குமாரபாளையத்தில் தனியார் கம்பெனி ஊழியர்களை தாக்கி ரூ. 8¼ லட்சம் கொள்ளை!!
குமாரபாளையத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர்கள் 2 பேர் இன்று அங்குள்ள ஒரு வங்கிக்கு சென்றனர். அவர்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வங்கியில் இருந்து ரூ. 8 லட்சத்து 36 ஆயிரம் பணம் எடுத்தனர்.
பின்னர் அவர்கள் கம்பெனிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அரவங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழி மறித்து சரமாரியாக தாக்கியது. பின்னர் அவர்கள் வைத்திருந்த ரூ. 8 லட்சத்து 36 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது.
இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க நாமக்கல் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.