பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’…!!

Read Time:13 Minute, 52 Second

article_1473916874-mmஉலகின் அனேகமான நாடுகளில், பெண்களுக்கான உரிமைகள், ஓரளவு கிடைத்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த நிலைமையோடு ஒப்பிடும் போது, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மிக முக்கியமானது. முன்பை விட அதிகளவிலான பெண்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். முன்பை விட அதிகளவிலான பெண்கள், நாட்டின் தலைமைத்துவத்தில் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் தெரேசா மே, ஜேர்மனியின் அங்கெலா மேர்க்கெல், நோர்வேயின் ஏர்னா சோல்பேர்க், மியான்மாரின் ஆங் சாங் சூகி என்று நீளும் இந்தப் பட்டியலில், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டனும் இணைந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால் இந்த முன்னேற்றங்கள், இன்னமும் அடைய வேண்டியிருக்கின்ற முன்னேற்றங்களை எப்போதுமே மறைத்துவிடக் கூடாது. அதற்காகத் தான், 2016ஆம் ஆண்டிலும் பெண்ணுரிமை பற்றியும் பெண்ணியம் பற்றியும் பேசிக் கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

பெண்ணை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கும் ஆணாதிக்கம் வேண்டுமானால், உலகின் பல நாடுகளில் இப்போது இல்லாமல் போயிருக்கலாம், ஆனால் பெண்ணை வீட்டை விட்டு வெளியேறுவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்து, அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள், இப்போதும் இடம்பெற்று வருகின்றன தான். பெண்ணொருத்தி, இந்த ஆடையைத் தான் அணிய வேண்டுமென்ற கட்டாயம் வேண்டுமானால், முன்பை விடக் குறைந்திருக்கலாம், ஆனால் பல்வேறு விதமான அழுத்தங்களுக்கு மத்தியில், பெண்கள் அணிய வேண்டிய ஆடைகளை ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களும் அரசாங்கங்களும் முடிவு செய்கின்ற நிலைமை, இன்னும் நீடித்துத் தான் வருகிறது. “புர்கா அணியாவிட்டால், எமது குடும்ப மானத்தை நீ குழிதோண்டிப் புதைக்கிறாய்” எனத் தெரிவித்து, பெண்ணைக் கொலை செய்யும் நிலைமை காணப்படும் அதேநிலையில், “கடற்கரைக்கு வரும்போது, உன் உடலை முழுமையாக மறைத்து வராதே. பிக்கினியில் தான் வரவேண்டும். இல்லாவிடின் கைது செய்வேன்” என்று, அரசாங்கங்கள் சொல்லுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் பியர் அருந்துகின்ற பெண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவருவதாக, தனது “ஆதங்கத்தை” வெளிப்படுத்தியிருக்கிறார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அண்மைய சில ஆண்டுகளில், இலங்கைப் பெண்களின் மட்டத்தில், பியர் அருந்துவோர், கணிசமானளவு அதிகரித்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன என்பது தான் அவரது கருத்து.

ஜனாதிபதியின் கருத்தின் பொருத்தமான தன்மையைப் பற்றி ஆராய்வதற்கு முன்பதாக, அவரின் அந்தக் கருத்தில் உண்மை காணப்படுகிறதா என்பதை ஆராய்வது நலமானது. இலங்கையில் மதுப்பாவனை தொடர்பான அண்மைய தரவுகளைப் பெற்றுக் கொள்வது, கடினமாக உள்ளது. சுகாதார அமைச்சிடம், 2014ஆம் ஆண்டுக்கான தரவுகளே காணப்படுகின்றன. ஆனால், கடந்த மாதம் கருத்துத் தெரிவித்திருந்த புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர் பாலித அபேகோன், இலங்கையைச் சேர்ந்த வளர்ந்தோரில் (15 வயதுக்கு மேற்பட்டோர்), ஏறத்தாழ 40 சதவீதமானோர் மதுபானப் பாவனையில் ஈடுபடுதாகத் தெரிவித்திருந்தார். ஆண்கள், பெண்கள் எனத் தனித்தனியாகக் குறிப்பிட்ட அவர், ஆண்களில் 35 சதவீதத்துக்கும் அதிகமானோரும் பெண்களில் 2 சதவீதமானோரும் இவ்வாறு மதுபானப் பாவனையைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்த 2 சதவீதம் என்பது, 2014ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் அறிக்கையிலுள்ள 2.6 சதவீதத்தை விடக் குறைவானதாகும். ஆகவே, என்ன அடிப்படையில், பெண்கள் பியர் அருந்துவது அதிகரித்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார் என்பது கேள்விக்குரியது.

