By 11 November 2020 0 Comments

தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்தது என்ன? (கட்டுரை)

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இலங்கையை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமூகப் பரவல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், தினந்தோறும் நாடெங்கிலும் ஆங்காங்கே, புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட வண்ணமே இருக்கின்றார்கள்.

கொரோனா வைரஸ், முழு உலகத்துக்குமே சவாலாக மாறியிருக்கிறது. கொரோனா வைரஸின் சுகாதாரத் தாக்கம் ஒரு புறமென்றால், அதன் பொருளாதாரத் தாக்கம் அதைவிடப் பயங்கரமானதாக இருக்கிறது.

தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர, நீண்ட கால முடக்கல் நிலை அமல்படுத்தப்பட்டால், தொற்றுப் பரவல் குறையும். ஆனால், அதனால் விழும் பொருளாதார அடி, நீண்ட காலத்துக்கு மீண்டெழ முடியாத பாதாளத்தில் நாட்டைத் தள்ளிவிடும். ஆகவே, நோய்த்தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் வரை அல்லது, குறைந்தபட்சம் ஆற்றல்மிகு நோய்க்கொல்லி மருத்துவ சிகிச்சை முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் வரை, கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றோடு வாழ்வதற்கு, நாம் இயைபடைய வேண்டிய தேவை இருக்கிறது. புதியதோர் அசாதாரண நிலைமையின் கீழ்தான், ஏறத்தாழ அடுத்த இரண்டு வருடங்களும் கடந்து செல்லப் போகின்றன என்பது, நிபுணர்கள் கூறும் ஆரூடம்.

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கம், தமிழர் தாயகத்தில் கடுமையான பாதிப்பை விளைவித்திருக்கிறது. நோய் பரவல் ஒருபுறமிருக்க, ஏலவே பொருளாதார ரீதியில் பெருஞ்சவாலைச் சந்தித்து வந்த வடக்கு-கிழக்கு, இன்னமும் கடுமையாகப் பாதிப்படைந்து கொண்டிருக்கிறது.

மத்திய வங்கியின் 2017, 2018 மதிப்பிடலின்படி, இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகக் குறைந்த கடைசி இரண்டு மாகாணங்கள் கிழக்கும் வடக்கும் ஆகும். முதலிடத்திலிருக்கும் மேல்மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியளவில் ஏறத்தாழ 10 சதவீதமே வடமாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியளவாகும்.

பாலியகொட மீன் சந்தை, கொரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்டமையானது, வடமாகாண மீனவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “மீன்களை விற்க, சந்தையில்லாமல் இருக்கிறோம்” என்று, வடமாகாண மீனவர் சங்கங்களின் தலைவர்கள், தமது கையறு நிலையை, அண்மையில் ஊடகங்களுக்குத் தௌிவுறுத்தி இருந்தார்கள்.

அரசாங்கத்தின் இன்றைய முன்னுரிமை, தேசிய பொருளாதாரத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது. சறுக்குப் பலகையில், அதள பாதாளத்தை நோக்கிச் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை, கடனெடுத்துக் காப்பாற்றும் நடவடிக்கைகளுக்குத்தான் அரசாங்கம் முன்னுரிமை காட்டுவதாகத் தெரிகிறது.

உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு பற்றி, அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கினாலும், அதிலும்கூட, முன்னுரிமை அடிப்படையில் வடக்கு-கிழக்கு பின்தங்கியே நிற்கும். ஏனென்றால், ஏலவே வடக்கு-கிழக்கின் விவாசாயம், உற்பத்தித் துறை ஒப்பீட்டளவில் மிகச் சிறியது. ஆனால், வடக்கு-கிழக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தார்மீகக் கடமை, தமிழ்த் தேசியவாதிகளாகத் தம்மை முன்னிறுத்துகின்றவர்களுக்கே முக்கியமாக இருக்கிறது.

