சிவாஜி கணேசனின் சிலையை முதல்வர் கருணாநிதி திறந்தார்!
தமிழ்த் திரையுலகின் ஈடிணையற்ற நடிகராகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை தமிழக முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்! சென்னை கடற்கரையில் காமராஜர் சாலையில் மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகத்தின் சிலையை திறந்து வைக்கும் விழா சிலைக்கு அருகே கடற்கரை சாலையில் நடைபெற்றது.
மாலை சரியாக 6.30 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி பொத்தானை அழுத்த சிவாஜி சிலையை சுற்றியிருந்த திரை அகன்றது. 8 அடி உயரத்தில் வடிக்கப்பட்ட சிவாஜி கணேசனின் சிலை பொன் நிறத்தால் மின்னியது. அப்போது சிவாஜி வாழ்க என்று பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த ரசிகர்கள் முழக்கமிட்டனர்.
சிவாஜி கணேசன் மீது முதலமைச்சர் கருணாநிதி எழுதிய கவிதையை சீர்காழி சிவசிதம்பரம் பாடினார்.
அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ஏ.வி.எம். சரவணன், சிவாஜி மகன் பிரபு, வைரமுத்து, விஜயகாந்த், பாக்யராஜ், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் சிவாஜியின் நடிப்பாற்றலை புகழ்ந்து பேசினர்.
இறுதியாக பேசிய முதலமைச்சர் கருணாநிதி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிவாஜி கணேசனின் மனைவி கமலா, மற்றும் குடும்பத்தினரும், திரையுலக பிரமுகர்களும், சிவாஜி ரசிகர்களும் பெருமளவிற்கு கலந்து கொண்டனர்.