பேத்கர் சொன்னது போல் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ‘படித்தால் நீ முன்னேறலாம்.’ ஆனால் படித்தாலும் எங்களை மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.” என்று வருத்தம் தோய பேசும் மும்பையைச் சேர்ந்த சுனில் யாதவ் 2005-2014 ஆம் ஆண்டுகளில் பி.காம், பி.ஏ ஜர்னலிசம், சமுகப் பணிகள் முதுகலை படிப்பில் எம்.ஏ, என்று பல பட்டங்களை பெற்று தற்போது எம்.ஃபில் படித்து வருகிறார்.
இவ்வளவு படித்துள்ள யாதவ் தனது வேலை குறித்து கூறுகையில், “முதல் முதலாக டிரைனேஜில் இறங்கும் போது என் உடலில் வீசிய நாற்றம் என்னைக் கேவலமாக உணரச் செய்தது. அந்த நொடியில்தான் நான் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைத்தேன்” என்றார்.
இருப்பினும், 4 தலைமுறையாக பார்த்து வரும் மலம் அள்ளும் வேலையை பார்த்துக் கொண்டே படிக்க ஆரம்பித்தார். இரவு 9 மனியிலிருந்து 2 மணி வரை சாக்கடையை சுத்தம் செய்து விட்டு கிடைக்கும் நேரத்தில் படித்து, தான் படித்தது மட்டுமின்றி, படித்தால்தான் இந்த உலகம் உன்னை மதிக்கும் என்று கூறி தனது மனைவியையும் பட்டதாரியாக்கியுள்ளார்.
“எல்லா தலித்தும் மலம் அள்ளுபவர்களாக வேலை பார்ப்பதில்லை. ஆனால் மலம் அள்ளுபவர்கள் எல்லாருமே தலித்கள்தான். இதில் மட்டும் எங்களுக்கு 100 சதவீதம் இட ஒதுக்கீடு உண்டு.” என்று ஆதங்கத்துடன் சொல்லும் யாதவுக்கு விளக்கம் அளிக்க நம்மிடம் என்ன இருக்கிறது?
தற்போது 36 வயதாகும் யாதவ், மும்பை நகராட்சியில் குப்பை சேகரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட சமூக-பொருளாதார கணக்கெடுப்பில் இந்தியா முழுவதும் 1.8 லட்சம் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது வருந்தத்தக்கது.
Average Rating