‘தமிழ்த் தேசியம்’ என்பது, அர்த்தபுஷ்டி உள்ளது என்றால், அந்தத் தேசியத்தின் உயிர்நாடியான மக்களின் நலன்களை முன்னிறுத்துவது, தமிழ்த் தேசிய அரசியலில் முன்னுரிமை பெற்றதாக அமைய வேண்டும். மக்களின் முக்கிய உயிர்நாடிகளில் ஒன்று பொருளாதாரம். தமிழ் மக்களின் பொருளாதார மீட்சி, எழுச்சி, வளர்ச்சி பற்றிய பேச்சுகளைக் கேட்பது கூட, ‘தமிழ்த் தேசிய’ அரசியல் பரப்பில் அரிதானதாக இருக்கிறது.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், எதிர்ப்பு சார்ந்த அரசியலில் புடம்போனவர்களாக இருக்கிறார்கள். அதில் அவர்கள் விண்ணர்கள். ஆனால், சமூக, பொருளாதார, வளர்ச்சி, அபிவிருத்தி சார்ந்த பிரக்ஞை, அவர்களிடம் இல்லாதிருக்கிறது. இதனாலேயே, ‘அபிவிருத்தி அரசியல்’ என்ற சொற்றொடர், தேசிய கட்சிகளதும் அவர்களது சகாக்களதும் ஆதரவுத்தள அரசியலைக் குறிக்கும் சொல்லாக மாறிப்போனது. இது கவலைக்குரியது.

பொருளாதாரம் பற்றி மட்டுமல்ல, கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு பற்றிய கொள்கைகள், திட்டங்கள், நிகழ்ச்சிநிரல்கள் அற்றதாகவேதான், தமிழ்த் தேசிய அரசியல் நடந்துகொண்டிருக்கிறது என்பது வருத்தத்துக்கு உரியது. விடுதலை, தனிநாடு என்று பேசி, 30 வருடங்களும் யுத்தம் முடிந்த பின்னர், முடிந்த யுத்தத்தைப் பற்றிப் பேசி, 10 வருடங்களும் கடந்து சென்று விட்டன. நடந்தவற்றுக்கான நீதியைத் தேடுவதிலுள்ள அதே பிரக்ஞையும் வீரியமும், எதிர்காலத்தைக் கட்டமைப்பதிலும் காட்டப்பட வேண்டும். அந்தச் சமநிலை, தமிழ்த் தேசிய அரசியலில் பேணப்படவில்லை. மாறாக, ‘அபிவிருத்தி’ என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்களை, சந்தேகக் கண் கொண்டு பார்க்கும், நிலைதான் இங்கு காணப்படுகிறது.

இன்றிருக்கும் தமிழ் மக்களும், நாளை பொருளாதார, சமூக ரீதியில் பின்னடைந்து வலுவிழந்து போனபின்னர் யாருக்காக நீதி, யாருக்காகத் தமிழ்த் தேசியம், யாருக்காக இந்த அரசியல்?

இன்றைக்குப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. சில மாதங்கள், பாடசாலைகள் மூடப்பட்டதன் தாக்கம், இன்னும் ஒரு தசாப்தம் கழிந்தும் உணரப்படும். கல்வியைக் கொண்டாடும் சமூகத்தின் ‘தலைவர்கள்’ என்படுவோர், தேசத்தின் எதிர்காலமான மாணாக்கரின் கல்வி தடைப்பட்டதைச் சரி செய்ய, அதற்கான தீர்வுகள், மாற்று வழிகள், திட்டங்கள் பற்றிக் குறைந்த பட்சம் பேசவாவது செய்தார்களா?

இல்லை! தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தாம் தலைமையேற்றிருக்கும் தேசத்தின் எதிர்காலத்தைத் திட்டமிடாமலும் அதைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல், அந்தத் தேசத்துக்கான தலைவர்களாக, எப்படி அவர்களால் தம்மை முன்னிறுத்திக் கொள்ள முடிகிறது எனக் கேட்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.

தமிழ்த் தேசிய கட்சிகளின், நிதித் தேவை பற்றிய நடைமுறைப் பிரச்சினை புரிந்துகொள்ளக் கூடியது. அதற்காக அவர்கள், புலம்பெயர் தமிழ் மக்களின் நிதிமூலங்களிலும் ஆதரவுதரும் வௌிநாட்டு அரசாங்கங்களினதும் ஆதரவில் தங்கியிருக்கிறார்கள் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியது.