சரி, ஜனாதிபதி தெரிவித்த கருத்து, தரவுகளின் அடிப்படையில் சரியானது என்று ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும் கூட, அவ்வாறு பியர் அருந்துவது அதிகரித்தால் தான் என்ன என்ற கேள்வி எழுகின்றது இல்லையா? தாங்கள் விரும்புகின்ற விடயங்களை அருந்துவதற்கும் உண்ணுவதற்கும், பெண்கள் உட்பட அனைவருக்கும் உரிமை உள்ளது. இலங்கையில் மதுப்பழக்கம் அதிகரித்திருக்கிறது என்ற கருத்தை வலியுறுத்த ஜனாதிபதி விரும்பியிருப்பாரானால், ஒட்டுமொத்தமாக அனைவர் சம்பந்தமாகவும் தான் கதைத்திருக்க வேண்டும். “பெண்கள், பியர் அருந்துவது அதிகரித்துவிட்டது” என்று சொல்வது, “பெண்ணாக இருந்துகொண்டு, பியர் அருந்துகிறார்கள்” என்ற ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு என்று தான் கருத வேண்டியுள்ளது. இலங்கையில், மது அருந்துவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வித்தியாசம், மிக அதிகளவில் காணப்படுகிறது. இலங்கையின் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்ற, ஆண்களின் மது அருந்துதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படாமல் இருப்பது எதற்காக? இலங்கையில் இன்னமும் கசிப்புக் காய்ச்சுதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், அவற்றைப் பற்றிய போதிய கவனம் செலுத்தப்படுகிறதா? போயா போன்ற, மது விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கூட, கொழும்பு உட்படப் பல பகுதிகளில், மதுபானங்களைத் தாராளமாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதைப் பற்றி, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏதோவொன்று சொல்ல வந்து, அது இறுதியில் பெண்களைத் தாழ்வுபடுத்துவது அல்லது ஒடுக்குவது போன்றதாகிவிட்டது என்ற கருத்தும் முன்வைக்கப்படலாம். ஆனால், இதற்கு முன்னரும், இவ்வாறான ஆணாதிக்கப் போக்குடைய கருத்துகளை, ஜனாதிபதி வெளியிட்டிருக்கிறார்கள் என்பது தான், இவ்விடயத்தில் அவருக்குச் சந்தேகத்தின் பலனை வழங்குவதில் பின்னடிக்க வைக்கிறது.

பாடகர் இக்லேஷியஸின் இசை நிகழ்ச்சியில், பெண்ணொருவர் தனது மேல் உள்ளாடையைக் கழற்றி எறிய, அதனால் “அறச்சீற்றம்” கொண்ட ஜனாதிபதி, இவ்வாறான நிகழ்வுகளால் கலாசாரம் சீர்கெடுகிறது என்று தெரிவித்ததோடு மாத்திரமல்லாது, இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டதால், அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்குத் திருக்கை வாலால் அடிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். அவரது அக்கருத்தை, உலகமே வியப்புடன் பார்த்திருந்தது. ஆகவே, காலாகாலமாக, பெண்கள் எதை அணிய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதே ஆணாதிக்க மனநிலையைத் தான் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை, ஓரளவு வெளிப்படையாகவே புரிந்துகொள்ள முடிகின்றது.

