லண்டனில் தனது மூன்று மாதங்களேயான பெண் குழந்தையை துன்புறுத்தி கண்பார்வையை இழக்கச் செய்த இலங்கைத் தந்தை தற்கொலை
தனது மூன்று மாதங்களேயான பெண் குழந்தையை துன்புறுத்தி கண்பார்வையை இழக்கச் செய்த குற்றத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழரான தந்தையொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்ற விசாரணையின் பின்னர் தீர்ப்பிற்காக காத்திருந்தவேளை நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று லண்டனில் நடைபெற்றுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டு மேற்கு லண்டனில் வசித்து வந்த 40வயதான ஆனந்தகுமார் இரட்ணசபாபதி என்பவரே நீதிமன்றத்தில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். இவர் தனது மூன்று மாதமேயான மகளின் மூக்கு மற்றும் வாய் துவாரங்களை அடைத்து துன்புறுத்தியதால் அக்குழந்தையின் ஒருகண் பார்வையிழந்துள்ளது. இதையடுத்து இவர் பிரித்தானிய பொலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்விடயம் தொடர்பான வழக்கு கடந்த செவ்வாய் நடைபெற்றது. அங்கு இரட்ணசபாபதி தனது மொழி பெயர்ப்பாளரான மில்றோய் இராசையா என்பவரிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியதையடுத்து அவரது கைப்பை நீதிமன்றில் சோதனையிடப்பட்ட போதிலும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. பின்னர் தீர்ப்புக்கான வேளை நெருங்கிய போது கைதி திடீரென குளர்பான போத்தலில் தூக்க மாத்திரையை கலந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.