ஆனால், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன்களைத்தாண்டி, தமது அனுசரணையாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயற்படும் போது, தமிழ்த் தேசிய தலைவர்கள் எனப்படுவோர், மக்கள் பிரதிநிதியாகவோ, தேசத்தின் பிரதிநிதியாகவோ இல்லாது போய், வணிகர்கள் ஆகிவிடுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில், தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களினதும் தேசத்தினதும் நலன்களுக்கு முரணாகக் கூட, அனுசரணையாளர்களின் நலன்களை முன்னிறுத்தும் துர்ப்பாக்கிய நிலைமைகளும் இருந்திருக்கின்றன.

இந்த இடத்தில், சமரசம் செய்ய முடியாத குறைந்தபட்ச கொள்கை என்ற ஒன்றையாவது, தமிழ்த் தேசிய கட்சிகள் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது.

மறுபுறத்தில், இன்றும் தமிழ்த் தேசிய அரசியலானது வெறும் எதிர்ப்பு அரசியலாகவே தொடர்கிறது. இது ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் ஒன்றை எதிர்த்தால், அதற்கான மாற்றை முன்வைப்பதும் அந்த மாற்றைக் கட்டியெழுப்பும் வழிவகைகளைக் கண்டறிவதும், அதற்கான திட்டங்களை வகுத்தலும், நடவடிக்கைகளை முன்னெடுத்தலும் அவசியம்.

இந்த இடத்தில்தான், தமிழ்த் தேசிய அரசியலில், இவற்றைச் செய்வதற்கான ஒரு வெற்றிடம் உணரப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியலானது, நாம் எல்லாவற்றையும் எதிர்ப்போம் என்பதைத் தாண்டி, சமயோசிதமாகச் சிந்திக்கவும் தொலைநோக்குப் பார்வையோடு திட்டமிடவும் கொள்கைகளை வகுக்கவும் செயற்றிட்டங்களை உருவாக்கவும் வினைத்திறனாகச் செயற்படவும் வேண்டும். அதற்கான வழிகாட்டித் தளம், ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

பதவிகளுக்காவும் தனிநபர் குரோதங்களுக்காகவும் இன்னபிற காரணங்களாலும், தமிழ்த் தேசிய கட்சிகள் இன்று சில்லறைகளாகச் சிதறிக் கிடக்கின்றன. அதை மாற்றுவது என்பது, முன்னுரிமையான பிரச்சினையல்ல.

ஆனால், இவை அனைத்தும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துவதால், தமிழ்த் தேசிய கொள்கை அளவிலேனும், ஒரு தளத்தில் சந்தித்தல் அத்தியாவசியமானது. இது நேரடி அரசியல் முகாந்திரமாக அல்லாது, குறைந்த பட்சம், தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் பற்றிய கொள்கை, திட்டமிடல் தளமாக இருப்பது கூடப் போதுமானது.

வீம்பு பேசும் அரசியல் மேடையாக அல்லாமல், ஒன்றுபட்ட தொலைநோக்குப் பார்வையை, தமிழ்த் தேசியத்துக்காகக் கட்டமைக்கும் சிந்தனைக் கூடமாக, இது அமைய வேண்டும். அப்போதுதான், தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் பற்றிய பிரக்ஞை, தமிழ்த் தேசிய அரசியலில் கட்சி பேதங்களைத் தாண்டியதாக மாறும். அதுதான், தேசத்தின் நலனுக்குச் சிறந்தது.

தமிழ்த் தேசிய தலைமைகளும் கட்சி விசுவாசிகளும், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் உள்ளவரைதான் தமிழ்த் தேசியமும் அதன் ஊடான அரசியலும் இருக்கும். தமிழ் மக்களின் எதிர்காலத்தை மறந்துவிட்டு, வாய்ச்சவடால் அரசியல் செய்வது, எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலை, ‘யாருமில்லாத கடையில், யாருக்கு ரீ ஆத்துற’ என்ற நிலைமையில், கொண்டுபோய் விட்டுவிடும் கவனம்!Post a Comment

Protected by WP Anti Spam