அந்தக் கருத்து, ஜனாதிபதியின் தனிப்பட்ட கருத்து என்று சொல்லப்படக்கூடும். ஆனால், உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில், நாட்டின் ஜனாதிபதியாகக் கலந்துகொண்டு, அதில் ஜனாதிபதி தெரிவிக்கும் கருத்துகள், ஊடகங்களால் மிகவும் கவனிக்கப்படும் கருத்துகளாகவே இருக்குமென்பதை, பழுத்த அரசியல்வாதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். மாறாக, அவரது இந்தக் கருத்து, பெண்கள், மது அருந்துவதையும் இரவு விடுதிகளுக்குச் செல்வதையும் கட்டுப்படுத்தும் அல்லது அது தொடர்பான தவறான பார்வையைக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு, அவல் கிடைத்தது போன்றிருக்கும். தங்களது கருத்து அல்லது “கொள்கை”, சரியானது என்ற திடப்படுத்தலை அக்கருத்து வழங்கியிருக்கும்.

மது அருந்துவதாலோ அல்லது சிகரெட் புகைப்பதாலோ, பெண்ணுரிமை கிடைத்துவிடும் என்பது இதன் கருத்தல்ல. ஆண்கள் செய்யும் அத்தனை தவறுகளையும் செய்வதன் மூலம் தான் பெண்களுக்கான சமவுரிமை என்ற உணர்வு ஏற்படுமென்ற அர்த்தமும் கிடையாது. மாறாக, பெண்ணென்பதால் மாத்திரம், ஒரு விடயத்தைச் செய்வதற்கு ஒருவர் தடுக்கப்படுவது ஏனென்ற கேள்வியை எழுப்புவது தான் இதன் நோக்கம்.

மது, சிகரெட் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் உட்பட, மது, சிகரெட் பழக்கத்தைக் கொண்ட ஆண்களில் சிலர், பெண்கள் மது அருந்துவதையும் சிகரெட் புகைப்பதையும் ஏற்றுக் கொள்வதற்குத் தயராக இல்லை. பெண்கள் மது, சிகரெட் அருந்துவதைக் கொள்கையால் ஆதரிப்போர் கூட, அந்தப் பெண்கள், தங்களது சகோதரிகளாகவோ அல்லது அன்புக்கு உரியவர்களாகவோ இருப்பதை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை. மது அருந்துவது தான் தவறு என்றால், எதற்காகப் பெண்கள் மாத்திரம் இலக்கு வைக்கப்படுகிறார்கள்?

உலகில், தனிநபர் ஒருவருக்கு, அதிகளவு வடிகட்டப்பட்ட சாராயத்தை உள்ளெடுக்கும் நாடுகளில் ஒன்றாக, இலங்கை இருக்கிறது என்ற நிலையில், இலங்கையின் மதுப்பிரச்சினை என்பது மிக முக்கியமானது. ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஆனால், பெண்கள் மது அருந்துதல் என்பது, இன்னமும் ஒரு பிரச்சினை தரக்கூடிய அளவுக்கு வரவில்லை. ஒருவேளை, இலங்கையில் 70 சதவீதமான பெண்கள் பியர் அருந்தத் தொடங்க, ஆண்களில் 30 சதவீதமானோர் தான் மது அருந்துகிறார்கள் என்றால், பெண்களைத் தனியாகச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையிருக்கும். மாறாக, ஆண்களுக்கு பெண்கள் என்பது, 35:2 என்ற விகிதத்தில் காணப்படும் நிலையில், கவனஞ்செலுத்த வேண்டியவர்கள், ஆண்களே.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல்…!!
Next post விக்னேஷின் தீக்குளிப்பிற்கு யார் காரணம் தெரியுமா? கடுகடு சீமான்…!!